Exclusive : மழைக்காலத்தில் காய்ச்சல் வராமல் தடுத்துக்கொள்ளும் வழிகள் – சித்த மருத்துவர் விளக்கம்!
Nov 18, 2024, 06:00 AM IST
மழைக்காலத்தில் காய்ச்சல் தொற்றுகள் ஏற்படாமல் தடுப்பது எப்படி என்று சித்த மருத்துவர் காமராஜ் விளக்குகிறார்.
தீபாவளி முடிந்து மழையும், பனியுமான ஒரு குளிர் காலம் நிலவத்துவங்கிவிட்டது. இப்போது தொற்று கிருமிகளுக்கு கொண்டாட்டமான காலம் எனலாம். எளிதாக தொற்றும் வாய்ப்பு காற்றில் உள்ளது. நாம் அனைவரும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலமிது என்று திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் காமராஜ் மக்களை எச்சரிக்கிறார். மழைக்காலத்தில் பரவும் காய்ச்சல்கள் மற்றும் அதை தீர்க்கும் சித்த மருத்துவ தீர்வுகள் குறித்து மருத்துவர் ஒரு தொடராக இங்கு விளக்குகிறார். மழைநீர் தேங்கி நிற்பதால் அதில் டெங்கு கொசு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் டெங்கு வைரஸ் காய்ச்சல் அதிகம் பரவுகிறது. சுத்தமில்லாத தண்ணீரின் வழியே, டைஃபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை, சிறுநீரக தொற்று, உணவு ஒவ்வாமையால் வாந்தி, பேதி, காய்ச்சல் போன்றவை ஏற்பட வழிவகுக்கும்.
மழைக்காலத்தில் காய்ச்சல் வரக் காரணம்
சுகாதாரமற்ற குடிநீர் பருகுவது மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை உண்பதால் ஏற்படலாம்.
காற்றின் மூலம் பரவும் வைரஸ் நுண்கிருமிகளின் தொற்றுக்கு காரணமாகின்றன.
மழைக் காலங்களில் அதிகளவில் உற்பத்தியாகும் கொசுக்கள் காய்ச்சல் ஏற்பட காரணங்களாகின்றன.
பிற வைரஸ் தொற்றுக்கள் மூலமாகவும் பரவலாம்.
வயிறு, குடல், மலச்சிக்கல் போன்றவையே காய்ச்சல் வரக்காரணமாகும். வாதம், பித்தம், கபம் சரி செய்து சித்த மருந்துகளை வழங்கவேண்டும். முதலில் வயிற்றில் உள்ள அழுக்கை வெளியேற்ற மலமிளக்கி மருந்தை வழங்கி, வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றி பின்னர் காய்ச்சலுக்கு மருந்து கொடுக்கவேண்டும். மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கு சித்த மருத்துவம் என்ன செய்யும் என்று ஏற்கனவே இந்த தொடரில் பார்த்தோம். தற்போது காய்ச்சல்களை தடுக்கும் வழிகளை தெரிந்துகொள்வோம்.
மழைக்கால காய்ச்சல்களை தடுக்கும் வழிகள்
குடிப்பதற்கு காய்ச்சிய நீரை பருக வேண்டும்.
உணவு சமைத்து சூடு ஆறும் முன்பே உண்ண வேண்டும்.
உணவில் அடிக்கடி தூதுவளை, கண்டங்கத்திரி கீரை, சுக்கு, கொள்ளு, பனங்கற்கண்டு, மஞ்சள் தூள், மிளகுத்தூள் போன்றவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
சிற்றரத்தை, துளசி, அதிமதுரம், திப்பிலி ஆகிய மூலிகைகள் சேர்த்த ரசம் வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
தெருவோரம் விற்கும் உணவுகளை திண்பண்டங்களை வாங்கி சாப்பிடக்கூடாது.
மழைநீர் வீட்டைச்சுற்றி தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.
கொசுக்களை விரட்ட வேப்பிலை, துளசி, தும்பை, நொச்சி இலைகளை புகை மூட்டம் போடலாம்.
வீட்டின் தண்ணீர் தொட்டியை அடிக்கடி கழுவ வேண்டும்.
மொட்டை மாடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அடிக்கடி மழையில் நனையக்கூடாது.
மழையில் நனைந்தால் ஈரத்தலையுடன் இருக்கக்கூடாது.
குளிர்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட், கேக், கிரீம் பிஸ்கட்கள் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.
குழந்தைகள் பிறந்தமேனியாக இருக்கக்கூடாது.
கொசு விரட்டி சுருள்களை கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
மீறி பயன்படுத்தினால் ஆஸ்துமா நோய் தீவிரம், மூக்கடைப்பு, மூச்சு திணறல், மூக்கில் நீர் வடிதல் போன்றவை ஏற்படும்.
உணவுகளை சூடாக சாப்பிடவேண்டும்.
பழைய உணவுகள், ஆறிய உணவுகளை மழைக்காலம் பனிக்காலங்களில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
தினசரி நோய் தொற்று தடுப்பு மருந்தாக நிலவேம்பு குடிநீரை சித்த மருத்துவர் ஆலோசனை பெற்று பயன்படுத்துங்கள். மழைக்கால நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
தடுக்க உதவும் நிலவேம்பு குடிநீர் செய்முறை
5 கிராம் சூரணம் எடுத்து 240 மில்லி லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அது 60 மில்லி லிட்டராக சுண்டியதும், வடிகட்டி ஒரு வேளை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். 3 வயதுக்கு மேல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 15 முதல் 30 மில்லி லிட்டர் தரலாம். பெரியவர்கள் 60 மில்லி லிட்டர் எடுத்துக்கொள்ளவேண்டும்.
எனவே மழைக்காலங்களில் ஏற்படும் காய்ச்சல்கள் மற்றும் நோய் தொற்றுகள் ஏற்படாமல் இருக்க மேற்கண்ட வழிமுறைகளும், சித்த மருத்துவமும் பொது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் என சித்த மருத்துவர் காமராஜ் மழைக்காலமும், நோய் தொற்றுகளும் என்ற இத்தொடரை நிறைவு செய்கிறார்.