Vinayagar Chathurthi: ‘அப்பனே விநாயகா..’ - விநாயகருக்கு பிடிச்ச பொரிச்ச மோதகம்! - செய்வது எப்படி தெரியுமா?
Sep 06, 2024, 03:00 PM IST
Vinayagar Chathurthi: விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு படைக்கப்படும் உணவுகளில் முக்கியமானது கொழுக்கட்டை. இதனுடன் சர்க்கரை பொங்கல், சுண்டல் உள்ளிட்ட பல்வேறு உணவுகளையும் படைப்பார்கள்.
சூப்பர் சுவையில் அசத்தும் பொரிச்ச மோதகம்! விநாயகர் சதுர்த்தியன்று செய்யாவிட்டால் எப்படி?
விநாயகர் சதுர்த்தி
விநாயகர் சதுர்த்தி அல்லது கணேஷ் சதுர்த்தி இந்தாண்டு செப்டம்பர் 7ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியா முழுவதிலும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. இந்த பண்டிகை விநாயகருக்கு கொண்டாடப்படுகிறது. விநாயகர் வாழ்வில் தோன்றும் தடைகளை களைபவராகக் கருதப்படுகிறார். செல்வம் மற்றும் ஞானத்தின் கடவுளாகவும் பார்க்கப்படுகிறார். இந்த நாள் விநாயகரின் பிறந்த நாளைக் குறிக்கிறது. இது நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாப்படும். அதற்காக சிறப்பு ஏற்பாடுகளை செய்யப்படும்.
வீதிகளில் ஆங்காங்கே விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அவை சதுர்த்தி முடிந்து 3ம் நாள் அல்லது 5ம் நாள் விமரிசையாக ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். பக்தர்கள் இவற்றை வெகுவிமரிசையாக செய்து மகிழ்வார்கள் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானுக்கு படைக்கப்படும் உணவுகளில் முக்கியமானது கொழுக்கட்டை. இதனுடன் சர்க்கரை பொங்கல், சுண்டல் உள்ளிட்ட பல்வேறு உணவுகளையும் படைப்பார்கள்.
விநாயகருக்கு பிடித்த ஒன்றாக கொழுக்கட்டை கருதப்படுகிறது. வட இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியன்று பல்வேறு சிறப்பு உணவுகள் விநாயகருக்காக செய்யப்படுகிறது. லட்டு, பாசுந்தி, பூரண் போலி போன்ற இனிப்பு பண்டங்களும் செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி என்றால் ஒரு விருந்தளிக்கும் அளவுக்கு வட இந்தியர்கள் உணவுகளை தயாரிப்பார்கள். வாருங்கள் விநாயகருக்கு பிடித்த பொரித்த கொழுக்கட்டை அல்லது மோதகம் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு அல்லது மைதா மாவு – ஒரு கப்
உப்பு – ஒரு சிட்டிகை
தண்ணீர் – தேவையான அளவு
பூரணம் செய்ய தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு – முக்கால் கப்
துருவிய தேங்காய் – அரை கப்
வெல்லம் – அரை கப்
நெய் – தேவையான அளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மாவை சேர்த்து உப்பு, தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவேண்டும். அதை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும்.
பாசிப்பருப்பை வறுக்கவேண்டும். அதை ஆறியுவுடன் பொடித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் வெல்லம், பொடித்த பாசிபருப்பு பொடி மற்றும் தேங்காய் துருவல் முன்றையும் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக கிளறவேண்டும். இவையனைத்தும் திரண்டு வரும்போது, நெய் சேர்த்துக்கொண்டே கிளறினால் அடியில் ஒட்டாமல் வரும். அடுப்பை குறைவான தீயில் வைத்து கிளறவேண்டும். அப்போதுதான் இந்த பூரணம் அடிபிடிக்காமல் வரும்.
இந்த கலவையை அப்படியே எடுத்து ஆறவிட்டு, சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடாக்கி, அந்த சிறு உருண்டைகளை மாவில் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால், சூப்பர் சுவையில் மோதகம் தயார்.
பூரணத்தை போட்டு ஸ்பூனால் எல்லாப்புறங்களிலும் மாவு ஒட்டும்படி செய்து எண்ணெயில் போட வேண்டும். எண்ணெயிலும் திருப்பிவிட்டு, நன்றாக சிவந்து வரும்வரை வறுக்கவேண்டும்.
இந்த மாவுக்கரைசலில் சிறிது பச்சரிசி மாவும் சேர்த்துக்கொள்ளலாம். அதன் சுவையும் நன்றாக இருக்கும். வெறும் பச்சரிசி மாவில் கூட இதை செய்யலாம். அதன் சுவையும் அபாரமாக இருக்கும்.
இந்த பொரித்த மோதகத்தை விநாயகர் சதுர்த்தியன்று விநாயகருக்குப் படைத்தால் அவரின் முழு அருளும், ஆசிர்வாதமும் உங்கள் முழு குடும்பத்திற்கும் கிட்டும். எனவே இந்த விநாயகர் சதுர்த்தியன்று அதாவது நாளை இந்த பொரிச்ச கொழுக்கட்டையை எளிதான முறையில் இப்படி செய்து விநாயகப் பெருமானின் அருளைப் பெறுங்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்