Zika Virus: புனேவில் மூன்றாவது நபருக்கு ஜிகா வைரஸ் - 13 மாதிரிகள் என்.ஐ.விக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது!
Jun 28, 2024, 09:39 AM IST
Zika Virus: புனேவில் மூன்றாவது நபருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது எனவும், 13 மாதிரிகள் என்.ஐ.விக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
Zika Virus: புனே மாநகராட்சியின் முந்த்வாவில் நேற்று(ஜூன் 27) மற்றொரு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது நகரத்தில் இதுவரை மூன்றாவது தொற்றுநோயாகும்.
47 வயதான பெண்ணின் இரத்த மாதிரியில் ஜிகா மற்றும் டெங்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜிகா வைரஸ் அறிகுறிகள்:
காய்ச்சல், மூட்டு வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக அந்தப் பெண் புகார் அளித்தார். அவர் மே 31ஆம் தேதியன்று ஹடப்சரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் வெப்பமண்டல காய்ச்சல் சுயவிவர சோதனைக்கு ஒரு தனியார் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. தனியார் ஆய்வக அறிக்கைகள் ஜூன் 1ஆம் தேதி அவரது இரத்த சீரத்தில் ஜிகா வைரஸ் மற்றும் டெங்கு வைரஸைக் கண்டறிந்தன. இருப்பினும், இந்த வழக்கு குறித்து ஜூன் 22அன்று மருத்துவமனை புனே மாநகராட்சிக்குத் தகவல் அளித்தது.
பெயர் வெளியிட விரும்பாத நோயாளிக்கு சிகிச்சையளித்த மருத்துவர், "நோயாளிக்கு நோய்த்தொற்றுக்கான அறிகுறி சிகிச்சை வழங்கப்பட்டது. இந்த அறிகுறிகளை வைத்து டெங்கு வைரஸ் மற்றும் ஜிகா வைரஸ் பாதிப்பு இரண்டையும் நாங்கள் சந்தேகித்தோம். இரண்டு வைரஸ் தொற்றுகளுக்கும் சிகிச்சை முறை ஒரே மாதிரியாக இருந்தது. அவர் வெற்றிகரமாக சிகிச்சை பெற்று ஜூன் 3ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிசார்ஜ் செய்யப்பட்டார்’எனத் தெரிவித்தார்.
13 மாதிரிகள் என்.ஐ.விக்கு சோதனைக்கு அனுப்பப்பட்டது:
புனேயின் உதவி சுகாதார அதிகாரி டாக்டர் ராஜேஷ் திகே கூறுகையில், ’’கண்காணிப்பின் போது, 47 வயதான பெண் மற்றும் அவரது மூன்று குடும்ப உறுப்பினர்கள் உட்பட 13 பேரின் மாதிரிகளை எடுத்துள்ளோம். அருகில் வசிக்கும் நபர்கள் உட்பட 13 மாதிரிகளும் ஜிகா நோய்த்தொற்றை பரிசோதிக்க தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு (என்.ஐ.வி) அனுப்பப்பட்டுள்ளன.
தனியார் ஆய்வகத்தில் வெளியான தகவலின்படி அந்த பெண்ணுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக நாங்கள் அவரது மாதிரிகளை மீண்டும் செய்து என்.ஐ.வி.க்கு அனுப்பியுள்ளோம், "என்று அவர் கூறினார்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்த பெண், அவரது மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளின் மாதிரிகள் என்.ஐ.வி.க்கு அனுப்பப்பட்டுள்ளன.
முன்னதாக ஜூன் 20-21ஆம் தேதிகளில், எரண்ட்வானேவைச் சேர்ந்த 46 வயதான மருத்துவர் மற்றும் அவரது 15 வயது மகளுக்கு ஜிகா வைரஸ் தொற்றுப் பதிவாகியுள்ளது.
புனே மாநகராட்சியின் கோல் சாலை வார்டு அலுவலக அதிகார வரம்பின் கீழ் உள்ள எரண்ட்வானில் நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான எட்டு நோயாளிகளின் மாதிரிகளை எடுத்துள்ளனர். இந்த எட்டு நோயாளிகளில் ஐந்து கர்ப்பிணிகள் மற்றும் கிலர்வாடி, கணேஷ் நகர் மற்றும் சிங்காகட் சாலை பகுதிகளிலிருந்து அறிகுறிகளைப் புகாரளித்த மூன்று நோயாளிகள் அடங்குவர்.
கொசுவினால் ஏற்படும் பாதிப்பு:
டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்த்தொற்றுகளைப் பரப்பும் ஏடிஸ் கொசு கடிப்பதன் மூலம் ஜிகா வைரஸ் பரவுகிறது.
ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் அறிகுறியற்றவர்களாக (80% வரை) இருக்கிறார்கள் அல்லது காய்ச்சல், சொறி, வெண்படல அழற்சி, உடல் வலிகள் மற்றும் மூட்டு வலிகள் போன்ற லேசான அறிகுறிகளைக் காட்டுகிறார்கள். கர்ப்பிணிகளுக்கு, ஜிகா நோய்த்தொற்று கருவில் மைக்ரோசெபலியை ஏற்படுத்தும்.
நகரின் பல பகுதிகளில் காய்ச்சல் நோயாளிகளின் கொள்கலன் கணக்கெடுப்பு மற்றும் கண்காணிப்பை குடிமை அமைப்பு தொடங்கியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாபிக்ஸ்