கொத்தமல்லித் தொக்கு; ஒரு வாரம் வரை கெடாது! செய்து ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள்!
Nov 26, 2024, 01:41 PM IST
கொத்தமல்லித்தழையில் செய்யும் தொக்கு செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.
கொத்துமல்லித்தழையின் நன்மைகளை தெரிந்துகொள்ளுங்கள். நீரழிவு அளவை கட்டுப்படுத்துகிறது - நீரழிவு பாதிப்புக்கான அபாயம் இருந்தால் உங்கள் உணவில் கொத்தமல்லி தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள என்சைம்கள் உடல் ரத்தத்திலுள்ள குளுகோஸ் அளவை நிர்வகிப்பதுடன், அதிலுள்ள சர்க்கரை அளவை நீக்குகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் நீரழிவு பாதிப்பானது கட்டுப்படுத்தப்படுகிறது.
செரிமானத்தை எளிதாக்குகிறது - கொத்தமல்லியில் அதிகப்படியான நார்ச்சத்துகளும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிரம்பியுள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதேபோல் வயிறு உப்புசம் ஆவது தவிர்க்கப்படுவதுடன், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. உங்களுக்கு நிறைவான உணர்வை தருவதுடன், குடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது - கொத்தமல்லியை உணவில் சேர்ப்பதால் மனஅழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகிறது. செரிமானத்தை எளிதாக்கி, உடலில் ஏற்படும் மனஅழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து நல்ல மனநிலையை ஏற்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - இதயத்துக்கு நண்பனாக திகழும் கொத்தமல்லி இலை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய் பாதிப்புக்கான அபாயம் குறைவாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது - கொத்தமல்லி இலையில் டெர்பினீன், க்வெர்செடின் மற்றும் டோகோபெரோல்ஸ் உள்பட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இவை செல்களின் பாதிப்பு ஏற்படாமல் போராடி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இவை வீக்கத்தை குறைத்து புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
கண்களுக்கு நன்மை தருகிறது - கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி, ஈ காரோடெனாய்ட்ஸ் போன்றவை இருப்பதால் உங்கள் பார்வையை கூர்மையாக்குகிறது. வயது முதிர்வின்போது பார்வைக் குறைபாடு ஏற்படுத்தும் மாகுலர் நோய் சிதைவு ஏற்படுத்துவதை தாமதப்படுத்துகிறது.
எலும்புகளை வலுப்படுத்துகிறது - கொத்தமல்லியில் கால்சீயம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதுடன், மூட்டு வலிகளிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.
தேவையான பொருட்கள்
கொத்தமல்லித்தழை – ஒரு கட்டு
வர மிளகாய் – 10
கடலைப்பருப்பு – ஒரு கப்
உளுந்தம் பருப்பு – ஒரு கப்
பூண்டு – 10 பல்
புளி – சிறு உருண்டை
உப்பு – தேவையான அளவு
பெருங்காயம் – 2 புளியங்கொட்டை அளவு
செய்முறை
கடாயில் எண்ணெய் சேர்த்து, சூடானவுடன் வர மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு மூன்றையும் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும். அடுத்து தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் விட்டு, புளியையும், பெருங்காயத்தையும் தனித்தனியாக பொரித்து எடுத்துக்கொள்ளவேண்டும்.
கொத்துமல்லியை நன்றாக கழுவி எண்ணெய்விட்டு ஈரம் போக வதக்கவேண்டும். அதனுடன் பூண்டு சேர்த்து துவையல் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து, வர மிளகாய், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, பொரித்த புளி, பெருங்காயம் இவற்றுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக பொடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.
அது நன்றாக பொடித்து வந்தவுடன், அரைத்த மல்லியை சேர்த்து மிக்சியில் அரைத்து சிறிது நேரம் உலர வைத்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். சூடான சாதத்தில் நெய்யுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
குறிப்புகள்
இந்த தொக்கை ஃபிரிட்ஜ்ஜில் வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்திக்கொள்ளலாம்.
சூடான சாதத்தில் சாப்பிட சுவையானதாக இருக்கும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு ஏற்றது.
குழம்பு வைக்க நேரமில்லாத நாட்களில் இந்த கொத்துமல்லி தொக்கு சேர்த்து சாதம் செய்துகொள்ளலாம்.
டாபிக்ஸ்