ப்ளம் கேக் இல்லாம கிறிதுமஸ் கொண்டாட்டமா? நெவர், இதோ இட்லி பாத்திரத்திலே செய்யலாம், எப்படி பாருங்க!
Dec 20, 2024, 02:00 PM IST
கிறிஸ்துமஸ் ப்ளம் கேக் ரெசிபி. இட்லி பாத்திரத்தில் செய்வது எப்படி என்று பாருங்கள்.
கிறிஸ்துமஸ் வந்துவிட்டது. கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. கேக் செய்வது பெரிய விஷயமாக இருக்குமோ என்று அஞ்ச வேண்டாம். குக்கர், அவன், கடாய் இல்லாமலே மென்மையான ப்ளம் கேக் செய்ய முடியும் என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆமாம் வீட்டிலே எளிதாக இந்த கேக் செய்து கிறிஸ்துமஸை அசத்துங்கள்.
தேவையான பொருட்கள்
ஆரஞ்சு பழம் – 2
(விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸி ஜாரில் சேர்த்து சாறு பிழிந்துகொள்ளவேண்டும்)
கருப்பு உலர் திராட்சை – 4 ஸ்பூன்
வெள்ளை உலர் திராட்சை – 4 ஸ்பூன்
டூட்டி ஃப்ரூட்டி – ஒரு கப் (அனைத்து நிறங்களும் நிறைந்தது)
முந்திரி – ஒரு கப்
பாதாம் – ஒரு கப்
(அனைத்து உலர் பழங்களையும் ஆரஞ்சு பழத்தின் சாறில் சேர்த்து மூன்று மணி நேரங்கள் ஊறவைத்துவிடவேண்டும்)
சர்க்கரை – ஒரு கப்
(கால் கப் சர்க்கரையை கேரமலைஸ் செய்து, தேன் கலரில் வரும் வரை வைத்துவிட்டு, தண்ணீர் சேர்த்து அடுப்பை அணைத்துவிட்டு தனியாக எடுத்து வைத்துவிடவேண்டும். இது கேக்குக்கு நல்ல நிறம் தரும்)
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
(முக்கால் கப் சர்க்கரையுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்)
வெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
முட்டை – 2
மைதா மாவு – ஒரு கப்
வெண்ணிலா எசன்ஸ் – ஒரு ஸ்பூன்
பேக்கிங் பவுடர் – ஒரு ஸ்பூன்
பேக்கிங் சோடா – கால் ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை சேர்த்து விஸ்க் வைத்து நன்றாக அடித்துக்கொள்ளவேண்டும். அடுத்து அதில் மசாலாக்களுடன் அடித்து வைத்துள்ள சர்க்கரையையும் சேர்க்கவேண்டும். அடுத்து முட்டையையும் சேர்த்து நன்றாக விஸ்கில் அடித்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து ஆரஞ்சு பழத்தில் ஊறவைத்துள்ள நட்ஸ் கலவையை முழுமையாக சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து மாவையும் சேர்த்துக்கொள்ளவேணடும். அடுத்து வெண்ணிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா என அனைத்தையும் சேர்த்து நன்றாக விஸ்க் வைத்து கலக்கவேண்டும்.
அடுத்து கேரமலைஸ் செய்து வைத்துள்ள சுகர் சிரபை சேர்த்து மெதுவாக ஒரே சைடில் மிருதுவாக கலந்துவிடவேண்டும்.
ஒரு டப்பா அல்லது கேக் டின்னில் பட்டர் ஷீட் போட்டுக்கொள்வேண்டும் அல்லது வெண்ணெயைத் தடவி மைதாவைத் தூவி டின்னை தயார் செய்துகொள்ளவேண்டும். அப்போதுதான் எடுக்கும்போது ஒட்டாமல் வரும். தோசை மாவு பதத்துக்ககு கரைத்த மாவை அதில் சேர்க்கவேண்டும்.
அடுப்பில் ஒரு பயன்படுத்தாத தோசைக்கல்லை வைத்து அதில் இட்லி பாத்திரத்தை வைத்து, அதில் ஒரு ஸ்டான்ட் வைத்து, அதில் கேக் டின்னை வைத்து இட்லி பாத்திரத்தை மூடி வைத்துவிடவேண்டும். மூடி வைத்து மிதமான தீயில் முக்கால் மணி நேரம் எரிய விடவேண்டும்.
பின்னர் திறந்து பார்த்தால், முக்கால் பதம் கேக் வெந்திருக்கும். அப்போது கொஞ்சம் உலர் பழங்களை சேர்க்கவேண்டும். ஆரம்பத்திலே சேர்த்தால், அனைத்தும் உள்ளே போய்விடும். எனவே கேக் முக்கால் பதம் வெந்தபின்னர்தான் சேர்க்கவேண்டும்.
பின்னர் அரை மணி நேரம் வேக வைத்தால், கேக் நன்றாக வெந்துவிடும். டூத்பிக் சோதனை செய்து பார்த்து கேக் தயாராகிவிட்டால் எடுத்துவிடலாம். ஆறிய பின் எடுத்து கேக்கை தட்டி வெளியே எடுத்துக்கொள்ளவேண்டும். இது வேக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பராக இருக்கும். ஹாப்பி கிறிஸ்துமஸ்!