கனமழை எதிரொலி.. ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது - அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவு!
Oct 15, 2024, 10:46 AM IST
Online Class : கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டால், மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தக் கூடாது என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் (Online Classes) நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என தெரிவித்துள்ளார்.
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
முன்னதாக வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கனமழை எச்சரிக்கை உள்ள கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்ட பள்ளிகளுக்கு அரை நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்த மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இன்று முதல் அக்.17 வரை வீட்டில் இருந்தே பணி செய்ய அறிவுறுத்த வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.
இணையவழி வகுப்புகள் நடத்த வேண்டாம்
இந்நிலையில் தான் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் (Online Classes) நடத்த வேண்டாம் என அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் உத்தரவிட்டுள்ளார். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் “கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளையும் (Online Classes) ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம். ஆகையால் கனமழை முடியும் வரை ஆன்லைன் வகுப்புகளைத் தவிர்க்க வேண்டும் என அனைத்துப் பள்ளி நிர்வாகங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.”என பதிவிட்டுள்ளார்.
உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மாநகராட்சியின் 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிலும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044 2561 9204, 044 25619206 மற்றும் 044 2561 9207 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், மாநகராட்சியின் chennaicorporation.gov.in என்ற இணையதளம், நம்ம சென்னை செயலி, Greater Chennai Corporation Facebook. @chennaicorp என்ற Instagram-லும்,@chennaicorp என்ற Thread-லும், @chennaicorp என்ற X App ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.