Kallakurichi hooch tragedy: அதிமுக எம்.எல்.ஏவுக்கு தெரியாமல் சாராய விற்பனை நடந்து இருக்குமா? சந்தேகம் கிளப்பும் தினகரன்!
Jun 23, 2024, 01:23 PM IST
Kallakurichi hooch tragedy: முதல்வருக்கு மனதில் அச்சம் இருப்பதால்தான் கள்ளக்குறிச்சிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை. நிவாரணம் அறிவித்தால் மட்டும் போதுமா, மனசாட்சி முதலமைச்சரை நிச்சயம் அச்சுறுத்தும்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்த பின்னர் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இதுவரை 57 பேர் இறந்து உள்ளதாக கூறுகின்றனர். இன்னும் 20 பேருக்கு உடல்நிலை மிகவும் பாதித்து உள்ளது. 160 பேர் வரை இன்னும் சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சையில் இருக்கும் அனைவரும் உடல்நலம் குணம் அடைய பிரார்த்திக்கிறேன் என கூறினார்.
காவல்நிலையம் பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை
தொடர்ந்து பேசிய அவர், ஆட்சியாளர்களில் தோல்வி இது. இதற்கு முழு காரணம் ஆளுங்கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், பொறுப்பு அமைச்சர்கள்தான். காவல் நிலையத்தின் பின்புறமே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வந்து உள்ளது.
இந்த சம்பவம் உளவுத்துறைக்கு தெரிந்ததா அல்லது முதலமைச்சர் தெரிந்தும், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டாரா? முதலமைச்சர் பலமுறை பொதுவெளியில் புலம்புவதை பார்த்து உள்ளோம். கட்சிக்காரர்கள் நடவடிக்கை பயத்தை தருவதாக அவரே சொல்லி உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பேட்டியை பார்க்கும்ப்போது, ஆளும் கட்சியினர் தலையீடு இருப்பதை அறிய முடிகின்றது.
கள்ளச்சாராய சாவுகள் நடக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும்.
57 உயிர்கள் பறிபோனதற்கு திமுகதான் காரணம், இதற்கு பொறுப்பேறு காரணம் சொல்லாமல், இனி கள்ளச்சாராய சாவுகள் நடக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும்.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் இந்த சம்பவத்திற்கு பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிகார துஷ்பரயோகம், அடவாடிதனங்கள்தான் கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணம். காவல்துறையினரை செயல்படவிடாமல் தடுத்ததாக மக்கள் என்னிடம் சொல்கின்றனர்.
விட்டு விலகும் அளவுக்கு பெருந்தன்மை ஆனவர்கள் கிடையாது
நாம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டால் கூட, ஆட்சி முடிந்து மக்கள் தூக்கி எறியும் வரை இதைவிட்டு விலகும் அளவுக்கு பெருந்தன்மை ஆனவர்கள் கிடையாது. இன்னும் திமுக ஆட்சி இருக்கும் நாட்களில், அவர்கள் கட்சிக்காரர்களை கட்டுப்படுத்தி மாவட்ட நிர்வாகம் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் கருத்து.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக நடந்த விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் அடிப்படையில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கே அரசு பதவி உயர்வு அளித்து உள்ளது.
மக்கள் உயிரோடு விளையாட வேண்டாம்
இன்னும் மூன்று மாதம் கழித்து மீண்டும் கள்ளச்சாராய விற்பனை தொடர ஆரம்பிக்கும். பணம் கொடுத்து மக்களை விலைக்கு வாங்கிவிடலாம் என்ற மனநிலையை விட்டுவிட்டு மக்கள் உயிரோடு விளையாடாமல் அரசு முறையாக செயல்பட வேண்டும்.
உளவுத்துறையின் தோல்வி இது
மக்கள் சொல்லும் குற்றச்சாட்டுக்களைத்தான் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி கூறி உள்ளார். சிபிஐ விசாரணை நடந்தால், உண்மை நிலவரம் தெரியும், மாநில காவல்துறை மற்றும் உளவுத்துறையின் தோல்வி இது.
முதல்வருக்கு மனதில் அச்சம் இருப்பதால்தான் கள்ளக்குறிச்சிக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கவில்லை. நிவாரணம் அறிவித்தால் மட்டும் போதுமா, மனசாட்சி முதலமைச்சரை நிச்சயம் அச்சுறுத்தும். முதலமைச்சரின் நடவடிக்கைகளை பொறுத்து அமமுக சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து திட்டமிடுவோம். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏவே அதிமுகவை சேர்ந்தவராகத்தான் உள்ளார். அவர் இது குறித்து என்ன நடவடிக்கைகள் எடுத்தார் என்பது தெரியவில்லையே. அவருக்கு தெரியாமல் கள்ளச்சாராய விற்பனை நடந்து இருக்குமா என்று தெரியவில்லை என கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-
Google News: https://bit.ly/3onGqm9