Amit Shah About Congress: ’தேர்தல் முடிந்தால் காங்கிரஸை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது!’ வியூகத்தை உடைத்த அமித்ஷா!
May 20, 2024, 08:22 PM IST
”Amit Shah About Congress: இந்த தேர்தலின் தொடக்கத்தில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார். ஆனால் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பைனாகுலர் உதவியுடன் கூட காங்கிரஸை கட்சியை பார்க்க முடியாது என அமித்ஷா தெரிவித்துள்ளார்”
பாஜக ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு ரத்தாகுமா?
ஹரியானா மாநிலம் ரோத்தக் மக்களவைத் தொகுதியில் வரும் மே 25ஆம் தேதி அன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜஜ்ஜாரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்தால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் பொய் கூறி வருகிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
காங்கிரஸ் கட்சியை பைனாகுலரில் கூட பார்க்க முடியாது
பா.ஜ.க நாடாளுமன்றத்தில் இருக்கும் வரை, இட ஒதுக்கீட்டை யாரும் தொட முடியாது. இந்த தேர்தலின் தொடக்கத்தில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையைத் தொடங்கினார். ஆனால் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பைனாகுலர் உதவியுடன் கூட காங்கிரஸை கட்சியை பார்க்க முடியாது.
இதுவரை 270 இடங்களில் ஜெயித்துவிட்டோம்!
நடந்து முடிந்துள்ள நான்கு கட்ட நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவில் இதுவரை மோடி ஜி 270 இடங்களை கடந்து 400 இடங்களை நோக்கி நகர்கிறார்.
அதே நேரத்தில் ராகுல் பாபா 40 இடங்களை கூட தாண்டவில்லை. ஒருபுறம் இடஒதுக்கீட்டை பாதுகாக்கும் நரேந்திர மோடியும், மறுபுறம் எஸ்சி-எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினரின் இடஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் காங்கிரஸ் கட்சியும் உள்ளது.
அயோத்தி ராமரின் பிராண பிரதிஷ்டை
2019 ஆம் ஆண்டில், நீங்கள் மோடி ஜியின் அரசாங்கத்தை அமைத்தீர்கள். ஐந்து ஆண்டுகளில், அயோத்தி குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பும் வந்தது, பூமி பூஜையும் செய்யப்பட்டது, ஜனவரி 22 அன்று, மோடி ஜி ஸ்ரீ ராம் லல்லாவின் பிராண பிரதிஷ்டாவை செய்தார்.
காஷ்மீர் 370 சட்டப்பிரிவு நீக்கம்
வாக்கு வங்கிக்கான பேராசையில் காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக 370ஆவது பிரிவை வைத்திருந்தது. ஆகஸ்ட் 5, 2019 அன்று 370 ஆவது பிரிவை ஒழிப்பதன் மூலம் காஷ்மீரை பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்க மோடி ஜி பணியாற்றினார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எங்களுடையது நாங்கள் அதை திரும்பப் பெறுவோம்" என்று அவர் கூறினார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2024:
இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடந்து முடிந்தது.
இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் கடந்த மே 7ஆம் தேதியும், மே 13ஆம் தேதி அன்று நான்காம் கட்ட தேர்தலும் நடந்து முடிந்தது.
வரும் மே 20ஆம் தேதி அன்று 5ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணி உடன் நடைபெற்று முடிந்தது.
வரும் மே 25ஆம் தேடி அன்று 6ஆம் கட்ட தேர்தலும், ஜூன் 1ஆம் தேதி அன்று 7ஆம் கட்ட தேர்தலும் நடைபெற உள்ளது.