67வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் - ஜூனியர், இளைஞர் பிரிவு தங்கப்பதக்கத்தை சுருட்டிய சுருச்சி போகட்
Dec 21, 2024, 05:55 PM IST
கடைசியாக 2018 ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் 13 வயதான ஈஷா சிங் மூன்று பிரிவுகளில் களமிறங்கி மூன்று தங்கப் பதக்கங்களையும் கைப்பற்றினார்.
டெல்லி அருகே துக்ளகாபாத் டாக்டர் கர்னி சிங் ரேஞ்சில் நடந்த 67வது தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஏர் பிஸ்டலில் பெண்கள் பிரிவில் 585 மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்தார் சுருச்சி போகட். இதன் மூலம் ஜூனியர் மற்றும் இளைஞர்களுக்கான தங்கப் பதக்கங்களை வென்று சாதித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பயிற்சியாளர் சுரேஷ் சிங்கிடம் பயிற்சி பெற்று சுருச்சி போகட் நிகழ்த்தியிருக்கும் நம்பமுடியாத சாதனையாக அமைந்துள்ளது. சுருச்சி போகட் ஹரியானா மாநிலம், பிரோஹரில் உள்ள அரசு கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவியாக திகழ்ந்து வருகிறார்.
கடைசியாக 2018ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் 13 வயதான ஈஷா சிங் மூன்று பிரிவுகளில் களமிறங்கி மூன்று தங்கப் பதக்கங்களையும் கைப்பற்றினார். அதன் பின்னர் தற்போது சுருச்சி போகட் இதை செய்துள்ளார்.
இந்த வெற்றி குறித்து சுருச்சி கூறியதாவது, "நான் நன்றாக தயாராகி இருந்தேன். மூன்று தங்கப் பதக்கங்களையும் வெல்வேன் என்ற நம்பிக்கையுடன் இருந்தேன்" புன்னகையை வெளிப்படுத்தி கூறியுள்ளார்.
சுருச்சி ஏற்கனவே கடந்த தேசிய சாம்பியன்ஷிப்பில் பெண்கள் பிரிவில் வெள்ளி மற்றும் இளையோர் பிரிவில் வெண்கலம் வென்றார். இது தவிர ஜூனியர் பிரிவில் தங்க பதக்கமும் வென்றிருந்தார். இதனால் தேசிய பதக்கங்களை வென்றிருப்பது அவரது புதிய அனுபவம் இல்லை என்றாலும் அனைத்து பதக்கங்களையும் தன் வசம் ஆக்கிக்கொண்டது அவருக்கு சிறப்பு மிக்க தருணமாக இருந்திருக்கும் என்றே கூறலாம்.
இம்முறை, சுருச்சி ஒலிம்பியன் ரிதம் சங்வானை விட 5.5 புள்ளிகள் வித்தியாசத்தில் பெண்களுக்கான தங்கத்தை வென்றார், க்ருஷ்னாலி ஜகத் சிங் ராஜ்புத் வெண்கலம் வென்றார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாலக் குலியா 577 மதிப்பெண்கள் பெற்று ஆறாவது இடத்தைப் பிடித்தார்.
டாபிக்ஸ்