WTC Final 2023: இன்று ஃபைனல்-லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா-ஆஸி., சக்சஸ் ரேட் என்ன?
Jun 07, 2023, 05:45 AM IST
Rohit Sharma: டெஸ்ட் டீமை பொருத்தவரை இந்திய அணி நம்பர் 1 இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2வது இடத்தில் இருக்கிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இன்று (ஜூன் 7) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து இந்த முறை ஃபைனலுக்கு முன்னேறவில்லை. ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் இந்த முறை ஃபைனலில் மோதுகிறது.
இந்திய நேரப்படி இன்று மாலை 3 மணிக்கு ஃபைனல் போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட் நேரலையில் இப்போட்டியை ஒளிபரப்புகிறது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் அனல் பரக்கும் என எதிர்பார்க்கலாம். 140 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜூன் மாதத்தில் நடப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் போட்டிக்காக இந்திய அணியினர் கடந்த ஒரு வார காலமாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆஸி., வீரர்களும் பயிற்சியில் முனைப்பு காட்டி வருகின்றனர்.
டெஸ்ட் டீமை பொருத்தவரை இந்திய அணி நம்பர் 1 இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா 2வது இடத்தில் இருக்கிறது.
இந்தியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 2 ஆட்டங்களில் வென்று ஆதிக்கம் செலுத்தியது. அஸ்வினும், ஜடேஜாவும் இணைந்து 47 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இங்கிலாந்தில் கடந்த 2021-22-இல் இந்திய அணி விளையாடியபோது கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா ஓபனிங் பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். முதல் 4 டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் 368 ரன்களை விளாசினார்.
கே.எல்.ராகுல் 315 ரன்களை குவித்திருந்தார். தற்போது ராகுல் காயம் காரணமாக இந்தப் போட்டியில் இல்லாத நிலையில், சுப்மன் கில் ஓபனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கவுள்ளார்.
விராட் கோலியும் நல்ல ஆட்டத்திறனுடன் உள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் 639 ரன்களை குவித்திருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ரன் மெஷினாக விளங்கினார் சுப்மன் கில். மொத்தம் 890 ரன்கள் விளாசி ஆரஞ்சு கேப்பையும் வசப்படுத்தினார்.
ஆஸி., அணியில் மிட்செல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலாண்ட் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை இந்திய வீரர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொருத்தவரை நமக்கு அஸ்வின் இருப்பது பெரும் பலமாக கருதப்படுகிறது. அவர் ஆஸி., அணியின் இடது கை பேட்ஸ்மேன்களை அதிகமுறை வீழ்த்தியிருக்கிறார்.
இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின், 474 விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார். அதில் 241 விக்கெட்டுகள் இடதுகை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்தது ஆகும்.
இங்கிலாந்து பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இடது கை பேட்ஸ்மேன்களை அதிக முறை வீழ்த்தியதில் அடுத்த இடத்தில் உள்ளார். இவர் மொத்தம் 212 முறை இடது கை பேட்ஸ்மேன்களை வீழ்த்தியிருக்கிறார்.
டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் இடது கை பேட்ஸ்மேன்கள் ஆவர்.
பார்டர்-கவாஸ்கர் டிராபி போட்டியில் அஸ்வின் கைப்பற்றிய விக்கெட்டுகளில் 15 விக்கெட்டுகள் இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகள் ஆகும்.
ஆஸ்திரேலியாவை அயல்நாட்டு மண்ணில் விளையாடும்போது 4-4.5 ரன் ரேட்டை தன் வசம் வைத்திருக்கும். எனவே, இந்திய அணி கட்டுக்கோப்புடன் பந்துவீச வேண்டியது அவசியமாகிறது.
இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட கிரேடு 1 டியூக் பந்து இந்தப் போட்டியில் பயன்படுத்தப்படவுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் எஸ்ஜி பந்தை காட்டிலும் டியூக் பந்து வித்தியாசமாக இருக்கும்.
ஷமியும், சிராஜும் இந்த பந்தில் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை பொருத்து தான் ஆட்டம் இருக்கிறது.
முகமது ஷமியைப் பொருத்தவரை இங்கிலாந்தில் 13 டெஸ்ட்களில் விளையாடி 38 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். சிராஜ், இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட்களில் விளையாடி 18 விக்கெட்டுகளை அள்ளியிருக்கிறார். இதுதவிர, ஷர்துல் தாக்குர், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் உள்ளனர்.
இங்கிலாந்து மண்ணில் ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க், 9 டெஸ்ட்களில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 டெஸ்டுகளில் விளையாடி 29 விக்கெட்டுகளை கைப்பற்றியிருக்கிறார்.
இங்கிலாந்தின் சவுதம்ப்டனில் நடந்த முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்று ரன்னர்-அப் ஆனது இந்தியா.
இன்றைய ஃபைனல் போட்டியில் 2 ஸ்பின்னர்களுடன் இந்தியா களமிறங்கினால் ஆஸி.,யை மிரட்டலாம் என இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் பனேசர் யோசனை கூறியிருக்கிறார். பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் போட்டியிலும் இந்திய ஸ்பின் பவுலர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆஸி., வீரர்கள் திணறியகு இங்கே குறிப்பிடத்தக்கது.
எனவே, இந்த போட்டியில் ஸ்பின்னர்களின் தாக்கம் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஓவலில் இதுவரை..
ஓவல் மைதானத்தில் இதுவரை 38 டெஸ்ட்களில் விளையாடி 7 இல் மட்டுமே ஜெயித்துள்ளது ஆஸி., இதுவொரு மோசமான ரெக்கார்டு ஆகும்.
கடந்த 50 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே ஓவலில் ஆஸி., அணி டெஸ்டில் ஜெயித்திருக்கிறது. ஓவல் மைதானத்தில் ஆஸி.,யின் சக்சஸ் ரேட் 18.42 சதவீதம் மட்டுமே.
இந்திய அணி கடந்த 40 ஆண்டுகளில் 2021 இல் மட்டுமே ஓவலில் ஜெயித்திருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 157 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இரு அணிகளுக்குமே ஓவல் மைதானம் சவால் அளிக்கப்போகிறது.
ரோஹித் தலைமையிலான இந்திய அணி என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தியா
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ஸ்ரீகர் பரத், ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, முகமது சிராஜ், ஜெய்தேவ் உனத்கட், உமேஷ் யாதவ், இஷான் கிஷன்
ஆஸ்திரேலியா
பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சேன், நாதன் லயன், மிட்செல் மார்ஷ், டாட் மர்பி, மாட் ரென்ஷா, ஸ்டீவன் ஸ்மித் , டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க்
டாபிக்ஸ்