Novak Djokovic: அரையிறுதியில் நம்பர் 1 வீரரை சந்திக்கிறார் ஜோகோவிச்!
Jun 07, 2023, 07:48 AM IST
French Open: களிமண் மைதானத்தில் இதற்கு முன்பு கடந்த ஆண்டு மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சை அல்காரஸ் வீழ்த்தியிருக்கிறார்.
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற டென்னிஸ் தொடரான பிரெஞ்சு ஓபன் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.
அரையிறுதிப் போட்டியில் நம்பர் 1 வீரரான ஸ்பெயினின் கர்லோஸ் அல்காரஸை சந்திக்கிறார்.
முன்னதாக, நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் ரஷ்ய வீரர் கச்சனோவை 4-6, 7-6 (0), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
முதல் செட்டை பறிகொடுத்த போதிலும், அடுத்த செட்டை போராடி கைப்பற்றினார். 2வது செட் ஆட்டம் டை-பிரேக்கர் வரை சென்றது. அசத்தலாக விளையாடி அந்த செட்டை கைப்பற்றினார் ஜோகோவிச். பின்னர், 3வது மற்றும் நான்காவது செட்டையும் எளிதில் கைப்பற்றி அசத்தினார்.
இதனிடையே, நம்பர் 1 வீரர் அல்காரஸ், கிரீஸ் வீரர் ஸ்டெஃபனோஸ் சிட்சிபாஸை 6-2, 6-1, 7-6 (5) என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
களிமண் மைதானத்தில் இதற்கு முன்பு கடந்த ஆண்டு மாட்ரிட் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச்சை அல்காரஸ் வீழ்த்தியிருக்கிறார்.
டென்னிஸ் போட்டியில் களிமண் தரையில் விளையாடுவது மிகவும் கடினமாகும். பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி களிமண் களமாகும். இந்தக் களத்தில் எப்போதும் ராஜாவாக திகழ்ந்தவர் ஸ்பெயின் வீரர் நடால்.
அவர் இந்த முறை போட்டியில் பங்கேற்கவில்லை.
அல்காரஸ் கூறுகையில், "எல்லோருமே இதை தான் எதிர்பார்த்தார்கள். நானும் ஜோக்கோவிச்சை அரையிறுதியில் சந்திப்பேன் என எதிர்பார்த்தேன். அவரை எதிர்கொண்டு ஜெயிக்க விரும்புகிறேன்" என்றார்.
மே 22ம் தேதி தொடங்கிய பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி, ஜூன் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
அரையிறுதியில் சபலென்கா
நடப்பு ஆஸி., ஓபன் சாம்பியனான பெலாரஸ் வீராங்கனை சபலென்கா, காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை எலினாவை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
மற்றொரு காலிறுதியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசு வீராங்கனை முசோவா, ரஷ்ய வீராங்கனை அனஸ்டாசியாவை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.
அரையிறுதியில், சபலென்கா, முசோவா மோதுகின்றனர்.
டாபிக்ஸ்