Nellai Royal Kings: நெல்லை முதல் வெற்றி.. விரைந்து இலக்கை எட்டிப் பிடித்தது
Jun 14, 2023, 06:50 PM IST
Siechem Madurai Panthers: டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் 3வது லீக் ஆட்டத்தில் நெல்லை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டிஎன்பிஎல் கிரிக்கெட்டில் மதுரை பேந்தர்ஸ்-நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய அணிகள் இன்று கோயம்புத்தூரில் விளையாடியது. பிற்பகல் 3.15 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கியது.
இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய மதுரை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்களை எடுத்தது. இதையடுத்து சேஸிங்கில் விரைந்து 13.4 ஓவர்களில் 129 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது நெல்லை.
நெல்லை வீரர் நிதிஷ் ராஜகோபால் 26 பந்துகளில் 42 ரன்கள் விளாசினார்.
இவ்வாறாக நெல்லை அணி 13.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
முன்னதாக, மதுரை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய விக்கெட் கீப்பர் எஸ்.கார்த்திக் 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். எனினும், மதுரை அணி கேப்டனும் மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேனுமான ஹரி நிஷாந்த், சிறப்பாக விளையாடி 51 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார்.
இந்த சீசனில் மதுரை அணியின் முதல் ஆட்டத்திலேயே அரை சதம் விளாசியிருக்கிறார் ஹரி நிஷாந்த். அவரது விக்கெட்டை மோகன் பிரசாத் கைப்பற்றினார்.
கே.தீபன் லிங்கேஷ் 6 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் ஜொலிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் ஏமாற்றினார். அவரது விக்கெட்டையும் மோகன் பிரசாத் கைப்பற்றினார்.
பின்னர், ஜெகதீசன் கவுஷிக்கையும் 12 ரன்களில் காலி செய்தார் மோகன் பிரசாத். நெல்லை பவுலர் மோகன் பிரசாத், 4 ஓவர்கள் வீசி 26 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சுருட்டினார்.கோயம்புத்தூர் வெயில் கொளுத்தி எடுத்தது. இருப்பினும் ரசிகர்கள் கிரிக்கெட்டை ஆவலுடன் ரசித்து பார்த்தனர்.
அடுத்து இரவு 7.15 மணிக்கு திண்டுக்கல்-திருச்சி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு பிரீமியர் லீக் (Tamil Nadu Premier League) ஆண்டுதோறும் நடைபெறும் ஓர் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஆகும். 2016-இல் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தால் தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டி போன்று தமிழக அளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் ஆகும்.
இந்தப் போட்டிகள் மூலம் பல இளம் வீரர்களின் திறமைகள் அடையாளம் காணப்படும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. 7வது சீசன் போட்டி நடைபெற்று வருகிறது.
டாபிக்ஸ்