Senthil Balaji: செந்தில் பாலாஜி வழக்கு.. தமிழகத்தில் எத்தனை அமைச்சர்கள் மீது வழக்கு இருக்குன்னு பாருங்க: உச்ச நீதிமன்றம்
Senthil Balaji: செந்தில் பாலாஜி வழக்கு.. தமிழகத்தில் எத்தனை அமைச்சர்கள் மீது வழக்கு இருக்குன்னு பாருங்க: உச்ச நீதிமன்றம்
Senthil Balaji: செந்தில் பாலாஜி வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிபதியை நியமிக்கமுடியுமா என ஆராய்ந்து பதிலளிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களில் எத்தனை பேர் மீது என்னென்ன வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்தும் விவரங்கள் கூற வலியுறுத்தியுள்ளது.
2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 5 கோட்டங்களில் 1630 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட நிலையில், நடத்துநர் பணிக்கு ரூ.1.75 லட்சம் தொடங்கி உதவிப் பொறியாளர் பணிக்கு ரூ.12 லட்சம் வரை செந்தில் பாலாஜி கையூட்டு வாங்கிக் குவித்ததாகத் தமிழகக் காவல்துறை வழக்குத் தொடர்ந்து இருந்தது. இதில் செந்தில் பாலாஜி மீது மூன்று வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதுதொடர்பான வழக்கின் விசாரணை சென்னையில் உள்ள எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
அதற்கு மறுபுறமாக, செந்தில் பாலாஜிடம் பணம்தந்து ஏமாந்தவர்கள் சார்பில், டெல்லி உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அப்போது அந்த மனுக்களில் செந்தில் பாலாஜி மீதான விசாரணையை ஓராண்டுக்குள் நடத்தி முடிக்கக்கோரியும், சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞரையும் நியமிக்கக்கோரியும் அந்த இடையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கின் பழைய அறிக்கையைப் பெற்ற உச்ச நீதிமன்றம்:
இந்நிலையில் இந்த வழக்கின் கடந்த கால விசாரணையின்போது, வழக்கு தொடர்பான அறிக்கை பழைய அறிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தனர்.
இந்த அறிவுறுத்தலின் காரணமாக, சீலிடப்பட்ட அறிக்கை ஒன்றை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர், இன்று செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணையின்போது தாக்கல் செய்தார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஊழலில், அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்பதையும், 600 சாட்சிகள் இருக்கின்றனர் என்பதையும் அறிந்துகொண்டனர்.
அப்போது சென்னை எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதிக்கு 23 வழக்குகள் இருப்பதாலும் பணிச்சுமை அதிகம் இருப்பதாலும், விரைவில் செந்தில் பாலாஜியின் விசாரணையை முடிக்கவும்வேண்டுமென்பதால் சற்று ஆலோசனை செய்தனர். அதன்பின், பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, செந்தில் பாலாஜியின் மூன்று வழக்குகளில் சிறப்பு நீதிமன்ற நீதிபதியை நியமிக்க முடியுமா என ஆய்வுசெய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்கள் மீது என்னென்ன வழக்குகள் நிலுவையில் உள்ளன: கேட்ட உச்ச நீதிமன்றம்
மேலும், இது தொடர்பான நீதிபதியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியே நியமிக்கலாம் என்றும், இதற்கான அறிக்கையை வரும் அக்டோபர் 25ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யக்கோரியும் கேட்டுக்கொண்டனர்.
அப்போது, தமிழ்நாட்டில் உள்ள அமைச்சர்களில் எத்தனை பேர் மீது என்னென்ன வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று கேள்விகேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அந்த விவரங்களையும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் விட்ட அறிக்கையில், ‘’ செந்தில் பாலாஜியை முதலமைச்சர் வலிந்து வலிந்து ஆதரிப்பதையும், புகழ்வதையும் பார்க்கும் போது செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை தமிழ்நாட்டில் நியாயமாக நடக்கும் என்றோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என்றோ தோன்றவில்லை. எனவே, செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை வேறு மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றும்படி உச்சநீதிமன்றத்திற்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்’’ என்றார்.
டாபிக்ஸ்