அவதூறு வழக்கில் தனித்தனியே 6 மாதம் சிறை..41 பக்கம் தீர்ப்பு..எச். ராஜா பதில் மனு - தண்டனை நிறுத்தி வைப்பு
Dec 02, 2024, 01:14 PM IST
பெரியார் சிலையை உடைப்பேன் என பேசியது தொடர்பாகவும், கனிமொழி குறித்து அவதூறாக பேசிய வழக்குகளில் எச். ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இரண்டு வழக்குகளில் தனித்தனியே சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது தண்டனை நிறுத்தி வைப்பு.
தமிழ்நாடு பாஜகவின் ஒருங்கிணைப்பு தலைவராக எச். ராஜா இருந்து வருகிறார். இதையடுத்து இவர் மீது தொடரப்பட்ட இரண்டு அவதூறு வழக்குகளில் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து வழக்கில் மேல்முறையீட்டுக்கு எச். ராஜா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
41 பக்கம் தீர்ப்பு
எச். ராஜா மீதான வழக்கு எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபத ஜெயவேல் இன்று அளித்த 41 பக்க தீர்ப்பில், "எச். ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் காவல்துறை தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரு பதிவுகளும் ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது. அந்த பதிவுகளை அவர் பகிரவில்லை என்பதற்கு எந்த ஆதாரங்களும் குற்றவாளி தரப்பில் இருந்து தாக்கல் செய்யவில்லை. எனவே எச்.ராஜா குற்றவாளி என தீர்ப்பு அளிக்கிறேன்" என தெரிவித்தார்.
தனிதனியாக ஆறு மாதம் சிறை
இந்த இரு வழக்குகளில் எச்.ராஜாவுக்கு தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால் எச். ராஜா உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
மேல்முறையீடு மனு தாக்கல்
இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய உள்ளதாக எச். ராஜா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். சிறை தண்டனை விதிக்கப்பட்டபோதிலும் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக தீர்ப்பு வந்த காரணத்தால் எச். ராஜா சிறை செல்வது தவிர்க்கப்பட்டுள்ளது.
இதையடுத்து எச். ராஜா மீது தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் திமுக சார்பிலும், தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், எச். ராஜா மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை ரத்து செய்ய கோரி எச். ராஜா தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கை மூன்று மாதத்துக்குள் முடிக்கச் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இதைத்ததொடர்ந்து வழக்கின் தீர்ப்பி இன்று வெளியான நிலையில், எச். ராஜாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டபோதிலும், தீர்ப்பை எதிர்த்து உடனடியாக அவர் மேல்முறையீடு செய்துள்ளார்.
முன்னதாக, எச். ராஜா மீது பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தான் அவர் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.