Emergency row: ’இனி ஜூன் 25 அரசியல் சாசன படுகொலை தினம்!’ கோதாவில் குதித்த மோடி அரசு! காங்கிரஸ்க்கு ஆப்பு ரெடி!
Jul 13, 2024, 01:16 PM IST
Samvidhaan Hatya Diwas: ஜூன் 25, 1975 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியது.
ஆண்டுதோறும் ஜூன் 25-ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக (சம்விதான் ஹத்யா திவாஸ்) கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஜூன் 25, 1975 அன்று அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசு அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியது.
அமித்ஷா ட்வீட்
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா, “1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தனது சர்வாதிகார மனநிலையைக் காட்டி, நாட்டில் எமர்ஜென்சியை கொண்டு வந்து இந்திய ஜனநாயகத்தின் ஆன்மாவை நெரித்தார். எந்த காரணமும் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் என தெரிவித்து உள்ளார்.
மேலும், ஊடகங்களின் குரல் நசுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25 ஆம் தேதியை 'சம்விதன் ஹத்யா திவாஸ்' என்ற தினமாக கடைபிடிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலியை அனுபவித்த அனைத்து மக்களின் மகத்தான பங்களிப்பை இந்த நாள் நமக்கு நினைவுபடுத்தும்.” என்றும் அமித்ஷா கூறி உள்ளார்.
காங்கிரஸ் கட்சி கண்டனம்
இந்த நிலையில் மத்திய பாஜக அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள திருவனந்தபுரம் எம்.பி சசிதரூர், "சம்விதன் ஹத்யா திவாஸ்" என்று ஒரு தேதியை அறிவிப்பது சற்று வினோதமானது. முதலாவதாக, சம்விதன் உயிருடன் இருக்கிறார் மற்றும் வாக்காளர்களால் வலுவாக ஆதரிக்கப்படுகிறார். ஹத்யா (கொலை) எதுவும் நடக்கவில்லை," என்று கூறி உள்ளார்.
"அந்த தேதியில் (ஜூன் 25, 1975) நடந்தது முற்றிலும் சம்விதானின் விதிகளுக்கு உட்பட்டது. இது ஜனநாயகத்திற்கு விரோதமானது, ஆனால் அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல" என்றும் சசிதரூர் பதிவிட்டு உள்ளார்.
மேலும் இந்துஸ்தான் டைம்ஸின் கட்டுரையை பகிர்ந்து உள்ள அவர், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் எமர்ஜென்சி விதித்ததை ஆதரித்தார். "எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை கைது செய்தல், பத்திரிகைகளை தணிக்கை செய்தல் மற்றும் அந்த காலகட்டத்தில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்கு விரோதமானவை என்று நான் நினைக்கிறேன், ஆனால், துரதிர்ஷ்டவசமாக, அரசியலமைப்பிற்கு விரோதமானது அல்ல" என்று ஜனாதிபதி திரௌபதி முர்மு பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றியதற்கு பதிலளித்தார்.
ஜெயராம் ரமேஷ் கண்டனம்
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ஜூன் 25 ஆம் தேதியை சம்விதான் ஹத்யா திவாஸ் என்று கடைப்பிடிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவுக்கு கடுமையான எதிர்வினையாக, பிரதமர் நரேந்திர மோடியின் தார்மீகத் தோல்வியைக் குறிப்பதால் ஜூன் 4 ஆம் தேதியை “மோடிமுக்தி திவாஸ்” ஆகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.
ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. தனிப்பெரும்பான்மைக்கு 32 இடங்கள் குறைவு. இருப்பினும், பிரதமர் நரேந்திர மோடி தனது NDA கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தார். இடங்களை இழந்தது பிரதமர் மோடியின் தார்மீக தோல்வி என்று குற்றம்சாட்டி உள்ளார்.
பேசுபொருள் ஆன அரசியல் சாசனம்
கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் பாஜக 400 இடங்களை பிடித்து ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்திற்கு ஆபத்து ஏற்படும் என காங்கிரஸ் கட்சி பரப்புரை செய்து இருந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்றுக் கொண்ட ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி எம்.பிக்களும் அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தியபடி பதவி பிரமாணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.