WTC Final போட்டிக்கு தகுதி பெற எந்தெந்த அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.. கடந்து வந்த பாதை
Jun 05, 2023, 03:28 PM IST
World Test Championship Final: ஆஸ்திரேலியா 19 போட்டிகளில் விளையாடி 11 வெற்றி, 3 தோல்வி, 5 டிரா என மொத்தம் 152 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் நாளை மறுநாள் (ஜூன் 7) தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் நியூசிலாந்து இந்த முறை பைனலுக்கு முன்னேறவில்லை.
இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பைனலில் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் மோதுகிறது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பது டெஸ்ட் உலகக் கோப்பை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
2021 முதல் 2023 வரை நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தகுதி பெறுவதற்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற இரு அணிகள் ஃபைனலுக்கு முன்னேறும்.
இந்த கோதாவில் மொத்தம் 9 அணிகள் குதித்திருந்தன. ஆஸ்திரேலியா 19 போட்டிகளில் விளையாடி 11 வெற்றி, 3 தோல்வி, 5 டிரா என மொத்தம் 152 புள்ளிகளை பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் இந்திய அணி உள்ளது.
2021-2023 வரை ஆஸ்திரேலியா அணியின் பயணத்தைப் பார்ப்போம்.
ஆஷஸ் தொடரில் அசத்தல் வெற்றி
ஆஸ்திரேலியா-இங்கிலாந்து இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தொடரான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 4-0 என்ற கணக்கில் சொந்த மண்ணில் ஜெயித்தது. 5 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் 4வது டெஸ்ட் ஆட்டம் மட்டும் டிராவானது.
இதன்மூலம், 52 புள்ளிகளைப் பெற்றது ஆஸி., அணி.
பாகிஸ்தானில் வெற்றி
பாகிஸ்தான் சென்று அந்நாட்டு அணியை ஒரு ஆட்டத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. எஞ்சிய 2 ஆட்டங்களிலும் டிரா செய்தது.
3வது டெஸ்டில் பான் கம்மின்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். தொடர் நாயகன் விருதை உஸ்மான் கவாஜா தட்டிச் சென்றார். மொத்தம் 20 புள்ளிகளை அந்தத் தொடரில் பெற்றது ஆஸ்திரேலியா.
இலங்கையை சாய்த்தது
இலங்கை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா. கடந்த ஆண்டு ஜூன்-ஜூலையில் நடந்த அந்த தொடரில் ஒரு ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸி., அந்த டெஸ்டில் நாதன் லயன் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும் அடுத்த ஆட்டத்தில் இலங்கை ஜெயித்தது. ஒரு வெற்றி மூலம் 12 புள்ளிகளைப் பெற்றது ஆஸ்திரேலியா.
வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது
கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸை 2-0 என ஒயிட் வாஷ் செய்தது ஆஸ்திரேலியா. லபுஸ்சேன் 502 ரன்களை விரட்டி அசத்தினார். ஆஸி.,யில் வெஸ்ட் இண்டீஸ் ஜெயித்து 25 வருடங்கள் ஆகிறது. அது அப்படியே இன்னும் தொடர்கிறது. அந்த ஆட்டத்தின் மூலம், 24 புள்ளிகளை பெற்றது ஆஸி.,
தென்னாப்பிரிக்காவில் வெற்றிக் கொடி
தென்னாப்பிரிக்கா அணி ஆஸி.,க்கு சுற்றுப் பயணம் வந்தது. அந்த அணியுடன் மோதிய 3 டெஸ்ட்களில் 2 இல் ஆஸி, ஜெயித்தது. கடைசி ஆட்டம் டிரா ஆனது. இந்த ஆட்டத்தின் மூலம், 28 புள்ளிகளை பெற்றது ஆஸி.,
இந்தியாவில்..
இந்த ஆண்டு பிப்ரவரி-மார்ச்சில் இந்திய அணியுடன் நடந்த டெஸ்ட் தொடரில் 2 ஆட்டங்களில் தோல்வி அடைந்தது ஆஸி. ஒரு ஆட்டத்தில் ஆஸி., வென்றது. கடைசி ஆட்டம் டிரா ஆனது. இதன்மூலம் 16 புள்ளிகளை எடுத்தது ஆஸி.
இவ்வாறாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு ஆஸி., முன்னேறியது.
டாபிக்ஸ்