HTSports Special: 40 வயதில் Test போட்டியில் அறிமுகமான சென்னை வீரர் - 1985 முதல் காணவில்லை! Cricket உலகில் விந்தை நிகழ்வு
Jun 16, 2023, 06:20 AM IST
இந்திய டெஸ்ட் அணியில் 40 வயதுக்கு மேல் அறிமுகமான இரண்டாவது வீரராக இருக்கும் கோட்டா ராமசாமி, 1985இல் வீட்டை விட்டு வெளியேறி காணாமல் போயுள்ளார். கிரிக்கெட், டென்னிஸ் என இரட்டை விளையாட்டுகளை இந்தியாவுக்காக விளையாடிய வீரராக இவர் இருந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இருந்து கிரிக்கெட் விளையாடியவர்களில் ஒருவராக இருப்பவர் கோட்டார் ராமசாமி. கோட்டா ராமசாமி என்று அழைக்கப்படும் இவர் தென்னிந்தியாவின் கிரிக்கெட் தந்தை என்று அழைக்கப்படும் புஜ்ஜி பாபு நாயுடுவின் இளைய மகனாக 1896, ஜூன் 16இல் பிறந்தார். ராமசாமி டென்னிஸ், கிரிக்கெட் என இரண்டு விளையாட்டுகளிலும் கில்லியாக இருந்துள்ளார்.
இவரது சகோதரர்கள், உறவினர்கள் என அனைவரும் முதல் தர கிரிக்கெட்டில் வீரர்களாக இருந்துள்ளனர். கேம்பிரட்ஜ் பல்கலைகழகத்தில் படித்த ராமசாமி, 1920களில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். அதன் பிறகு 1922இல் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் விளையாடிய இவர், 1925இல் சென்னையில் நடைபெற்ற தென்இந்தியா சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரை வென்றுள்ளார். இதன்பின்னர் 1936இல் இந்தியா அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, சர்ப்ரைஸாக இந்திய அணியில் பேட்ஸ்மேனாக தேர்வு செய்யப்பட்டார்.
இங்கிலாந்தில் மான்சஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய ராமசாமிக்கு அப்போது 40 வயது 37 நாள்கள் ஆகியிருந்தன. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக வயதில் களமிறங்கிய இரண்டாவது இந்தியராக உள்ளார் ராமசாமி.
தனது முதல் டெஸ்ட் போட்டியில் முறையே 40, 60 ரன்கள் எடுத்து, இந்திய அணி டிரா செய்வதற்கு உதவி புரிந்தார். ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்டில் 29, 41 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் 2 போட்டிகளை விளையாடிய அவர் 170 ரன்கள், 56.66 சராசரியில் எடுத்தார். இடது கை பேட்ஸ்மேனான ராமசாமி மைதானத்தின் அனைத்து திசைகளிலும் டிரைவ் ஆடுவதில் வல்லவராக இருந்துள்ளார்.
1953இல் வெஸ்ட்இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியின் முதல் மேனேஜர் என்ற பெருமையை பெற்ற ராமசாமி, இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளராகவும் இருந்துள்ளார். 50க்கும் மேற்பட்ட முதல் தர கிரிக்கெட்டில் விளையாடியிருக்கும் ராமாசாமி, விவசாய விஞ்ஞானியான் எம்எஸ் சுவாமிநாதனுக்கு கிரிக்கெட்டும், விவசாயமும் சொல்லி கொடுத்த குருவாக இருந்துள்ளார்.
சென்னை அடையாறு பகுதியில் வசித்து வந்த ராமசாமி, 1985ஆம் ஆண்டில் தனது வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் வீடு திரும்பவில்லை. காணாமல் போன அவரை தேடும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. அவரை பல்வேறு இடங்களில் பார்த்தாக வதந்திகளும் பரவின.
ஆனால் கிரிக்கெட் உலகின் பைபிள் எனப்படும் விஸ்டன் நாள்குறிப்பு, ராமசாமி 1990களில் இறந்து விட்டதாக கருதப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் இவரது உடல் கிடைக்காத நிலையில், கோட்டா ராமாசாமியின் இறப்பு இன்னும் மர்மமாகவே உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து விளையாடிய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழும் கோட்டா ராமசாமியின் 127வது பிறந்தநாள் இன்று.
டாபிக்ஸ்