ஸ்கூல் லீவ்.. வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை.. இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
School Holiday : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, 14ஆம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, வட தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில் விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 15, 16 ஆம் தேதி வாக்கில், வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கனமழை எச்சரிக்கை
வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவாரூர் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.