வீட்டில் பட்டாசு தயாரித்த போது விபரீதம் முதல் எச்சரிக்கை விடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி வரை - டாப் 10 நியூஸ்
Oct 08, 2024, 07:40 PM IST
வீட்டில் பட்டாசு தயாரித்த போது விபரீதம், பெண்களின் போட்டோக்களை வைத்து மோசடி, அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை உள்பட டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
தமிழகம் முழுவதும் நிகழ்ந்த அரசியல் முக்கிய நிகழ்வுகள், க்ரைம் செய்திகள் உள்பட அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் சுருக்கமாக தெரிந்துகொள்ளலாம்.
வீட்டில் பட்டாசு தயாரிப்பு - நடந்த துயரம்
திருப்பூர் பாண்டியன் நகரில் கோயில் விழாவுக்கு பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடிவிபத்தில், 9 மாத குழந்தை உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். பட்டாசு தயாரிப்பு உரிமத்தை ஈரோட்டில் வைத்துள்ள சரவணக்குமார் என்பவர், உறவினரான கார்த்திக்கின் வீட்டில் வைத்து சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்துள்ளார். கலெக்டர், எஸ்.பி. சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பெண்களின் போட்டோக்களை வைத்து மோசடி
பெண்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி போலி சமூகவலைத்தள கணக்குகளை உருவாக்கி 2 ஆண்டுகளாக ஆண்களிடம் பண மோசடி செய்து வந்த மரக்காணத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கைது செய்யப்பட்டார். Facebook Messengerல் தொடர்புகொள்ளும் அவர், சந்தேகம் ஏற்படாமல் இருக்க Voice Changer என்ற செயலியைப் பயன்படுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னுடைய புகைப்படம் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகச் சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரில் கிருஷ்ணன் (26) சிக்கியுள்ளார்.
மெரினா நீச்சல் குளம் திறப்பு
சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தை, மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
அக்டோபர் 15-ல் மருத்துவ முகாம்
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வருகிற அக்டோபர் 15-ம் தேதி, தமிழகத்தில் 1000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.சென்னையில் மட்டும் 100 இடங்களிலும், மற்ற 37 வருவாய் மாவட்டங்களில் 900 இடங்களிலும் இந்த மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு
தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் இன்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான மண்டலங்களில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவான ஆய்வினை மேற்கொண்டார்.
சாலை விபத்தில் மின்வாரிய உதவிப் பொறியாளர் உயிரிழந்த சோகம்
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த மின்வாரிய உதவிப் பொறியாளர் தேவிகா மீது ட்ராக்டர் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவைக்கு சிறப்பு ரயில்
தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாராந்திர சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. டிசம்பர் 1ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்தும் ஞாயிறுகளில் கோவையில் இருந்தும் இந்த ரயில் புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
பள்ளி மாணவர்களின் காலாண்டு தேர்வு மதிப்பெண்களை எமிஸ் வலைதளத்தில் அக்.15-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மின்வாரிய அதிகாரிகளுக்கு செந்தில்பாலாஜி எச்சரிக்கை
மழைக் காலங்களில் மின்வாரிய அலுவலர்கள் எக்காரணம் கொண்டும் அலைபேசியை ஆஃப் செய்து வைக்கக் கூடாது என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மின்வாரிய அலுவலர்களுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். அறிவுறுத்தலை மீறுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
டாபிக்ஸ்