43 பதக்கங்கள்..6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள்! இந்திய டென்னிஸ் விளையாட்டின் அடையாளமாக ஜொலித்த சானியா மிர்சா
Nov 15, 2024, 06:15 AM IST
20 ஆண்டு காலம் இந்திய டென்னிஸ் விளையாட்டின் அடையாளமாக ஜொலித்த வீராங்கனையான சானியா மிர்சா, உலக டென்னிஸில் முக்கிய பட்டமான கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை 6 முறை வென்றுள்ளார்.
இந்திய டென்னிஸ் விளையாட்டின் உலக அடையாளமாக திகழ்ந்து பல்வேறு பட்டங்களை குவித்தவர் டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா. அதிக சம்பளத்தை பெற்றவரும், அதிக செல்வாக்கு பெற்ற இந்திய விளையாட்டு வீராங்கனையாகவும் திகழ்ந்திருக்கும் இவர் 2003 முதல் 2023 வரை 20 ஆண்டுகள் டென்னிஸ் விளையாட்டில் ஜொலித்துள்ளார்.
இந்தியாவில் அதிக ரேங்கிங்கில் பெற்ற டென்னிஸ் வீராங்கனை என்ற பெருமைக்குரியவராக திகழ்ந்துள்ளார். WTA டூரில் பதக்கம் வென்ற இரண்டு இந்திய பெண் வீராங்கனைகளில் ஒருவராக சானியா மிர்சா உள்ளார்.
டென்னிஸ் வாழ்க்கை பயணம்
சானியாவின் தந்தை மும்பை சேர்ந்த பிரபல விளையாட்டு பத்திரிகையாளராக இருந்துள்ளார். சானியாவின் குடும்பம் மும்பையில் இருந்து ஹைதராபாத்தில் செட்டிலானது. தனது ஆறு வயதில் இருந்து தந்தையின் பயிற்சியில் டென்னிஸ் விளையாட தொடங்கியுள்ளார் சானியா மிர்சா. தொடர்ந்து பள்ளி, கல்லூரி படிப்பை முடித்த இவர் 2003இல் தொழில்முறை டென்னிஸ் விளையாட்டில் பங்கேற்க தொடங்கினார்.
ஜூனியர் வீராங்கனையாக 10 சிங்கிள்ஸ், 13 டபுள்ஸ் பட்டங்களை வென்ற இவர், 2003இல் ரஷ்யாவின் அலிசா க்லேபனோவா உடன் இணைந்து விம்பிள்டன் சாம்பியன்ஷிப் கேர்ள்ஸ் பட்டம் வென்றார். தனது 16வது வயதில் 2002 தேசிய விளையாட்டில் மகளிர் பிரிவில் தங்கம் வென்றார். 2003இல் முதல் முறையாக WTA டூர் நிகழ்வில் வைல்டு கார்டு மூலம் என்ட்ரி ஆகி விளையாடும் வாய்பை பெற்றார்.
தொடர்ந்து 2002 ஆசிய விளையாட்டில் லியாண்டர் பயஸுடன் இணைந்து விளையாடி வெண்கலம் வென்றார்.
சர்வதேச போட்டிகளில் அசத்தல்
2005இல் ஹைதராபாத்தில் நடந்த WTA டூர் நிகழ்வில் உக்ரைன் வீராங்கனை அலோனா பொண்டரென்கோவை வீழ்த்தி, இந்த பட்டத்தை வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமை பெற்றார். அதே ஆண்டில் யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் நான்காவது சுற்று வரை முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையாக பெருமை பெற்றார். 2007இல் ஆஸ்திரேலியா ஓபன், 2008இல் பிரென்சு ஓபன், விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் கலக்கினார்.
2008 முதல் 2010 காலகட்டத்தில் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவில் பல்வேறு முக்கிய தொடர்களில் முத்திரை பதித்தும், பட்டங்களையும் வென்றார். தொடர்ந்து காயத்தால் அவதிப்பட்டு சில காலத்துக்கு பிறகு கம்பேக் கொடுத்த இவர், பின்னர் இரட்டையர் பிரிவில் மட்டும் அதிக கவனம் செலுத்தினார்.
2015இல் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியன் வெல்ஸ், மியாமி ஓபன் போன்று முக்கிய தொடர்களில் விளையாடினார். இநத் ஆண்டில் WTA Finalsஇல் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார்.
விளையாட்டு ஸ்டைல்
மிர்சா மிகவும் சக்திவாய்ந்த தரையிறக்கத்துடன் கூடிய தாக்குதல் பேஸ்லைனர் ஆட்டத்தை விளையாடக்கூடியவராக இருந்துள்ளார். "எனது நெற்றி மற்றும் கைகளை சரியாக ஒருங்கிணைத்து ஆடுவதா தான் பலமாக கருதுகிறேன். இப்படி ஆடுவதில் இலகுவாக பந்தை அடித்து விளையாட முடிகிறது. கால்களில் அவ்வளவு வேகத்தை வெளிப்படுத்த முடியாது" என தனது ஆட்டதிறன் குறித்து அவரே கூறியுள்ளார்.
சானியா வென்ற பட்டங்களும், விருதுகளும்
அர்ஜுனா விருது, பத்மஸ்ரீ விருது, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது, பத்ம பூஷண் விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்றிருக்கும் சானியா, 2016இல் டைம் இதழில் உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராகவும் இடம்பிடித்தார்.
2010இல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்து கொண்ட சானியா மிர்சா, 2018இல் ஆண் குழந்தைக்கும் அம்மாவானார். குழந்தை பிறந்த பிறகும் டென்னிஸ் விளையாட்டை தொடர்ந்த மிர்சா, 2023இல் ஓய்வை அறிவித்தார்.
மொத்தம் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள சானியா மிர்சா, தனது டென்னிஸ் வாழ்க்கையில் மொத்தம் 46 விருதுகளை வென்றுள்ளார்.
2015 இல் WTA இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார். 2002 ஆசிய விளையாட்டு வெண்கலம் (கலப்பு இரட்டையர்). 2006 மற்றும் 2014 இல் ஆசிய விளையாட்டு தங்கம் (கலப்பு இரட்டையர்). 2009 ஆஸ்திரேலிய ஓபன் கிரீடம் (கலப்பு இரட்டையர்). 2012 பிரெஞ்சு ஓபன் கிரீடம் (கலப்பு இரட்டையர்). 2024 யுஎஸ் ஓபன் பட்டம் (கலப்பு இரட்டையர்).
2015 விம்பிள்டன் கிரீடம் (இரட்டையர்). 2015 யுஎஸ் ஓபன் பட்டம் (இரட்டை). 2016 ஆஸ்திரேலிய ஓபன் (இரட்டையர்) என டென்னிஸ் உலகின் முக்கிய தொடர்களில் பட்டங்களை வென்றுள்ளார். ஓய்வுக்கு பின்னர் தனது சொந்த டென்னிஸ் அகாடமியை கவனித்து வருவதோடு, பல்வேறு அமைப்புகளில் நல்லெண்ண தூதராகவும் தனது பணியை தொடர்ந்து வரும் சானியா மிர்சா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
டாபிக்ஸ்