முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்யப்போகும் நபரா நீங்கள்.. தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்!
Nov 01, 2024, 10:04 AM IST
முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்யப்போகும் நபரா நீங்கள்.. தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்.
முதல்முறையாக விமானத்தில் பயணம் செய்யப்போகும் நபரா நீங்கள்.. தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்துப் பார்ப்போம்.
நீங்கள் முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்கிறீர்களா? பயணம் செய்வதற்கு முன், விமான நிலையத்தில் என்ன செய்ய வேண்டும், பயணத்தின்போது எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிய சில முக்கியமான விஷயங்களை அறிந்து கொள்வது மிக அவசியமானது. இதனால் விமான நிலையத்திற்குச் சென்ற பிறகு, நீங்கள் பயப்படமாட்டீர்கள். இது குறித்த தகவல்களின் தொகுப்பு!
- டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன் பாஸ்போர்ட் புதுப்பிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதைச் சரிபார்த்துக்கொள்ளவும். உங்களுக்கு விமானம் சரியான நேரத்தில் கிடைக்குமா அல்லது ஏதேனும் தாமதம் ஏற்படுகிறதா? இல்லையெனில் ஏதேனும் விமானம் ரத்து செய்யப்பட்டால் வேறு ஏதேனும் விமான புதுப்பிப்புகள் உண்டா என்பதை அறிந்துகொள்வது நல்லது. விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன், எவ்வளவு மணிநேரத்திற்கு முன் அங்கு இருக்க வேண்டும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும். உள்ளூர் விமானப்பயணம் என்றால் குறைந்தது 2 மணிநேரத்திற்கு முன், விமான நிலையத்தில் இருக்க வேண்டும். அயல்நாட்டு விமானப் பயணம் என்றால் மூன்று மணி நேரத்திற்கு முன், விமான நிலையத்தில் இருக்க வேண்டும்.
- விமானத்தில் எவ்வளவு லக்கேஜ்களை எடுத்துச்செல்லலாம் என்பதில் கட்டுப்பாடுகள் உள்ளன. நீங்கள் பயணிக்கும் விமான நிறுவனத்தால் ஒரு நபருக்கு எத்தனை பைகள் மற்றும் என்ன எடை வரம்பு அனுமதிக்கப்படுகிறது என்பதை முன்கூட்டியே விமான டிக்கெட்டுகளில் சரிபார்க்கவும். விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன்பு உங்கள் லக்கேஜ் எடை வரம்பிற்குள் இருக்கிறதா என்று நீங்கள் வீட்டில் சரிபார்த்தால், நீங்கள் அங்கு சென்றால் எந்த பிரச்னையும் இருக்காது. இல்லையெனில், ஒரு கிலோ அதிகமாக சாமான்களை எடுத்துச்சென்றாலும், நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
விமான நிலையத்திற்குக் கொண்டுசெல்லும்போது என்ன மாதிரியான பொருட்களைத் தவிர்க்கலாம்:
- விமானத்தில் உங்கள் கையில் எடுத்துச் செல்ல ஒரு பேக் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. பாஸ்போர்ட், விமான டிக்கெட், போர்டிங் பாஸ், தொலைபேசி, லேப்டாப், பணப்பை, சார்ஜர், ஏதேனும் மருந்துகள், உங்கள் அடையாள அட்டைகள் போன்ற உங்கள் முக்கியமான பொருட்களை அதில் வைத்திருங்கள்.
- சில விமான நிறுவனங்கள் முக்கியப் பைகள் மற்றும் பிற சாமான்களில் சில வகையான பொருட்களை சோதனையில் அனுமதிக்காது. எரியக்கூடிய பொருட்கள், சில வகையான மருந்துகள், கூர்மையான பொருட்கள், பேட்டரிகள், ஊறுகாய் போன்றவற்றை தடைசெய்துள்ளன. அவற்றை முன்கூட்டியே தெரிந்து கொள்ளுங்கள்.
விமானத்துக்குள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்:
- உங்கள் இருக்கையை பின்னால் சாய்க்க விரும்பினால், முதலில் பின்புற பயணியுடைய இருக்கையைச் சரிபார்க்கவும்.
- குழந்தைகளுடன் பயணம் செய்தால், அவர்கள் ஓடாமல் இருக்க ஏதேனும் பொம்மைகளை அருகில் வைத்திருங்கள். மற்றவர்களுக்கு தீங்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
- நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்கள் என்றால், கழுத்து தலையணை, கண் முகமூடி போன்றவற்றை உங்களுடன் வைத்திருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டால், வசதியாக தூங்கலாம்.
- விமான ஊழியர்கள் பாதுகாப்பு குறித்து உங்களுக்கு தெரிவிப்பார்கள். சீட் பெல்ட் அணிவது எப்படி, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் லைஃப் ஜாக்கெட்டை எவ்வாறு பயன்படுத்துவது, ஆக்ஸிஜன் முகமூடியை எவ்வாறு எடுத்துக்கொள்வது, அவசரகால கதவுகள் எங்கே உள்ளன, அவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என்று சொல்வார்கள். அவர்கள் சொல்வதைக் கேட்க மறக்காதீர்கள்.
- உள்ளூர் விமானத்துக்குள் உள்ள கழிவறைகளில் குறைந்த அளவே நீர் உபயோகிக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் அயல்நாடு செல்லும் விமானத்துக்குள் டிஸ்யூ மட்டுமே அனுமதிக்கப்படுகிறது என்பதால் முடிந்தவரை விமான நிலையத்திலேயே தங்கள் இயற்கை உபாதைகளைக் கழித்துவிட்டுச் செல்வது நல்லது.
டாபிக்ஸ்