விருதுநகரில் எந்த தவறும் நடக்கவில்லை.. இரவெல்லாம் யோசித்து விட்டு அவதூறு பரப்புவதா? செல்வப்பெருந்தகை கண்டனம்!
Jun 07, 2024, 03:06 PM IST
Selvaperunthagai : விஜயகாந்த் மீது மரியாதை வைத்துள்ளோம், எங்கள் மீதான குற்றச்சாட்டை பிரேமலதா விஜயகாந்த் பார்த்து பேசியிருக்கலாம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
விருதுநகரில் எந்த தவறும் நடக்கவில்லை, இரவெல்லாம் யோசித்து விட்டு அவதூறு பரப்புவதா? தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி
சென்னை சத்தியமூர்த்திபவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் 25 க்கும் மேற்பட்ட இடங்களில் குறைவான வாக்கு வித்யாசத்தில் இந்தியா கூட்டணி வெற்றியை இழந்துள்ளது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றுள்ளார். வாக்கு மையத்தில் 24 மணி நேரமும் சிசிடிவி வைத்து கண்காணிக்கப்பட்டுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த் காங்கிரஸ் மீது அவதூறாக பரப்புவதை தவிர்க்க வேண்டும்
அங்கு எந்த தவறும் நடக்கவில்லை. சந்தேகம் இருந்திருந்தால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு இருக்கலாம். ஆனால், இரவெல்லாம் யோசித்து விட்டு சென்னைக்கு வந்தவுடன், தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காங்கிரஸ் மீது அவதூறாக பரப்புவதை தவிர்க்க வேண்டும்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி, அ.தி.முக, பா.ஜ.க சேர்ந்திருந்தால் பல தொகுதிகளை பெற்றிருப்போம் என கூறியிருக்கிறார். பா.ஜ.க உடன் சேர்ந்திருந்தால் இந்த வாக்குகளை கூட பெற்றிருக்க முடியாது. எப்படி இந்த ஆசை அவருக்கு வந்தது என தெரியவில்லை. அ.தி.மு.க தலைவர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து அவதூறு பரப்பிய பாஜக உடன் இன்னும் உறவு வைக்க விரும்புவதன் நோக்கம் என்ன?
கொங்கு மண்டலத்தில் சில இடங்களில் அ.தி.மு.கவை பின்னுக்கு தள்ளி பா.ஜ க எப்படி வாக்கு வாக்கியது என இப்போது தான் தெரிகிறது. எந்த கட்சி ஆணவத்துடன் இருந்தாலும் அதை மக்கள் ஒதுக்கி விடுவார்கள் என்பதற்கு சாட்சியாக இந்த தேர்தலில் மக்கள் பா.ஜ.கவிற்கு பாடம் புகட்டியுள்ளனர்.
மோடியின் வெறுப்பு பிரச்சாரத்தின் முடிவு தான்
உத்திர பிரதேசத்தில் மோடிக்கு எவ்வளவு பின்னடைவு என பா.ஜ.க சிந்திக்க வேண்டும். மோடியின் வெறுப்பு பிரச்சாரத்தின் முடிவு தான் மக்கள் தேர்தல் முடிவில் தெரிவித்து இருக்கிறார்கள்.
வருகிற 11ஆம் தேதி தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. மேலும், நாளை அகில இந்திய காரிய கமிட்டி கூட்டத்தில் நான் கலந்து கொள்கிறேன். இன்னும் ஓரிரு வாரங்களில் தேசத்தை பாதுகாக்கும் முயற்சியில் இந்திய கூட்டணி மேற்கொள்வார்கள்”என தெரிவித்தார்.
முன்னதாக, “விருதுநகர் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்று வென்றுள்ளார். இவரை தொடர்ந்து தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று வெறும் 4,379 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட ராதிகாவோ 1,66,271 வாக்குகளை பெற்று 3ஆவது இடத்தை பெற்றார்.
இந்த நிலையில் விருதுநகர் லோக்சபா தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையின் போது விஜய பிரபாகரனுக்கு எதிராக சூழ்ச்சி ஏற்பட்டுள்ளது என பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா அளித்த பேட்டி அளித்த போது, விஜய பிரபாகரன் தோற்கவில்லை. திட்டமிட்டு சூழ்ச்சியால் விஜய பிரபாகரன் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார். உணவு இடைவேளை முடிந்ததும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. 13 ஆவது சுற்று வரை விஜய பிரபாகரன் முன்னிலையில் இருந்தார். அந்த சுற்றில்தான் முறைகேடு நடந்தது என குற்றம் சாட்டி இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்