Morning Quotes : குடலுக்கு நன்மை தரும் ஆரோக்கிய காலை உணவுகள் பட்டியலில் இன்று சோலே மசாலா! இதோ ரெசிபி!
Aug 28, 2024, 05:44 AM IST
Morning Quotes : குடலுக்கு நன்மை தரும் ஆரோக்கிய காலை உணவுகள் பட்டியலில் இன்று சோலே மசாலா எப்படி செய்வது என்று கொடுக்கப்பட்டுள்ளது. படித்துப் பயன்பெறுங்கள்.
உங்கள் குடலுக்கு நன்மை விளைவிக்கும் காலை உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியம் ஆகும். அதில் குறைந்தது 15 கிராம் புரதச்சத்துக்களும், 6 கிராம் நார்ச்சத்துக்களும், ப்ரோ மற்றும் ப்ரீ பயோடிக்குகள் இருக்கவேண்டும். இதனால் உங்களின் குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
காலையில் நீங்கள் முதல் உணவாக சாப்பிடும் உணவுகள் தான் உங்களின் நாள்முழுமைக்குமான ஆற்றலைத்தருகிறது. சோலே பூரியும் அதில் ஒன்று. இது வட இந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு ஆகும். இதனுடன் கொண்டைக்கடலை கறி சேர்த்து பரிமாறப்படுகிறது. அந்த கறியில் எண்ணற்ற மசாலாக்கள் சேர்க்கப்படுகின்றன. பூரியும் எண்ணெயில் பொரித்து தரப்படுகிறது. எண்ணெயில் பொரிப்பது சிலருக்கு பிடிக்கவில்லையென்றால், அவர்கள் ஏர் ஃப்ரைட் பூரியை செய்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – ஓரு கப்
தயிர் – கால் கப்
நெய் – சிறிதளவு
(கோதுமை மாவில் சிறிதளவு தயிர், தண்ணீர் மற்றும் நெய் விட்டு நன்றாக பிசைந்துகொள்ள வேண்டும். அதை அரை மணி நேரம் மூடிவைத்துவிடவேண்டும்)
மசாலா செய்ய தேவையான பொருட்கள்
கொண்டைக்கடலை – ஒரு கப் (8 மணிநேரம் ஊறவைத்தது)
டீத்தூள் – ஒரு ஸ்பூன் (கால் டம்ளர் தண்ணீரில் கொதிக்கவைத்து டிகாஷன் வடித்துக்கொள்ளவேண்டும்)
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்
மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மல்லித்தூள் – ஒரு ஸ்பூன்
சீரகத்தூள் – கால் ஸ்பூன்
மிளகுத்தூள் – கால் ஸ்பூன்
கரம் மசாலத்தூள் – கால் ஸ்பூன்
எலுமிச்சை பழச்சாறு – 1 ஸ்பூன்
மல்லித்தழை – கைப்பிடியளவு
செய்முறை
8 மணி நேரம வரை ஊறிய கொண்டக்கடலையை குக்கரில் 6 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதை ஊறவைக்கும்போது டீ டிகாஷன் சேர்த்து ஊறவைக்கவேண்டும். நீங்கள் டீத்தூளுக்கு பதில் டீ பேக்குகளாக எடுத்துக்கொண்டால், குக்கரில் அதை சேர்த்து வேகவைத்து, கடைசியில் அதை எடுத்துவிடலாம் அல்லது டீத்தூளை நேரடியாக சேர்த்தும் வேகவைத்துக்கொள்ளலாம். பின்னர் வடித்துக்கொள்ளவேண்டும் அல்லது டிகாஷன் எடுத்தும் சேர்க்கலாம். இது கொண்டைக்கடலைக்கு நிறம் கொடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
மற்றொரு கடாயில் நெய் சேர்த்து பெரிய வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவேண்டும். தக்காளி சேர்த்து நன்றாக குலையிவிட்டு, பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு, மல்லித்தழை சேர்த்து நன்றாக பச்சை வாசம் போகும் வரை வதக்கிவிட்டு, தண்ணீர் சேர்த்து மூடி வைத்து கொதிக்கவிடவேண்டும்.
இதில் வேகவைத்த கொண்டக்கடலையை சேர்த்து கொதிக்கவிடவேண்டும். அனைத்தும் சேர்ந்து நன்றாக கொதிக்கவேண்டும்.
இதனிடையே ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது நன்றாக சூடானவுடன், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு துண்டுகளாக்கி, ஒவ்வொரு துண்டாக எடுத்து, குட்டி, குட்டியாக தேய்த்து, எண்ணெயில் போட்டு பூரிகளாக பொரித்து எடுக்கவேண்டும். இரண்டையும் சேர்த்து பரிமாற சுவை அள்ளும்.
இந்த காலை உணவில் 440 கலோரிகள் உள்ளது. கொழுப்பு 14 கிராம், புரதம் 19 கிராம், கார்போஹைட்ரோட்கள் 69 கிராம் உள்ளது. இது ஊட்டச்சத்துக்களும், ஆரோக்கியமும் நிறைந்த காலை உணவாகும். எனவே இதை கட்டாயம் குடலுக்கு ஆரோக்கியம் தரும் காலை உணவாக சேர்த்துக்கொள்ளுங்கள்.