Nanjil Fish Gravy: தேங்காய் எண்ணெய், தேங்காய் மசாலா அரைத்து செய்யும் நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு! நாவில் எச்சில் ஊறும்!
Nanjil Fish Gravy: தேங்காய் எண்ணெய், தேங்காய் மசாலா அரைத்து செய்யும் நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு! நாவில் எச்சில் ஊறும் சுவையில் உங்களை அசத்தும், இப்படி செய்து பாருங்கள்.
நாஞ்சில் நாட்டு உணவுகள் என்பது சுவை நிறைந்ததாகவும், தமிழகம் மற்றும் கேரள மசாலாப்பொருட்களை சேர்த்து செய்வதாகும். இந்தியாவின் தென் கோடியில் நீங்கள் நாஞ்சில் நாட்டு உணவுகளை ருசிக்கலாம். அருகருகே இருக்கும் இம்மாநிலங்களின் சுவையை சேர்த்து தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயுடன் ருசிக்கலாம். தமிழ்நாட்டின் தெற்குப்பகுதியில் கன்னியாகுமரி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகள் நாஞ்சில் நாடு என்று அழைப்படுகிறது. அங்கிருந்துதான் இந்த உணவின் பெயர்கள் வந்தது. இந்த உணவுகள் கேரளா மற்றும் கர்நாடகாவின் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் மசாலாக்களை சேர்த்து செய்வது. செய்முறையும் சேர்ந்திருக்கும். தமிழ்நாட்டின் மற்ற உணவு வகைகளைப்போல் நாஞ்சில் நாட்டு உணவு வகைகளுக்கும் என்று தனிச்சிறப்பு உண்டு. தனித்தன்மையான மற்றும் சூப்பரான சுவையைக் கொண்டது. இந்த ஊர்கள் பெரும்பாலும் கடற்கரையோரம் என்பதால் மீன் உணவுகள் மற்றும் தேங்காய் உணவுகள் இங்கு சிறப்பாக இருக்கும். இங்கு உள்ள மக்கள் காய்கறிகள், வெங்காயம், மிளகு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து உணவை சாப்பிடுகிறார்கள். சிவப்பரிசி, மட்டை அரிசி ஆகியவற்றை பயன்படுத்துகிறார்கள்.
தேவையான பொருட்கள்
மீன் – அரை கிலோ
(சுத்தம் செய்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவேண்டும்)
புளி – எலுமிச்சை அளவு
(சூடான தண்ணீரில் ஊறவைத்து கரைத்து புளிக்கரைசல் மட்டும் எடுத்துக்கொள்ளவேண்டும்)
தக்காளி – 1
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
மசாலா அரைக்க தேவையான பொருட்கள்
தேங்காய் துருவல் – அரை கப்
சின்ன வெங்காயம் – 6
பூண்டு – 4 பல்
பச்சை மிளகாய் – 1 அல்லது 2 (உங்கள் கார அளவுக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளலாம்)
மிளகாய்த் தூள் – ஒரு டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
சீரகத்தூள் – அரை ஸ்பூன்
செய்முறை
புளிக்கரைசலை தயாரித்து தயாரித்து வைத்துக்கொள்ளவேண்டும். தேங்காய் துருவல், சின்ன வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள் என இவையனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
நீங்கள் இதை மிக்ஸியில் வேண்டுமானாலும் அரைத்துக்கொள்ளலாம். ஆனால் அம்மியில் அரைத்தால் குழம்பு கூடுதல் சுவையாக இருக்கும்.
மண் சட்டியில் (மீன் குழம்பை எப்போதும் மண் சட்டியில்தான் வைக்கவேண்டும்) தேங்காய் எண்ணெயை சூடாக்கி, கடுகு சேர்த்து அது பொரிந்தவுடன் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.
அடுத்து அரைத்த மசாலா விழுதை சேர்க்கவேண்டும். அது கொதி வந்த பின்னர் புளிக்கரைசலை சேர்க்கவேண்டும். இரண்டையும் ஒரே நேரத்தில் சேர்த்தால், மசாலாவின் பச்சை வாசம் போக தாமதமாகும்.
கொதி வந்ததும், தக்காளி மற்றும் மீன் துண்டுகளை சேர்க்கவேண்டும். தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டால் நாவில் எச்சில் ஊறும் சுவையில் நாஞ்சில் நாட்டு மீன் குழம்பு தயார்.
இரண்டு நாட்களுக்கு நன்றாக இருக்கும். இதில் வெட்டிய மாங்காய் துண்டுகள் மற்றும் முருங்கைக்காய் துண்டுகள் சேர்த்துக்கொள்ளலாம். இல்லாவிட்டாலும் பிரச்னை இல்லை.
எப்போதும் மீன் குழம்பை வைத்தவுடனே சாப்பிடக்கூடாது தாமதமாகத்தான் சாப்பிடவேண்டும். அப்போதுதான் சுவை நன்றாக இருக்கும். சூடான சாதம், இட்லி, தோசை என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்