WTC Final 2023: சாதனை வெற்றியை நோக்கி இந்திய அணி! டிராவிட் - லக்ஷமன் போல் பொறுப்பாக பேட் செய்த கோலி - ரஹானே
Jun 10, 2023, 11:14 PM IST
டெஸ்ட் கிரிக்கெட் இதுவரை சேஸ் செய்யாத ஸ்கோரும், ஓவல் மைதானத்தில் இதுவரை நான்காவது இன்னிங்ஸில் எடுக்கப்படாத ஸ்கோரையும் விரட்டி சாதனை வெற்றி பெறுவதற்கான முழு முயற்சியில் இந்திய பேட்ஸ்மேன்களான விராட் கோலி - அஜிங்கியா ரஹானே ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரிலேயா அணி நிர்ணயித்த 444 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டி இந்திய அணி பேட் செய்து வருகிறது. நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இந்தியா 164 ரன்கள் எடுத்துள்ளது.
விராட் கோலி 44, ரஹானே 20 ரன்களுடன் நாட்அவுட் பேட்ஸ்மேன்களாக களத்தில் உள்ளனர். கைவசம் 7 விக்கெட் இருக்கும் நிலையில், கடைசி நாள் ஆட்டத்தில் வெற்றி பெற இந்தியாவுக்கு இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது.
இந்திய அணி 93 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்த நிலையில் கோலி - ரஹானே பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் இணைந்து பொறுப்புடன் பேட் செய்து 71 ரன்கள் சேர்த்துள்ளனர். இதேபோல் மிக பெரிய இன்னிங்ஸை நாளை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்.
கோலி - ரஹானேவின் ஆட்டம், 2001ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஈடன் கார்டன் மைதானத்தில் டிராவிட் - லக்ஷமன் ஆட்டத்தை நினைவுபடுத்தும் விதமாக அமைந்தது. அத்துடன் அதேபோன்றதொரு இன்னிங்ஸ் இவர்களிடம் நாளைய ஆட்டத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை நான்காவது இன்னிங்ஸில் அதிகமாக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோராக 418 ரன்களே உள்ளது. அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்தில் அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோராக 263 ரன்களே உள்ளன.
இந்த சூழ்நிலையில், ஆஸ்திரேலியா நிர்ணயித்திருக்கும் 444 ரன்களை இந்தியா சேஸ் செய்யும் பட்சத்தில் சாதனை வெற்றியாக அமையும். ஓவல் ஆடுகளம் தற்போது பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.
இந்தியா இழந்திருக்கும் 3 விக்கெட்டுகள் பேட்ஸ்மேன்களின் தவறுகளாலேயே நிகழ்ந்துள்ளது. மற்றபடி ஆஸ்திரேலியா பவுலர்களால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எந்த விதமான அச்சுறுத்தலும் தர முடியாத அளவில் பிட்ச் செயல்பாடு மிகவும் தட்டையாகவே இருந்து வருகிறது.
ஐந்தாம் நாளான நாளையும் பிட்சில் எவ்வித மாற்றமும் இன்றி செயல்பட்டால், இந்திய அணி சாதிப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
நான்காவது நாளான இன்று இந்திய இன்னிங்ஸில் கில் அவுட்டானது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவரது விக்கெட்டுக்கு கேட்ச் பிடித்த க்ரீன், பந்தை தரையில் வைத்தது தெளிவாக தெரிந்தபோதிலும் அம்பயர் அவுட் கொடுத்தது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
நன்றாக பேட் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்ட வந்த ரோஹித் ஷர்மா, ஸ்பின்னரான லயன் ஓவரில் டி20 போட்டி போன்று ஸ்வீப் ஆட முயற்சித்து எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார். அதேபோல் நிதானமாக பேட் செய்து வந்த புஜாராவும், கம்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்தை டி20 கிரிக்கெட் போல் அப்பர் கட் ஆட முயற்சித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். புஜாரா 47 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆஸ்திரேலியா பவுலர்களில் கம்மின்ஸ், போலாந்து, லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்துள்ளனர். இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அது சாதனை வெற்றியாகவே அமையும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்