தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கஷ்மீரி பன்னீர் யக்னி; ரிச் டேஸ்ட் கொண்டது! சாப்பாத்தி, ரொட்டிக்கு செம்ம காம்போ!

கஷ்மீரி பன்னீர் யக்னி; ரிச் டேஸ்ட் கொண்டது! சாப்பாத்தி, ரொட்டிக்கு செம்ம காம்போ!

Priyadarshini R HT Tamil

Nov 25, 2024, 10:41 AM IST

google News
கஷ்மீரி பன்னீர் யக்னி செய்வது எப்படி என்று பாருங்கள்.
கஷ்மீரி பன்னீர் யக்னி செய்வது எப்படி என்று பாருங்கள்.

கஷ்மீரி பன்னீர் யக்னி செய்வது எப்படி என்று பாருங்கள்.

சப்பாத்தி மற்றும் ரொட்டி போன்றவற்றுக்கு நீங்கள் யம்மியான மற்றும் ஆரோக்கியமான ஒரு சைட்டிஷ் செய்யவேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால், கஷ்மீரி பன்னீர் யக்னியை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். சாப்பாடு சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது வித்யாசமான சுவை நிறைந்த பன்னீர் ரெசிபியாகும். இது காரம் இல்லாதது, நல்ல கிரீமியாகவும், யம்மியாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்

முந்திரி – 15

வரமல்லி – ஒரு ஸ்பூன்

சீரகம் – ஒரு ஸ்பூன்

சோம்பு – ஒரு ஸ்பூன்

மிளகு – அரை ஸ்பூன்

கிராம்பு – 4

கருப்பு ஏலக்காய் – 1

பச்சை ஏலக்காய் – 3

பட்டை – 1

வர மிளகாய் – 2

பன்னீர் – 150 கிராம்

கெட்டித்தயிர் – அரை கப்

பட்டர் – 2 டேபிள் ஸ்பூன்

தக்காளி – 1

குடை மிளகாய் – 1

பச்சை மிளகாய் – 1

இஞ்சி – கால் இன்ச் (துருவியது)

சீரகம் – கால் ஸ்பூன்

மல்லித்தழை – சிறிதளவு

செய்முறை

முந்திரியை சூடான தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவேண்டும். அது நன்றாக வெந்தவுடன், 4 துண்டு பன்னீர் மற்றும் தயிர் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயை சூடாக்கி அதில் வரமல்லி, சீரகம், சோம்பு, மிளகு, கிராம்பு, கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், பட்டை, வர மிளகாய் என அனைத்தையும் சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக வறுக்கவேண்டும். இதை ஆறவைத்து, காய்ந்த மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

அதே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து க்யூப்களாக வெட்டிய பன்னீரை சேர்த்து நன்றாக சிவக்க வறுத்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். அதில் கொஞ்சம் சூடான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வைத்துவிட்டால் அது மிருதுவாக இருக்கும். இல்லாவிட்டால் மசாலா தயாராகும் வரை வறுத்த பன்னீரை தனியாக வைத்திருக்கும்போது அது கெட்டியாக வாய்ப்பு உள்ளது.

தக்காளி மற்றும் குடை மிளகாய் இரண்டையும் க்யூப்களாக வெட்டிக்கொள்ளவேண்டும். விதைகளை முற்றிலும் நீக்கிவிடவேண்டும். இதற்கு பெங்களூர் தக்காளி நல்லது. இதையும் பன்னீர் வறுத்த கடாயிலே சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவேண்டும். இதனுடன் பச்சை மிளகாயை முழுதாகவே சேர்த்து நன்றாக வதக்கி எடுத்து அனைத்தையும் தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.

அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து, துருவிய இஞ்சி சேர்த்து வதக்கவேண்டும். இதில் அரைத்த முந்திரி பேஸ்டை சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். அரைத்து வைத்துள்ள ட்ரை மசாலாப்பொடியையும் சேர்த்து நன்றாக கலந்து. போதிய அளவு தண்ணீர் சேர்த்து மூடிவைத்து எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்றாக கொதிக்க விடவேண்டும்.

அடுத்து வறுத்து வைத்துள்ள பன்னீர், தக்காளி, பச்சை மிளகாய், குடை மிளகாய் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு, மல்லித்தழை தூவி இறக்கினால் சூப்பர் சுவையான கஷ்மீரி பன்னீர் யக்னி தயார். இதை ரொட்டி, சப்பாத்தி ஆகியவற்றுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி