Ben Stokes: "Best Birthday Gift" - அரிய வகை சாதனை புரிந்த ஒரே கேப்டன் ஆன பென் ஸ்டோக்ஸ்
Jun 04, 2023, 11:01 AM IST
அயர்லாந்து அணிக்கு எதிராக ஒரே டெஸ்டில் வெற்றி பெற்று விநோதமான சாதனையை புரிந்துள்ளார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். அது அவரது பிறந்தநாளில் முந்தையை நாள் நிகழ்ந்திருப்பது சிறந்த பரிசாக அமைந்துள்ளது.
இங்கிலாந்து - அயர்லாந்து இடையே ஒரே டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த அயர்லாந்து முதல் இன்னிங்ஸில் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து 4 விக்கெட் இழப்புக்கு 524 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் அயர்லாந்து 362 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதையடுத்து இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விநோதமான சாதனையை புரிந்துள்ளார். டெஸ்ட் போட்டியில் விளையாடி இரண்டு இன்னிங்ஸிலும் பேட்டிங், பெளலிங் செய்யாமல் பீல்டிங் மட்டும் செய்து வெற்றி பெற்ற கேப்டனாகியுள்ளார். அத்துடன் 146 ஆண்டு கால டெஸ்ட் வரலாற்றில் இப்படியொரு சாதனையை நிகழ்த்திய முதல் கேப்டன் என்ற பெருமையை படைத்துள்ளார்.
இந்த போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி முதலில் பெளலிங் செய்தது. அப்போது பிரதான பெளலர்களான ஸ்டூவர்ட் போர்டு, மோத்யூ போட்ஸ், ஜோஷ் டங், ஜேக் லீச் ஆகியோர் மட்டுமே பந்து வீசினர்.
அதேபோல் பேட்டிங்கிலும் முதல் ஐந்து பேட்ஸ்மேன்கள் மட்டுமே பேட் செய்ய மிடில் ஆர்டரில் இருந்த பென் ஸ்டோக்ஸ் களமிறங்கவில்லை.
இரண்டாவது இன்னிங்ஸிலும், முதல் இன்னிங்ஸில் பந்து வீசிய பெளலர்களுடன் கூடுதலாக ஜோ ரூட் மட்டும் 10 ஓவர்கள் வீசினார். அப்போதும் பென் ஸ்டோக்ஸ் பந்து வீசவில்லை.
அத்துடன் இங்கிலாந்துக்கான டார்கெட் 12 ரன்கள் என்பதால் 4 பந்தில் ஓபனிங் பேட்ஸ்மேன் கிராவ்லி ஆட்டத்தை முடித்தார்.
இதனால் வெறும் பீல்டிங் மட்டும் பங்களிப்பு செய்து அணியை வெற்றி பெற செய்துள்ளார் பென் ஸ்டோக்ஸ். பீல்டிங் மட்டுமே பங்களிப்பு செய்தாலும் அதில் ஒரு கேட்ச் கூட பென் ஸ்டோக்ஸ் பிடிக்காமல் போனது மற்றொரு சுவாரஸ்யமான நிகழ்வாக உள்ளது.
பென் ஸ்டோக்ஸ் இன்று தனது 32வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்கு முந்தைய நாளில் அவர் இப்படியொரு தனித்துவமான சாதனை புரிந்திருப்பது சிறந்த பிறந்தநாள் பரிசாகவே அமைந்துள்ளது.
டாபிக்ஸ்