கனமழை எதிரொலி.. கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் மக்கள்.. தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் உயர்வு!
மழை காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்த சந்தையில் இன்று தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆகிறது.
கோயம்பேடு சந்தைக்கு கா்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்ரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் காய்கறிகள், பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில் வங்ககடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்தம் காரணமாக தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதே போல நாளை தமிழ்நாட்டிற்கு சிகப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுபாடு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக காய்கறிகள் வாங்குவதற்கு கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று மக்கள் குவிந்தனர். இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்தது.
தக்காளி வரத்து குறைவு
கோயம்பேடு சந்தையில் தக்காளி வரத்து குறைந்து அதன் விலை கடந்த வாரம் கிலோ ரூ.60 வரை உயர்ந்தது. வெளி சந்தைகளில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.90 வரை உயர்ந்தது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் நேற்று கிலோ ரூ.42 ஆக குறைந்தது. சில்லறை சந்தைகளில் கிலோ ரூ.70 வரை விற்கப்பட்டது.
கோயம்பேடு சந்தையில் நேற்று மற்ற காய்கறிகளான பீன்ஸ் ரூ.100,அவரைக்காய் ரூ.80, முருங்கைக்காய் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.46, கேரட், சம்பார் வெங்காயம் தலா ரூ.40, பச்சை மிளகாய், நூக்கல் தலா ரூ.35, உருளைக்கிழங்கு ரூ.30, வெண்டைக்காய், பாகற்காய் தலா ரூ.20, கத்தரிக்காய், புடலங்காய் தலா ரூ.15, முட்டைகோஸ், முள்ளங்கி, பீட்ரூட் தலா ரூ.10 என விற்கப்பட்டது.
ஒரே நாளில் 40 ரூபாய் உயர்வு
இந்நிலையில் மழை காரணமாகவும், வரத்து குறைவு காரணமாகவும் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு மொத்த சந்தையில் இன்று தக்காளி விலை ஒரே நாளில் 40 ரூபாய் உயர்ந்து விற்பனை ஆகிறது. நேற்று 50 முதல் 80 வரையில் விற்ற தக்காளி இன்று 80 முதல் 120 ரூக்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெங்காயம் 40 முதல் 60 ரூபாய்க்கும், கேரட் 60 முதல் 70க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல உருளை கிழங்கு நேற்றைய விலையை விட 14 ரூபாய் குறைந்து 30 முதல் 50 வரையிலும், இன்று 30 முதல் 36 வரையில் விற்பனை செய்யப்படுகிறது.
மிக கனமழை எச்சரிக்கை
இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் திருவள்ளூர், இராணிப்பேட்டை சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உதவி எண்கள் அறிவிப்பு
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மழை தொடர்பான புகார்கள் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பாக மாநகராட்சியின் 150 இணைப்புகளுடன் கூடிய 1913 என்ற உதவி எண்ணிலும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044 2561 9204, 044 25619206 மற்றும் 044 2561 9207 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
மேலும், மாநகராட்சியின் chennaicorporation.gov.in என்ற இணையதளம், நம்ம சென்னை செயலி, Greater Chennai Corporation Facebook. @chennaicorp என்ற Instagram-லும்,@chennaicorp என்ற Thread-லும், @chennaicorp என்ற X App ஆகிய சமூக வலைதளங்களின் வாயிலாகவும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
டாபிக்ஸ்