WTC 2023-25 Schedule: மூன்று உள்ளூர் டெஸ்ட் தொடர், மூன்று அந்நிய மண் தொடர் - இந்தியா போட்டிகளின் முழு அட்டவணை
Jun 14, 2023, 07:16 PM IST
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 - 25 சுழற்சியில் இந்திய அணி மொத்தம் மூன்று உள்ளூர் டெஸ்ட் தொடர், மூன்று அந்நிய மண் டெஸ்ட் தொடர்கள் என மொத்தம் 19 போட்டிகளில் விளையாடுகிறது. இதன் முழு அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இதுவரை இரண்டு சுழற்சிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த இரண்டிலும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற ஒரே அணியாக இந்தியா உள்ளது. இந்த இரண்டும் முறையும் இந்தியா தோல்வியை தழுவியது.
இதைத்தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 சுழற்சிக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. அதில் இந்தியா அணி விளையாட இருக்கும் தொடர்கள் குறித்த முழு விவரமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மூன்றாவது சுழற்சியில் இந்திய அணி வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான அந்நிய மண்ணில் நடைபெறும் தொடருடன் தொடங்குகிறது. ஜூலை மாதத்தில் வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது.
இதில் முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜூலை 12 முதல் 16 வரையிலும், இரண்டாவது போட்டி ஜூலை 20 முதல் 24 வரையிலும் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கு பின்னர் அடுத்ததாக வரும் டிசம்பர் மாதம் தென்ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதுவரை தென்ஆப்பரிக்காவில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றதில்லை. எனவே நீண்ட நாள் எதிர்பார்ப்பை இந்திய அணி நிறைவேற்ற வேண்டும் என்பது கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தென்ஆப்பரிக்காவுக்கு எதிரான தொடருக்கு பிறகு இந்தியாவில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுகிறது. இந்த தொடர் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2024இல் நடைபெறுகிறது.
பின் அதே ஆண்டில் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வரும் வங்கதேசம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
வங்கதேச தொடருக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அக்டோபர் - நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து மிகப் பெரிய டெஸ்ட் தொடராக கருதப்படும் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் நவம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரை நடைபெறுகிறது.
2023 முதல் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி இங்கிலாந்து, வங்கதேசம், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடர்கள் மொத்தம் 10 போட்டிகளை கொண்டுள்ளது.
அதேபோல் வெஸ்ட்இண்டீஸ், தென்ஆப்பரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக அந்நிய மண்ணில் விளையாடுகிறது. இது மொத்தம் 9 போட்டிகளை கொண்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்