Electricity Bill Hike: தமிழ்நாட்டில் மின்சார கட்டணத்தை உயர்த்தியது திமுக அரசு! யூனிட்டுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?
Jul 16, 2024, 03:56 PM IST
Electricity bill Hike: தற்போதைய நிலவரப்படி, ரூ.1.60 லட்சம் கோடி கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் மின்வாரியம் உள்ளது. இதன் காரணமாக, கடந்த 2022-ல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.
தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு கணக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்து உள்ளது.
ரூ.1.60 லட்சம் கோடி கடன்
தமிழகத்தில் 3 கோடிக்கும் அதிகமான மின்இணைப்புகள் உள்ளன. இவற்றுக்கான மின்சாரத்தை கையாளும் மின்வாரியத்தின் இழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தற்போதைய நிலவரப்படி, ரூ.1.60 லட்சம் கோடி கடனுடன் கடும் நிதி நெருக்கடியில் மின்வாரியம் உள்ளது. இதன் காரணமாக, கடந்த 2022-ல் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.
மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
மேலும், 2026-27 ஆண்டு வரை ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி முதல் மின் கட்டணத்தை உயர்த்தவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியது.
அதன்படி, கடந்த 2023 ஜூலையில் 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதில், வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றது. வணிக வளாகம், தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட்டுக்கு 13 காசு முதல் 21 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும் 4.83 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, வீட்டு பயன்பாடு, கைத்தறி மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
யூனிட் வாரியாக மின்கட்டண உயர்வு விவரம்
0 முதல் 400 யூனிட்டுகளுக்கு 4 ரூபாய் 60 காசுகளாக இருந்த கட்டணம் 4 ரூபாய் 80 காசுகளாக அதிகரிப்பு
401 முதல் 500 யூனிட்டுகளுக்கு 6 ரூபாய் 15 காசுகளாக இருந்த மின் கட்டணம் 30 காசுகள் உயர்ந்து 6 ரூபாய் 45 காசுகளாக அதிகரிப்பு.
600 முதல் 800 வரை ஒரு யூனிட்டுக்கு 9 ரூபாய் 20 காசுகளாக இருந்த மின் கட்டணம் 45 காசுகள் அதிகரித்து 9 ரூபாய் 65 காசுகளாக அதிகரிப்பு.
801 முதல் 1000 வரை ஒரு யூனிட்டுக்கு 10 ரூபாய் 20 காசுகளாக ஆக இருந்த மின் கட்டணம் 10 ரூபாய் 70 காசுகளாக அதிகரிப்பு
1000 யூனிட்டுகளுக்கு மேல் 11 ரூபாய் 25 காசுகளாக ஆக இருந்த மின் கட்டணம் 11 ரூபாய் 80 காசுகளாக அதிகரிப்பு.
அடுக்குமாடி குடியிருப்புகள்
அடுக்குமாடி குடியிருப்புகளில் 8 ரூபாய் 15 காசுகளாக இருந்த மின் கட்டணம் 8 ரூபாய் 55 காசுகளாக அதிகரிப்பு.
கிராம பஞ்சாயத்துகளில் உள்ள குடிசைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 9.35ல் இருந்து 9.80 ஆகவும், ரயில்வே, ராணுவம் உள்ளிட்ட காலணிகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 8.15ல் இருந்து 8.55 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.
பல்வேறு வீடுகள் உள்ள குடியிருப்புகள், அரசு தெருவிளக்குகள், குடிநீர் மற்றும் கழிவு நீர் சேவைகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு ஒரு யூனிட்டுக்கு 8.15ல் இருந்து 8.55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனம்மற்றூம் வழிப்பாட்டு தளங்கள்
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 8.70ல் இருந்து 9.10 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
வழிபாட்டுதலங்களுக்கு 0-120 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 5.90ல் இருந்து 6.20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 120 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 7.15ல் இருந்து 7.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு 500 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு 4.60ல் இருந்து 4.80. ஆகவும், 500 யூனிட்டுக்கு மேல் ஒரு யூனிட்டுக்கு 6.65 ல் இருந்து 6.95; ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்