Tiruppur Kumaran: உயிர் போகும் நேரத்திலும் தேசிய கொடியை கீழே விடாமல் பிடித்தவர்..கொடி காத்த குமரன் பிறந்தநாள் இன்று
Oct 04, 2024, 06:00 AM IST
Tiruppur Kumaran:உயிர் போகும் நேரத்திலும் கையில் பிடித்த தேசிய கொடியை கீழே விடாமல் இருந்த திருப்பூர் குமரனின் தியாகமும்,சுதந்திர போராட்டத்தில் அவரது ஈடுபாடும் விடுதலை போராட்ட வரலாற்றில் அழியாத முத்திரையாக இருந்துள்ளது.கொடி காத்த குமரன் என்று அழைக்கப்படும் சுதந்திர போராட்ட தியாகி பிறந்தநாள் இன்று.
இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற இந்தியப் புரட்சியாளரும், விடுதலைப் போராட்ட வீரருமாக, தமிழகத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரராக இருப்பவர் கொடி காத்த குமரன்.தமிழக அரசு திருப்பூர் குமரன் தியாகத்தைப் போற்றும் வகையில் திருப்பூரில் திருப்பூர் குமரன் நினைவகம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு தற்காலிக நூல் நிலையம் உள்ளது. படிப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதேபோல் இவரது நினைவாக திருப்பூரில் ஒரு சிலை நிறுவப்பட்டுள்ளது.
சென்னிமலையில் மணிமண்டபம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக சமுதாய அமைப்புகள் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கான இந்தியாவின் போராட்டம் எண்ணற்ற தியாகங்கள் மற்றும் துணிச்சலான செயல்களால் இன்றளவும் நினைவுக்கூறப்படுகிறது. அத்தகையை பங்களிப்புகளை அளித்தவர்களில் ஒருவரான திருப்பூர் குமரன் அக்டோபர் 4ஆம் தேதி 1904 ஆம் ஆண்டு தற்போதைய ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நெசவாளர் குடும்பத்தில் மகனாக பிறந்தார்.
நெசவுத்தொழில்
இவரது இயற்பெயர் குமாரசாமி, குடும்ப சூழல் காரணமாக தனது படிப்பை ஆரம்பக் கல்வியுடன் நிறுத்திக் கொண்ட குமரன் தனது குடும்பத் தொழிலான கைத்தறி நெசவுத் தொழிலை கற்றார். 1923ஆம் ஆண்டில் ராமாயி என்பவரை திருமணம் செய்து கொண்ட குமரன், தனது கைத்தறி நெசவுத் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் திருப்பூருக்கு இடம்பெயர்ந்தார். அங்கு உள்ள நூற்பாலையில் ஒன்றில் எடைபோடும் வேலைக்கு சேர்ந்த அவரை மகாத்மா காந்தியால் முன்வைக்கப்பட்ட அகிம்சை கருத்துகள் ஈர்த்தது.
ஜாலியன் வாலாபாக் படுகொலையும் குமரனின் எழுச்சியும்
1919 ஆம் ஆண்டு அமிர்தசரஸில் நிராயுதபாணியான மக்கள் மீது பிரிட்டிஷ் ராணுவம் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் குமரனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்தியது.
கொடூரமான ஜாலியன் வாலாபாக் படுகொலை குமரனை ஆழமாக பாதித்தது. அவரது மனதில் பிரிட்டிஷ் அடக்குமுறைக்கு எதிராக போராட தீயை மூட்டியது.
விடுதலை இயக்கத்தில் தீவிர பங்களிப்பு
மகாத்மா காந்தி அறிவித்த ஒத்துழையாமை இயக்கத்தில் தன்னை தீவிரமாக அர்பணித்துக் கொண்ட குமரன் பிரிட்டிஷ் அடக்கு முறைக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள், அணிவகுப்புகள் மற்றும் வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்து வழிநடத்தினார்.
திருப்பூர் குமரனின் தியாகம்
ஜனவரி 11ஆம் தேதி 1932 ஆம் ஆண்டு திருப்பூர் குமரன் பிரிட்டிஷ் காலனித்துவ அரசுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றபோது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது குமரன், தான் ஏந்தியிருந்த தேசியக் கொடியை இறக்க மறுத்து பலத்த காயம் அடைந்தார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்தபோதிலும், அவர் சரியும் வரை தேசியக் கொடியை உயர்த்திப் பிடித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 1932 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி தனது 27வது வயதில் உயிரிழந்தார். அவரது உடலுக்கு அவரது தம்பி ஆறுமுகம் முதலில் தீவைத்த நிலையில் திருப்பூர் குமரன் தேசத்தின் சொத்து எனக்கூறி ராஜகோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை உள்ளிட்ட பலரும் அவரது இறுதிச்சடங்கில் கொள்ளி வைத்தனர்.
தனது உயிர் போகும் நேரத்திலும் கையில் பிடித்த கொடியை கீழே விடாமல் இருந்த திருப்பூர் குமரனின் தியாகமும், சுதந்திரப் போராட்டத்தில் அவரது ஈடுபாடும் விடுதலை போராட்ட வரலாற்றில் அழியாத முத்திரையை பதித்துள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளின் முக்கியமானவராக இருந்த கொடி காத்த குமரனுக்கு 120வது பிறந்தநாள் இன்று.
டாபிக்ஸ்