Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி!

Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி!

Karthikeyan S HT Tamil
Published Jun 14, 2024 02:03 PM IST

Vikravandi By Election: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி!
Vikravandi By Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டி!

வேட்புமனுத்தாக்கல் தொடங்கியது

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் (ஜூன் 14) இன்று தொடங்கியுள்ளது. வேட்புமனுவைத் தாக்கல் செய்வதற்கு ஜூன் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், வேட்புமனுக்கள் மீது 24 ஆம் தேதி பரிசீலனை நடைபெறும் என்றும் வேட்புமனுக்களை திரும்ப பெற 26 ஆம் தேதி கடைசி நாளாகும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

பாமக போட்டி

இந்த நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், "தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின் படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெற அனைவரும் இணைந்து பாடுபடுவோம்! வெற்றி பெறுவோம்! என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் யார்?

இடைத்தேர்தலில் தி.மு.க., விவசாய தொழிலாளர் அணி மாநில செயலாளரான அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன் உட்பட பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். எனினும் விழுப்புரம் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் கூறும் நபரையே, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேட்பாளராக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாம் தமிழர் தனித்து போட்டி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 8.14 சதவீத வாக்குகளை பெற்று மாநில கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ள நாம் தமிழர் கட்சி, வழக்கம் போல் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்றத் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயா போட்டியிடுவார் என சீமான் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் தங்கள் கட்சி, கூட்டணி சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.