PM Modi:'தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள், அழிவுகரமானதாக அல்ல’: ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
Jun 15, 2024, 11:46 AM IST
PM Modi: தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள் என்றும்; அழிவுகரமானதாக அல்ல என்றும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.
PM Modi: ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்தின் அடித்தளத்தை அமைப்பதற்கும், தொழில்நுட்பத்தின் நன்மைகள் அனைத்து பிரிவினரையும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, நேற்று(ஜூன் 14), இத்தாலியில் நடந்த ஜி 7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, உலகத் தலைவர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் எரிசக்தி ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு அமர்வில் பங்கேற்ற மோடி, தொழில்நுட்பம் அழிவுகரமானதாக இல்லாமல் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என்று உலக நாடுகளின் தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இத்தாலி ஜி 20 உலக மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியவை:
ஜி 20 உலக மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, ‘’இந்தியாவில் சமீபத்தில் முடிவடைந்த பொதுத் தேர்தல்களில், தொழில்நுட்பம் வகித்த முக்கியப் பங்கைப் பற்றி பேசினார்.
உலகளாவிய தெற்கின் பிரச்சினைகளை எடுத்துக்கொள்வதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. தொழில்நுட்பம் மனிதனை சந்திரனுக்கு அழைத்துச் செல்வதற்கான தைரியத்தை அளிக்கிறது. ஆனால், இணையப் பாதுகாப்பு போன்ற சவால்களையும் உருவாக்குகிறது.
தொழில்நுட்பத்தின் பயன்கள் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் சென்றடைவதை நாம் ஒன்றிணைந்து உறுதி செய்ய வேண்டும். சமூக ஏற்றத்தாழ்வுகளை அகற்றவும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக மனித பலத்தை விரிவுபடுத்தவும் உதவுங்கள்.
நாம் தொழில் நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக மாற்ற வேண்டும். அழிவுகரமானதாக அல்ல. அப்போதுதான் அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்திற்கான அடித்தளத்தை அமைக்க முடியும்" என்று அவர் மேலும் கூறினார்.
தனது மூன்றாவது பதவிக்காலத்தில் முதல் வெளிநாட்டு பயணமாக இத்தாலி சென்ற பிரதமர் மோடி, பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் இத்தாலிய பிரதமரும் விருந்தினருமான ஜியோர்ஜியா மெலோனி ஆகியோருடன் இருநாட்டுச் சந்திப்புகளை நடத்தினார்.
பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உலகத் தலைவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
‘’ ஜோ பைடனை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. உலகளாவிய நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படும்" என்று பிரதமர் மோடி, தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்து இருந்தார்.
ஜி 7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
ஜி 7 உச்சிமாநாட்டின் புரவலரான இத்தாலியால் அழைக்கப்பட்ட 12 நாடுகள் மற்றும் ஐந்து சர்வதேச அமைப்புகளில் இந்தியாவும் ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால், கிடைக்கும் நன்மை, அணுகல், மலிவு மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகிய நான்கு கொள்கைகளை பிரதமர் மோடி இந்த மாநாட்டில் எடுத்துரைத்தார்.
2,600-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள், ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 15 மில்லியனுக்கும் அதிகமான வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் 640 மில்லியன் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திய இந்திய தேர்தல்களின் அளவை பிரதமர் மோடி அங்கு எடுத்துரைத்தார்.
நியாயமாக நடந்த தேர்தல் என்று பேசிய பிரதமர் மோடி:
பிரதமர் மோடி,, ‘’தொழில்நுட்பத்தின் நிறைந்த பயன்பாட்டால் முழு தேர்தல் செயல்முறையும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் செய்யப்பட்டுள்ளது. இது உலகின் மற்றும் மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா. தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர்களுக்கு சேவை செய்ய இந்திய மக்கள் எனக்கு வாய்ப்பளித்திருப்பது எனது அதிர்ஷ்டம்" என்று அவர் கூறினார்.
’’கடந்த ஆண்டு ஜி 20 தலைமையின்போது செயற்கை நுண்ணறிவில் சர்வதேச ஆளுகையின் முக்கியத்துவத்தை இந்தியா வலியுறுத்தியது. மேலும் செயற்கை நுண்ணறிவை வெளிப்படையான மற்றும் பொறுப்பானதாக மாற்ற எதிர்காலத்தில் அனைத்து நாடுகளுடனும் தொடர்ந்து பணியாற்றும்’’ என்று பிரதமர் மோடி கூறினார்.
"எல்லோரும் தங்கள் தாயை நேசிக்கிறார்கள். இந்த உணர்வுடன், மரம் நடுதலை தனிப்பட்ட தொடர்பு மற்றும் உலகளாவிய பொறுப்புடன் கூடிய மக்கள் இயக்கமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம். அதில் அனைவரும் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
2047ஆம் ஆண்டுக்குள் சமூகத்தின் எந்தவொரு பிரிவினரும் பின்தங்கிவிடக்கூடாது என்ற அர்ப்பணிப்பு சர்வதேச ஒத்துழைப்பிலும் முக்கியமானது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பதற்றங்களின் சுமையைத் தாங்குகின்றன. உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகளை உலக அரங்கில் வைப்பது தனது பொறுப்பு என்று இந்தியா கருதுகிறது"என்று அவர் கூறினார்.
இந்த முயற்சிகளில், ஆப்பிரிக்காவுக்கு இந்தியா உயர் முன்னுரிமை அளித்து வருவதுடன், ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்து நாடுகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்து வருகிறது.
உச்சிமாநாட்டிற்கு தன்னை அழைத்ததற்காக இத்தாலி பிரதமர் மெலோனிக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததோடு, ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
டாபிக்ஸ்