Multi Purpose Masala Powder : சைவ, அசைவ குழம்புகள், அனைத்து வகை கூட்டுப் பொரியலுக்கும் இந்த ஒரு மசாலாப்பொடி போதும்!
Sep 08, 2024, 07:52 AM IST
Multi Purpose Masala Powder : சைவ, அசைவ குழம்புகள், அனைத்து வகை கூட்டுப் பொரியலுக்கும் இந்த ஒரு மசாலாப்பொடி போதும். வீட்டிவே தயாரிக்கலாம் எளிதாக. 6 மாதம் வரை கெடாது.
அனைத்து வகை சைவ, அசைவ குழம்பு வகைகள் மற்றும் அனைத்து காய்கறி கூட்டு மற்றும் பொரியல், வறுவல் என அனைத்துக்கும் ஏற்ற மசாலாப்பொடி தயாரிப்பது எப்படி என்ற வழிகாட்டுதல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த முறையில் நீங்கள் தயாரித்துக்கொண்டீர்கள் என்றால் அது உங்களுக்கு சமையலறை டென்சனைக் குறைக்கும். மசாலாப்பொடிகள் தான் உணவுக்கு ருசியைத் தரக்கூடியவை. அவை இல்லாவிட்டால் எதுவும் ருசிக்காது. ஆனால் ஒவ்வொன்றுக்கும் ஒரு மசாலா என்றால் அது கஷ்டம். செய்வதும் சிரமம். சேமிப்பதும் கஷ்டம். ஒரு மசாலாவே அனைத்துக்கும் உதவும் என்றால் நல்லது தான். அவசரத்துக்கு பாக்கெட் மசாலா வாங்கவேண்டிய தேவையில்லை. அதுவும் கலப்படங்கள் நிறைந்ததாகவும், உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தி தருவதாகவும் இருக்கும். எனவே நாம் வீட்டிலே புதிய மசாலாக்களை அரைத்துக்கொள்வதுதான சிறந்த வழி. அதற்கு ஏற்றாற்போல் ஒரு மசாலா ரெசிபியை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
இந்த மசாலாப்பொடி 6 மாதங்கள் வரை கெடாது. மேலும், இதை வைத்து, மட்டன், சிக்கன், கருவாடு, மீன், புளிக்குழம்பு, காய்கறிகள் குழம்பு, கீரைக் குழம்பு, பருப்பு உருண்டை குழம்பு என அனைத்தும் வைக்கவாம். அனைத்து வகை கிரேவிகளையும் தயாரித்துக்கொள்ளலாம். பொரியல், வறுவலுக்கும் இது உதவும். மொத்தத்தில் உங்கள் வீட்டில் இந்த மசாலா மட்டும் இருந்தால் போதும் கவலையே வேண்டாம். சமையலறை டென்சனே இருக்காது.
குழம்பு மற்றும் மல்டி பர்ப்பஸ் மசாலாப்பொடி அரைக்க தேவையான பொருட்கள்
மிளகாய் – கால் கிலோ
(குண்டு மிளகாய், நாட்டு மிளகாய் என எது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)
வர மல்லி – கால் கிலோ
(நாட்டு மல்லியாக இருந்தால் நல்லது)
மஞ்சள் – 100 கிராம்
(பசுமஞ்சளாக இருந்தால் மிகவும் நல்லது. உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைத் தரக்கூடியது)
கடலை பருப்பு – 100 கிராம்
துவரம் பருப்பு – 50 கிராம்
(இந்த மசாலாப்பொடிக்கு சுவையைத்தருவது)
சீரகம் – 100 கிராம்
சோம்பு – 50 கிராம்
மிளகு – 100 கிராம் அல்லது 50 கிராம் (உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளலாம்)
வெந்தயம் – ஒரு ஸ்பூன்
(வாசம் மற்றும் சுவையைத்தரும்)
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடியளவு
பச்சரிசி – 100 கிராம்
(கழுவி நன்றான உலர்ந்தவுடன் வெயிலில் காய வைத்தது)
செய்முறை
இவையனைத்தையும் சுத்தம் செய்து வெயிலில் நன்றாக காய வைக்கவேண்டும். இதை வறுக்க தேவையில்லை. நல்ல வெயிலில் மொறுமொறு பதம் வரும் வரை காய வைக்கவேண்டும்.
இதில் பச்சரிசியை மட்டும் நன்றாக அலசிவிட்டு தனியாக காயவைக்கவேண்டும். மற்ற அனைத்து பொருட்களையும் சேர்த்து காய வைக்கலாம். பச்சரிசி ஈரமாக இருக்கும் என்பதால் அதை மட்டும் தனியாக காய வைக்கவேண்டும்.
நன்றாக காய்ந்த அனைத்தையும் சேர்த்து ஒன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். உங்கள் தேவைக்கு ஏற்ப அளவுகளை மாற்றிக்கொள்ளலாம்.
அரைத்த மசாலாவை காயவைத்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
இதை ஆறு மாதம் வரை வைத்துக்கொள்ள முடியும் என்பதால், அடிக்கடி திறக்காமல் பெரிய டப்பாவில் சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டும். தேவைக்கு ஏற்ப சிறிய டப்பாவில் எடுத்துக்கொண்டு அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.
இதை அனைத்து வகை குழம்புகள் மற்றும் காய்கறி வறுவல், பொரியல் என அனைத்துக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டிலே செய்யக்கூடிய பக்கவிளைவுகள் மற்றும் வேதிப்பொருட்கள் இல்லாத இந்த மசாலாவை செய்து பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்