Amit Shah: ’ஒடிசாவை ஒரு தமிழன் ஆள்வதா?’ மண்ணின் மைந்தனை முதல்வர் ஆக்குவோம்! வி.கே.பாண்டியன் குறித்து கொந்தளித்த அமித்ஷா!
May 21, 2024, 10:22 PM IST
Amit Shah: ’உட்கல பூமியான ஒடிசாவில் பாஜக ஆட்சி அமைத்தால் மண்ணின் மைந்தரை முதலமைச்சர் ஆக்குவோம். ஆனால் ஒடிசாவை ஆள்வது மண்ணின் மைந்தனாகதான் இருக்க வேண்டும், தமிழ் பாபு அல்ல என வி.கே.பாண்டியன் குறித்து அமித்ஷா பேச்சு
ஒடிசா மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், ஒடிசாவை மண்ணின் மைந்தன்தான் ஆளவான்; தமிழன் அல்ல என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறி உள்ளார்.
பாஜக 400 இடங்களை வெல்லும்
ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தல் உடன் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்று வருகிறது. சாம்பல்பூரில் நடைபெற்ற பேரணியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவைத் தேர்தலின் 5 கட்டங்கள் நிறைவடைந்த நிலையில் பாஜக 310 இடங்களைக் கைப்பற்றியுள்ளதாகக் கூறினார். இம்முறை ஒடிசாவில் கட்சியின் சின்னமான தாமரை மலரும் என குறிப்பிட்ட அவர், "ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு, பாஜக ஏற்கனவே 310 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. ஆறாவது மற்றும் ஏழாவது சுற்றுத் தேர்தலுக்குப் பிறகு நாங்கள் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம்" என்று அமித் ஷா கூறினார்.
ஒடிசாவில் அதிகாரிகள் ஆட்சி
மாநிலத்தில் "சில அதிகாரிகள்" ஆட்சி நடைபெற்று வருவதாகவும், மாநிலத்தில் நடந்து வரும் "பாபு ராஜ்"க்கு இந்த தேர்தல் முடிவு கட்டும் என்றும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கை விமர்சித்து பேசினார்.
மண்ணின் மைந்தரை முதலமைச்சர் ஆக்குவோம்
ஒடிசாவின் பெருமை, மொழி, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை ஆளும் பிஜூ ஜனதாதளம் அரசு அவமதிப்பதாக குற்றம்சாட்டிய அமித்ஷா “பாஜகவுக்கு வாக்களித்தால், ஒடிசா மண்ணை சேர்ந்த ஆற்றல் மிக்க, கடின உழைப்பாளி ஒருவரை முதலமைச்சராக ஆக்குவோம் என கூறினார்.
ஒடியா மக்களின் பெருமையை நசுக்குகிறார்
ஒடிசாவில் அதிகாரிகள் ஆட்சியை நவீன் பட்நாயக் கட்டாயப்படுத்துவதாக கூறீய அமித்ஷா, ஒடியா மக்களின் பெருமை மற்றும் கண்ணியத்தைத் தாக்குகிறார். அவர் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் பெருமையை நசுக்குகிறார் என குற்றம்சாட்டினார்.
’ஒடிசாவை ஆள்வது தமிழ் பாபு அல்ல’
விரைவான வளர்ச்சி மற்றும் அவர்களின் வளமான கலாச்சாரத்தைப் பாதுகாப்பதை உறுதிசெய்ய மாநிலத்தில் பாஜக ஆட்சியைத் தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொண்ட அவர், “மக்கள் பாஜகவுக்கு வாக்களித்தால், மண்ணின் மைந்தன், உத்கல பூமியை ஆள்வான்; தமிழ் பாபு அல்ல” என்று ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் உதவியாளரும், தமிழ்நாட்டை சேர்ந்தவருமான வி.கே.பாண்டியனை மறைமுகமாக சாடினார்.
’ஒடிசாவில் கனிமவளக்கொள்ளை’
"பிஜூ ஜனதாதளம் அரசாங்கம் ஜெகநாதர் கோவிலை வணிக மையமாக மாற்ற விரும்புகிறது. மடங்கள் மற்றும் கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மேலும் கோவிலின் நான்கு கதவுகளும் இன்னும் பொதுமக்களுக்காக திறக்கப்படவில்லை" என்று குற்றம் சாட்டிய அமித் ஷா, மாநிலத்தின் "கனிம வளங்களை கொள்ளையடிக்க" முதல்வர் நவீன் பட்நாயக் எந்தக் கல்லையும் விட்டு வைக்கவில்லை என குற்றம் சாட்டினார்.
மக்களின் சமமான வளர்ச்சிக்கு உறுதி தருகிறோம்
ஒடிசாவில் கனிம வளங்கள் அதிகம் இருந்தாலும், மாநிலத்தின் வளங்களை பாதுகாக்கும் முதல்வர் அந்த மாநிலத்தில் இல்லை என்றும். பிஜூ ஜனதாதள அரசு மேற்கு ஒடிசாவை புறக்கணித்துள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளின் சமமான வளர்ச்சிக்கு பாஜக உறுதிபூண்டுள்ளது என கூறினார்.
சம்பல்பூரில் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி மற்றும் கெண்டு இலைத் தொழிலாளர்களுக்கு பிஎஃப் (வருங்கால நிதி) ஆகியவற்றை பாஜக கட்டும் என்றும் அமித்ஷா உறுதி அளித்தார்.