Evening Top 10 News: ரயில்கள் ரத்து முதல் பிரபல யூடியூபருக்கு அபராதம் வரை..மாலை டாப் 10 செய்திகள் இதோ..!
Aug 03, 2024, 06:24 PM IST
Evening Top 10 News: தமிழ்நாட்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி உடனடியாக அறிய இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.
Evening Top 10 News: உள்ளூர் முதல் உலகம் வரை, தமிழகம் முதல் தேசம் வரையிலான அனைத்துவிதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
ரயில்கள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக மதுரை மற்றும் திருவனந்தபுரம் ரயில்வே கோட்டங்களில் ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுரை – இராமநாதபுரம் இடையே பகல் 12.30 மணிக்கும் மற்றும் இராமநாதபுரம் – மதுரை இடையே காலை 11 மணிக்கும் இயக்கப்படும் பாசஞ்சர் ரயிலானது வருகிற ஆகஸ்ட் 5,6,8,9,11 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மங்களூரு – கன்னியாகுமரி இடையே அதிகாலை 5.05 மணிக்கு இயக்கப்படும் பரசுராம் விரைவு ரயில் ஆகஸ்ட் 5,8 ஆகிய தேதிகளில் திருவனந்தபுரம் வரை மட்டுமே இயக்கப்படும். கன்னியாகுமரி – மங்களூரு சென்ட்ரல் இடையே அதிகாலை 3.45 மணிக்கு இயக்கப்படும் பரசுராம் விரைவு ரயில் வருகிற ஆகஸ்ட் 6,9 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரியில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக திருவனந்தபுரத்தில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யானைகளின் எண்ணிக்கை 3,063ஆக உயர்வு
தமிழக வனப்பகுதிகளில் உள்ள யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,761ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை தற்போது, 3,063ஆக உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. யானைகள் பாதுகாப்பு இயக்கத்தின் மூலமாக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையால் யானைகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ரூ.3.5 கோடி டெண்டர் ரத்து
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஊராட்சி ஒன்றிய தலைவரும், அதிமுக நிர்வாகியுமான கண்ணன், முறைகேடாக ஒதுக்கிய ரூ.3.5 கோடி டெண்டர் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடு உத்தரவு பிறப்பித்துள்ளார். நத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.3.5 கோடி வளர்ச்சிப் பணிகளுக்காக, ஊராட்சி ஒன்றிய மன்றக் கூட்டத்தை கூட்டாமல் தன்னிச்சையாக டெண்டரை ஒதுக்கியதாக கண்ணன் மீது புகார் எழுந்தது. இதற்கு உடந்தையாக செயல்பட்ட புகாரில் வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அதிமுகவில் ஜெயலலிதா பேரவை மாநில இணைச் செயலாளராக உள்ளார் கண்ணன். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மைத்துனர் ஆவார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் -நத்தம் சாலையில் நல்லாம்பட்டி அருகே இந்த விபத்து நிகழ்ந்ததது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
25 மாநகராட்சி அதிகாரிகள் இடமாற்றம்
மதுரை மாநகராட்சி துணை ஆணையர் உள்பட மாநகராட்சிகளில் பணிபுரியும் 25 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆணையர்கள், துணை இயக்குனர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றத்தில் மதுரை மாநகராட்சி துணை ஆணையாளர் கே.சரவணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
'பாஜக ஆட்சியே தேசிய பேரிடர்தான்' - கனிமொழி
எந்த பாதிப்பையும் தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசு தயாராக இல்லையென திமுக எம்.பி கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக ஆட்சியே தேசிய பேரிடராக இருப்பதாக கிண்டல் செய்தார். தமிழ்நாட்டில் வெள்ளம் வந்தபோது, முன் கூட்டியே அறிவித்ததாக மத்திய அரசு உண்மைக்கு புறம்பாக கூறியதாகவும், அதேபோல தற்போது கேரளாவிற்கு எச்சரிக்கை விடுத்ததாக கூறுவதாகவும் தெரிவித்தார்.
15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கோவை, தேனி, திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய 15 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணிவரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வில்வித்தை காலியிறுதிப் போட்டியில் தீபிகா தோல்வி
பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி காலியிறுதிச் சுற்றில் தோல்வியை தழுவினார். தென் கொரியாவின் நாம் சு ஹயோனிடம் 6-4 என்ற புள்ளிக் கணக்கில் தீபிகா தோல்வி அடைந்துள்ளார்.
206 பேரை காணவில்லை
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது என்றும், எனினும் இன்னும் 206 பேரை காணவில்லை என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் யூடியூபருக்கு அபராதம்
ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக யூடியூபர் இர்பானுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.1,000 அபராதம் விதித்துள்ளனர். அத்துடன், சரியான நம்பர் பிளேட் இல்லாததற்கும் ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். அண்மையில், யூடியூப் பேட்டிக்காக நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியதாக அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது, நெட்டிசன்கள் இர்பான் வீடியோவை பகிர்ந்து, அவருக்கு மட்டும் இச்சட்டம் பொருந்தாதா? என கேள்வி எழுப்பியிருந்தனர்.
டாபிக்ஸ்