Ind vs Aus 2nd Test:262 ரன்களுக்கு இந்தியா ஆல்அவுட்: 1 ரன் முன்னிலை பெற்றது ஆஸி!
Feb 18, 2023, 05:18 PM IST
முதல் இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 1 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் டெல்லியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணி முதல் இன்னிங்ஸில் 78.4 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 142 பந்துகளை எதிர்கொண்டு 72 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 9 பவுண்டரிகள் அடங்கும். கவாஜா 81 ரன்கள் எடுத்தார்.
முதல் இன்னிங்ஸில் ஷமி 4 விக்கெட்டுகள், அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்திருந்தது.
ரோஹித் சர்மா 13, ராகுல் 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இன்று கே.எல்.ராகுல் நல்லவிதமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 41 பந்துகளில் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நேத்தன் லயன் அவருடைய விக்கெட்டை வீழ்த்தினார். லயன் சுழலை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார்கள் இந்திய பேட்ஸ்மேன்கள். ரோகித் சர்மா 32, ஷ்ரேயஸ் ஐயர் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். 100-வது டெஸ்டை விளையாடும் புஜாரா டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார்.
மதிய உணவு இடைவேளையில் இந்திய அணி 35 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்தது. கோலி 14, ஜடேஜா 15 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு ஜடேஜா அவுட்டாகினார். அவர் 74 பந்துகளை எதிர்கொண்டு 26 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக 84 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்த கோலி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அடுத்துவந்த பரத், 6 ரன்களில் லயன் பந்தில் ஆட்டமிழந்தார். 8-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அக்ஷர் படேலும் அஸ்வினும் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டனர். தேநீர் இடைவேளையின்போது இந்திய அணி 62 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. அதன்பிறகும் இருவரும் ரன்குவிப்பில் ஈடுபட்டனர். இருப்பினும் 115 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 74 ரன்களை குவித்து அக்ஷர் படேல் ஆட்டமிழந்தார்.
அஸ்வினும் 37 ரன்களுக்கு ஆட்டமிழக்க அடுத்து வந்த ஷமி 2 ரன்னிலும் அவுட்டாகினர். இதனால் முதல் இன்னிங்ஸில் 83.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்தியா 262 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 1 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
டாபிக்ஸ்