Nitin Gadkari: புரட்சி ஏற்படுகிறது..! பெட்ரோல், டீசல் இல்லாத நிலை சாத்தியமற்றது கிடையாது - நிதின் கட்காரி பேச்சு
Apr 04, 2024, 05:22 PM IST
2004 முதல் மாற்று எரிபொருளை நோக்கிய அழுத்தங்கள் அளிக்கப்பட்டு வருகிறது எனவும், இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளில் நூறு சதவீதம் அவை சாத்தியமாகும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் கார்களை முற்றிலுமாக ஒழித்து, நாட்டை பசுமைப் பொருளாதாரமாக மாற்றுவதே தனது நோக்கம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.
பெட்ரோல் மற்றும் டீசல் கார்களை முற்றிலுமாக ஒழிப்பது இந்தியாவால் சாத்தியமா என்று கேட்டபோது, பிரபல செய்தி நிறுவனம் பிடிஐக்கு அவர் அளித்த பதிலில் கூறியதாவது, “நூறு சதவீதம் சாத்தியமானது தான். இது கடினமான விஷயம் தான் என்றாலும் சாத்தியமற்றது கிடையாது. இதுதான் எனது பார்வை.
எரிபொருள் இறக்குமதிக்காக மட்டும் ரூ. 16 லட்சம் கோடி செலவாகிறது. இந்த பணத்தை விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்த பயன்படுத்தலாம். கிராமங்கள் செழிப்பாக இருக்கும். இளைஞர்களுக்கு பல்வேறு வேலை வாய்ப்புகள் உருவாகும்" என்றார்.
உயிரி எரிபொருள் பயன்பாடு
கலப்பின வாகனங்களுக்கான ஜிஎஸ்டியை ஐந்து சதவீதமாகவும், ஃப்ளெக்ஸ் என்ஜின்களுக்கு 12 சதவீதமாகவும் குறைக்கும் திட்டம் நிதி அமைச்சகத்துக் அனுப்பப்பட்டுள்ளது, உயிரி எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் எரிபொருள் இறக்குமதியை நாடு நிறுத்த முடியும் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
இதுதொடர்பாக நிதின் கட்காரி மேலும் கூறியதாவது, "2004ஆம் ஆண்டு முதல் மாற்று எரிபொருளுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும், எதிர்வரும் 5 முதல் 7 ஆண்டுகளில் இந்த நிலைமை மாறும் என்று கூறினார்,
"இந்த மாற்றம் என்பது கடினமானது தான். எனவே அதற்கான தேதியை என்னால் அருதியிட்டு கூற முடியாது. இது கடினமான விஷயமாக இருந்தாலும், சாத்தியமற்றது கிடையாது.
எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படும் வேகத்தை கருத்தில் கொண்டு, வரவிருக்கும் சகாப்தம் மாற்று மற்றும் உயிரி எரிபொருளுக்கான காலமாக இருக்கும்.
பஜாஜ், டிவிஎஸ், ஹீரோ போன்ற ஆட்டோ நிறுவனங்களும் ஃப்ளெக்ஸ் என்ஜின்களைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளன.
நான் ஹைட்ரஜனில் இயங்கும் காரை தான் பயன்படுத்துகிறேன். நாடு முழுவதும் பலரது வீடுகளில் எலெக்ட்ரிக் கார்களைப் இப்போது பார்க்கலாம். ஆரம்பத்தில் இது பற்றி விமர்சித்தவர்கள், தற்போது தங்களது பார்வையை மாற்றிக்கொண்டு, கடந்த 20 வருடங்களாக இந்த மாற்றத்தை நம்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.
புரட்சி நிகழ்கிறது
ஹைட்ரஜனில் இயங்கும் டிரக்குகளை டாடா மற்றும் அசோக் லேலண்ட் அறிமுகப்படுத்தியுள்ளன. LNG/CNGஇல் இயங்கும் லாரிகள் உள்ளன. பயோ-சிஎன்ஜி தொழிற்சாலைகள் நாடு முழுவதும் 350 வரை உள்ளன. ஒரு புரட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. விரைவில் எரிபொருள் இறக்குமதி முடிவுக்கு வரும். நாடு தன்னிறைவை பெற்று சுயசார்பு நிலைக்கு மாறும். இதை நான் உறுதியாக நம்புகிறேன்."
இவ்வாறு அவர் கூறினார்.
காற்று மாசுபாட்டை குறைக்கும் விதமாகவும், எரிபொருள் தேவையை குறைக்கும் விதமாகவும் நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்கப்படுத்த வரிச்சலுகை, வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளையும் மத்திய அரசு அளித்து வருகிறது.
இந்த சூழ்நிலை நிதின் கட்காரியின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்தவையாக அமைகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்