Health Expenditure : சுகாதாரத்துக்கென ஒதுக்கப்படும் நிதி உண்மையில் அதிகரித்துள்ளதா? – ஓர் அலசல்!
Jul 15, 2024, 04:28 PM IST
Health Expenditure : சுகாதாரத்துக்கென ஒதுக்கப்படும் நிதி உண்மையில் அதிகரித்துள்ளதா என்பது குறித்து இங்கு அலசப்பட்டுள்ளது.
சுகாதார செலவீனம்
மத்திய அரசு உண்மையில் சுகாதாரத்திற்கான நிதியை 2018-19ல் இருந்து 2023-24ம் ஆண்டில் குறைத்துள்ளது.
2022-23ல் சுகாதாரத்திற்கு 78,179 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது 2023-24ல் 83,418 கோடியாக அதிகரித்ததை பார்க்கும்போது அதிக நிதி ஒதுக்கப்பட்டதாக தெரிந்தாலும் உண்மை அதுவல்ல.
கடந்த 5 ஆண்டுகளில், மொத்த பட்ஜெட்டில் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் சதவீதம் அல்லது மொத்த GDPயின் சதவீதம் என்ற அளவுகோலைக் கையாண்டால் சுகாதாரத்துறை நிதி 2018-19ல் இருந்து 2023-24(RE)ல் குறைந்துள்ளது.
2019-20 பணவீக்கத்தை கணக்கில்கொண்டால் சுகாதாரத்துறை நிதி பணவீக்கத்திற்கு ஏற்றாற்போல் உயரவில்லை.
2018-19ல் மொத்த பட்ஜெட்டில் இருந்து 2.4 சதவீதம் சுகாதாரத்திற்கு ஒதுக்கப்பட்டது 2023-24ல் 1.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.
GDP சதவீதத்தில் 2018-19ல் 0.3 சதவீதம் ஒதுக்கப்பட்டது 2023-24ல் 0.28 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பணவீக்கம்
பணவீக்கத்தை (Adjust for Inflation using wholesale price index) கணக்கில்கொண்டால், 2019-20ல் ஏறக்குறைய 65,000 கோடி என இருந்தது 2023-24ல் 65,985 கோடி என்ற அளவில் மட்டுமே உள்ளது.
பொதுவாக சுகாதாரத்துறையில் மற்ற துறைகளைக் காட்டிலும் பணவீக்கம் அதிகம் இருக்கும்.
2019-20ல் மொத்த நிதி ஒதுக்கீடு - 66042 கோடி; 2023-24ல் மொத்த நிதி ஒதுக்கீடு-83,418 கோடி.
இருப்பினும் அந்த ஆண்டுகளில் உள்ள பணவீக்கத்தை கணக்கில்கொண்டால் இந்த நிதி ஒதுக்கீடு நிச்சயம் போதுமானதல்ல.
இதில் மத்திய அரசு சுகாதாரத்துறைக்கு என தனி வரி (Health Cess) விதித்து, அதை சேகரித்த பின்னரும் சுகாதாரத்துறைக்கான மொத்த பட்ஜெட்டின் சதவீதத்தை கணக்கில்கொண்டால் 2018-19ல் 2.4 சதவீதம் நிதி ஒதுக்கியதை 2023-24ல் (RE) 1.9 சதவீதமாகக் குறைத்துள்ளது.
சுகாதார வரி
ஆனால் சுகாதாரத்துறைக்கு என வரி விதித்தால், சுகாதாரத்துக்கு செய்யப்படும் செலவுகளை அரசு அதிகரிக்கும் என்று வரி விதிக்கப்பட்ட 2018ம் ஆண்டு தெரிவித்திருந்தது. இதனால் கிராமப்புற ஏழை மக்கள் பயன்பெற முடியும் என்று தெரிவித்திருந்தது.
ஆனால் வரி மூலம் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடி ரூபாய்கள் வசூலிக்கப்பட்டாலும், சுகாதாரத்துறை எதிர்கொள்ளும் பிரச்னைகளை சமாளிக்க அந்த தொகை ஒதுக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2022-23ம் ஆண்டு மத்திய அரசின் சுகாதார செலவினங்கள், வரியில் வசூலிக்கப்பட்ட ரூ.18,300 கோடியை உள்ளடக்கியதுதான். ஆனால் நீங்கள் அந்த வரியை எடுத்துவிட்டால், மத்திய அரசின் செலவிம் ரூ.59,840 கோடி மட்டும் தான். இது கொரோனாவுக்கு முன் செலவிடப்பட்ட அளவைவிட குறைவுதான்.
2018ம் ஆண்டு வரி அறிமுகப்படுத்தப்பட்டபோது, சுகாதாரத்துறைக்கு அரசு மொத்தமாகவே 2.4 சதவீதம்தான் செலவிட்டது. அதே அளவு இப்போது செலிவிடப்பட்டிருந்தாலும், தற்போது 2023-24ம் ஆண்டுக்கு அது ரூ.1.07 லட்சம் கோடியாக இருந்திருக்கவேண்டும். ஆனால் இந்தாண்டு வெறும் ரூ.83,400 கோடி மட்டுமே செலவிடப்பட்டது. அதிலும் ரூ.18,300 கோடி சுகாதார வரியாகும்.
இந்தியாவில் ஆண்டுக்கு 60-80 லட்சம் பேர் சுகாதாரத்திற்கு தன் சொந்த செலவை பயன்படுத்த வேண்டியுள்ளதால் வறுமைக்கோட்டிற்கு கீழே தள்ளப்படும் அவலம் உள்ளது. தொடர்ந்து இதே நிலை நீடிக்கும் எனில் மக்களின் ஆரோக்கியமும் கேள்விக்குறியானும். எனவே மத்திய அரசு சுகாதாரத்திற்கு உண்மையில் அதிக நிதியை ஒதுக்க முன்வருமா?
நன்றி – மருத்துவர். புகழேந்தி.
டாபிக்ஸ்