Ginger Ajwain Tea Benefits : ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆரோக்கிய தேநீர்! கிரீன் டீயை விட பல மடங்கு ஆற்றல் நிறைந்தது!
Mar 27, 2024, 12:58 PM IST
Ginger Ajwain Tea Benefits : இதில் உள்ள மற்ற புதினா, நெல்லிக்காய் மற்றும் இஞ்சி ஆகியவையும் மருத்துவ குணங்கள் நிறைந்ததுதான். எனவே இந்த தேநீர் உங்களுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இதை பருகி நன்மை பெறுங்கள்.
மாறிவரும் வாழ்க்கை முறை, அதிகரிக்கும் மாசு ஆகியவற்றால் நாம் தினமும் ஆரோக்கியத்தை இழந்துகொண்டிருக்கிறோம். இதனால் உடலில் பல்வேறு வியாதிகளும் வருகிறது. அவற்றை தடுப்பதற்காக நாம் சில நல்ல பழக்கங்களை கடைபிடித்தாலே போதும். அதைவிட்டுவிட்டு வியாதிகள் வந்தவுடன், மருத்துவரை தேடி ஓடுவதால் ஒரு பயனும் இல்லை. எனவே சத்தான உணவுகள் மற்றும் போதிய உடற்பயிற்சிகள் ஆகியவற்றை செய்து நமது உடல் ஆரோக்கியத்தை நாம்தான பேண வேண்டும்.
தேவையான பொருட்கள்
நெல்லிக்காய் – அரை
புதினா – 10 இலை
இஞ்சி – ஒரு சிறிய துண்டு
ஓமம் – அரை ஸ்பூன்
தேன் அல்லது உப்பு – தேவையான அளவு
செய்முறை
நெல்லிக்காய், புதினா மற்றும் இஞ்சியை தட்டிவிட்டு, அதை ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
அதில் ஒரு ஸ்பூன் ஓமம் சேர்த்து நன்றாக கொதித்தவுடன், வடிகட்டி, அதில் தேன் அல்லது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பருகவேண்டும். தேவைப்பட்டால் சிறிது எலும்மிச்சை சாறு சேர்த்து பருகலாம். எதையும் கலக்கமால் கூட பருகலாம்.
இந்த தேநீர் கிரீன் டீயைவிட பலமடங்கு நன்மைகளை உடலுக்கு கொடுக்கிறது.
ஓமம் தேநீரை காலையில் பருகுவதால் உள்ள நன்மைகள்
குடல் ஆரோக்கியம்
உங்களுக்கு வாயுத்தொடர்பான பிரச்னைகள், வயிறு வலி இருந்தால் இந்த தேநீரை நீங்கள் தினமும் பருகவேண்டும். இதில் உள்ள ஓமம், உங்கள் குடலை செரிமானத்துக்கு தயார்படுத்துகிறது. இதை காலையில் வெறும் வயிற்றில் பருகினால், உங்களுக்கு அசிடிட்டி தொல்லை மற்றும் குடல் இயங்குவதில் சிக்கல் போன்றவை இருக்காது.
தொற்றுகளை தடுக்கிறது
ஓமத்தில் ஆன்டிசெப்டிக், ஆன்டிமைக்ரோபையல் மற்றும் ஆன்டிபாராசிட்டிக் குணங்கள் உள்ளது. இது சளி, இருமல், காது, வாய் என அனைத்து பாகங்களில் ஏற்படும் தொற்றை தடுக்கிறது. மழைக்காலங்களில் கண் தொடர்பான தொற்றுகள் ஏற்படும். அந்த கிருமிகளை அடித்து விரட்டும் ஆற்றலைக்கொண்டது ஓமம். எனவே தொற்றுக்களை தடுக்கவும் இது பயன்படுத்தப்படுகிறது.
சுவாசப்பிரச்னைகளுக்கு தீர்வு கொடுக்கிறது
ஓமம் உங்கள் நுரையீரல் தொண்டையை சுத்தமாக பராமரிக்க உதவுகிறது. இதனால், அந்தப்பகுதிகளில் அடைப்புகள் ஏற்படாமல் காக்கிறது. இது ஆஸ்துமா நோயாளிக்கு உபயோகமானதாக உள்ளது. சுவாச மண்டலத்தில் காற்று உட்புகும் பாதைகளை ரிலாக்ஸ் செய்து, ஆஸ்துமா நோயாளிகள் சிரமமின்றி சுவாசிக்க உதவுகிறது.
உடல் எடையை குறைக்க பயன்படுகிறது
ஓமம் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. இது உடலில் கொழுப்பு அளவை கட்டுப்படுத்துகிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து உடல் பருமனை தடுக்கிறது. நீரிழிவு மற்றும் இதய நோய் ஆகியவற்றை குறைக்கிறது. உங்கள் இதயம் நன்முறையில் நீண்ட நாட்கள் செயல்படவேண்டுமெனில், அதற்கு ஓமம் அடிக்கடி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது.
வலியை குறைக்க உதவுகிறது
ருமட்டாய்ட் ஆர்த்ரிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான வலி ஏற்படும். அவர்கள் தினமும் ஓமத்தை எடுத்துக்கொள்வது அவர்களுக்கு வலிகள் குறைய உதவும். இந்நோய் வீக்கத்தின் காரணமாக ஏற்படுகிறது. இதில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள் அதற்கு உதவுகிறது.
இதில் உள்ள மற்ற புதினா, நெல்லிக்காய் மற்றும் இஞ்சி ஆகியவையும் மருத்துவ குணங்கள் நிறைந்ததுதான். எனவே இந்த தேநீர் உங்களுக்கு பல்வேறு நன்மைகளைக் கொடுக்கிறது. இதை பருகி நன்மை பெறுங்கள்.