UAE vs WI: அறிமுக போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் - ஐக்கிய அரபு அமீரகத்தை CleanSweep செய்த வெஸ்ட் இண்டீஸ்
Jun 10, 2023, 04:15 PM IST
ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை முழுமையாக வென்றுள்ளது வெஸ்ட்இண்டீஸ் அணி. புதிய வீரர்கள் பெரும்பாலோனருடன் களமிறங்கி இந்த வெற்றியை பெற்றுள்ளது. அறிமுக போட்டியிலேயே அதிகவேக அரைசதம் அடித்து சாதனை புரிந்துள்ளார் வெஸ்ட் இண்டீஸ் ஓபனிங் பேட்ஸ்மேன் அலிக் அத்தானாஸ்
ஐக்கிய அரபு அமீரகம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஷார்ஜாவில் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாவது போட்டியில் விளையாடியது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் இடம்பிடித்திருக்கும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட வீரரான விரித்யா அரவிந்த் அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களில் ஸ்பின்னரான கெவின் சின்க்ளேர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து இந்த இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 35.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஓபனிங் பேட்ஸ்மேன் அலிக் அத்தானாஸ் அதிரடியாக பேட் செய்து 65 ரன்கள் எடுத்தார். இது இவரது அறிமுக போட்டியாகும். முதல் போட்டியிலேயே 26 பந்துகளில் அரைசதம் அடித்து, அறிமுக போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை புரிந்து, இந்திய ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்ட்யாவுடன் இணைந்தார்.
ஐக்கிய அரபு அமீரகம் அணியில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு தமிழ்நாடு வீரரும், ஸ்பின்னருமான கார்த்திக் மெய்யப்பன் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.
மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இதன்பின்னர் கடைசி போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை முழுமையாக கைப்பற்றியது.
அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பெற்றிருக்கும் வீரர்களில் பெரும்பாலோனர் புதிய வீரர்களாகவே இருப்பதுடன், பலரும் 10 ஆட்டங்களுக்கு குறைவாகவே விளையாடியுள்ளனர். அந்த வகையில் புதிய அணியாக களமிறங்கி வெஸ்ட்இண்டீஸ் இந்த வெற்றியை பெற்றுள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான தகுதி சுற்று வரும் 18ஆம் தேதி முதல் ஜூலை 9ஆம் தேதி வரை ஜிம்பாப்வேயில் நடைபெறுகிறது.
இரண்டு முறை உலகக் கோப்பை வென்றிருக்கும் வெஸ்ட்இண்டீஸ் அணி, இந்த முறை உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு நேரடியாக தகுதி பெறவில்லை. இதனால் தகுதி சுற்றில் விளையாடவுள்ளது. எனவே ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிரான இந்த வெற்றி வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு தன்னம்பிக்கையை அளிக்கும் என நம்பலாம்.
உலக கோப்பை தகுதி சுற்று போட்டிகளில் 10 அணிகள் இரண்டு பிரிவுகளாக விளையாடவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி, இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணி இந்தியாவில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெறும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்