Ruturaj Gaikwad: பிரபல கிரிக்கெட்டர், நீண்ட நாள் காதலியை கரம் பிடித்த ருதுராஜ் - வைரலாகும் திருமண புகைப்படம்
Jun 04, 2023, 01:20 PM IST
சிஎஸ்கே அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ருதுராஜ் கெய்வாட் தனது நீண்ட நாள் காதலி உத்கர்ஷா பவார் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவரது திருமண புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ருதுராஜ் திருமணம் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் சனிக்கிழமை இரவு கோலாகலமாக நடைபெற்றது. சிஎஸ்கே அணி ஐபிஎல் 2023 தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய பங்கு வகித்தார்.
இதையடுத்து ஐபிஎல் தொடர் முடிவுற்ற பிறகு, தனது நீண்ட நாள் காதலியான உத்கர்ஷா பவார் என்பவரை கரம் பிடித்துள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்டாண்ட்பை வீரராக உள்ளார்.
ஆனாலும் தற்போது 5 நாள் நடைபெறும் திருமண நிகழ்வில் அவர் பங்கேற்கவுள்ளார். திருமணம் முடிந்த கையொடு அந்த நிகழ்வின் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
கிரிக்கெட் பிரபலங்கள் பலர் புதுமாப்பிள்ளையான ருதுராஜுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஷிகர் தவான், ரஷித்கான், ஷ்ரேயாஸ் ஐயர், உம்ரான் மாலிக் உள்பட பலரும் ருதுராஜுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
சக சிஎஸ்கே வீரரான பிராசாந்த் சோலங்கி, ஷிவம் துபே ஆகியோர் ருதுராஜ் திருமணத்தில் பங்கேற்றுள்ளார்.
ருதுராஜ் போன்று, உத்கர்ஷாவும் மகளிர் கிரிக்கெட்டராக உள்ளார். மகராஷ்ட்ரா அணியில் விளையாடி வரும் அவர், ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்ற பிறகு மைதானத்தில் நடைபெற்ற கொண்டாட்டத்தில், ருதுராஜுடன் இருந்தார் உத்கர்ஷா.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ருதுராஜ் 16 போட்டிகள் விளையாடி 590 ரன்கள் எடுத்தார். டேவான் கான்வேயுடன் இணைந்து முக்கிய பார்ட்னர்ஷிப் அமைத்த இவர் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 1,797 ரன்கள் குவித்துள்ள ருதுராஜ், ஒரு சதம் உள்பட 14 அரைசதங்கள் அடித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் கலக்கி வரும் ருதுராஜ், இந்தியாவுக்காக டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் எந்நேரமும் அழைக்கப்படும் வீரர் லிஸ்டில் இடம்பிடித்துள்ளார். விரைவில் அவர் டெஸ்ட் அணியிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்