Armstrong murder: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள அஞ்சலை பாஜகவில் இருந்து நீக்கம்! அண்ணாமலை அதிரடி!
Jul 18, 2024, 10:22 PM IST
வடசென்னையை சேர்ந்த பெண் தாதாவான அஞ்சலை மீது கந்துவட்டி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஓராண்டு குண்டர் சட்டத்திலும் அஞ்சலை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் பாஜகவில் இணைந்த அவருக்கு மகளிர் அணியில் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமைறைவாக உள்ள பெண் தாதா அஞ்சலை பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் அறிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வட சென்னை மேற்கு மாவட்டத்தின் மாவட்ட துணைத் தலைவராக பணியாற்றி வந்த திருமதி அஞ்சலை கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தது தெரியததால், மாநில தலைமையின் அறிவுறுத்தலின்படி கட்சியின் அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார் உடனடியாக ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கட்சியின் சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணி
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி அன்று சென்னை பெரம்பூரில் உள்ள அவரது இல்லம் அருகே கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 14 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதில் திருவேங்கடம் என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
தலைமறைவான அஞ்சலை
நேற்றைய தினம் திமுக நிர்வாகியின் மகன் சதீஷ், தாமக கட்சியை சேர்ந்த ஹரிஹரன், அதிமுகவை சேர்ந்த மலர் கொடி ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் பாஜகவை சேர்ந்தவரும், பிரபல ரவுடியுமான அஞ்சலை தலைமைமறைவாகி உள்ளார்.
கட்சியில் இருந்து நீக்கம்
இந்த நிலையில் தாமகவை சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரனை அக்கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உத்தரவிட்டுள்ளார். மேலும் அதிமுகவை சேர்ந்த மலர் கொடியை அக்கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் ஹரிஹரனிடம் காவல்துறை நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள மலர்கொடியின் கணவர், மறைந்த தோட்டம் சேகர் ஆவார். தோட்டம் சேகரின் ஆட்களோடு சேர்ந்து ஹரிகரன் பழகி வந்து உள்ளார். அவரது மனைவி மலர் கொடி உடனும் ஹரிஹரன் நட்பில் இருந்து உள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டதாக சந்தேகிக்கப்படும் ரவுடி சம்போ செந்தில் உடன் வழக்கறிஞர் ஹரிஹரன் தொடர்பில் இருந்து உள்ளார்.
ஸ்கெட்ச் போட்டது யார்? பணம் கொடுத்தது யார்?
வழக்கறிஞர் ஹரிஹரன் மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷின் மச்சான் அருள் உடன் தொடர்பில் இருந்து உள்ளார். ஆற்காடு சுரேஷ் உடன் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படும் அஞ்சலையும் இந்த சம்பவத்திற்கு பண உதவி செய்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. ஆனால் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சொல்லி சம்போ செந்திலுக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாமல் உள்ளது. கொலையாளிகளுக்கு இருசக்கர வாகனம், கத்தி, போக்குவரத்து செலவுக்கு அஞ்சலை உதவி செய்து உள்ளதாக காவல்துறை வட்டாரங்களில் இருந்து கூறப்படுகின்றது.
அஞ்சலையின் பின்னணி
வடசென்னையை சேர்ந்த பெண் தாதாவான அஞ்சலை மீது கந்துவட்டி, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஓராண்டு குண்டர் சட்டத்திலும் அஞ்சலை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் பாஜகவில் இணைந்த அவருக்கு மகளிர் அணியில் பொறுப்பு வழங்கப்பட்டு இருந்தது.