Coriander Leaves Powder : செரிமானத்தை தூண்டும் கொத்தமல்லி பொடி – தினமும் சாப்பிட சூப்பர் ரிசல்ட்!
Sep 12, 2023, 04:45 PM IST
Coriander Leaves Powder : தனியா என்று பரவலாக அழைக்கப்படும் கொத்தமல்லி இலையில் பாஸ்பரஸ், கால்சீயம், மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் ஏ,பி,சி மற்றும் கே என எண்ணற்ற ஊட்டச்சத்துகளை கொண்டதாக உள்ளது. பல விதமான உடல்நல நன்மைகளை கொண்டிப்பதால் இதன் இலை மற்றும் விதை உணவில் பயன்படுத்தப்படுகிறது.
நீரழிவு அளவை கட்டுப்படுத்துகிறது - நீரழிவு பாதிப்புக்கான அபாயம் இருந்தால் உங்கள் உணவில் கொத்தமல்லி தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள என்சைம்கள் உடல் ரத்தத்திலுள்ள குளுகோஸ் அளவை நிர்வகிப்பதுடன், அதிலுள்ள சர்க்கரை அளவை நீக்குகிறது என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால் நீரழிவு பாதிப்பானது கட்டுப்படுத்தப்படுகிறது.
செரிமானத்தை எளிதாக்குகிறது - கொத்தமல்லியில் அதிகப்படியான நார்ச்சத்துகளும், ஆன்டிஆக்ஸிடன்ட்களும் நிரம்பியுள்ளன. இவை செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அதேபோல் வயிறு உப்புசம் ஆவது தவிர்க்கப்படுவதுடன், மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. உங்களுக்கு நிறைவான உணர்வை தருவதுடன், குடலையும் ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
மனஅழுத்தம் ஏற்படுவதை தடுக்கிறது - கொத்தமல்லியை உணவில் சேர்ப்பதால் மனஅழுத்தம் ஏற்படுவது குறைக்கப்படுகிறது. செரிமானத்தை எளிதாக்கி, உடலில் ஏற்படும் மனஅழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தி, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைத்து நல்ல மனநிலையை ஏற்படுத்துகிறது.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - இதயத்துக்கு நண்பனாக திகழும் கொத்தமல்லி இலை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய் பாதிப்புக்கான அபாயம் குறைவாக உள்ளது.
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது - கொத்தமல்லி இலையில் டெர்பினீன், க்வெர்செடின் மற்றும் டோகோபெரோல்ஸ் உள்பட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளது. இவை செல்களின் பாதிப்பு ஏற்படாமல் போராடி, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் இவை வீக்கத்தை குறைத்து புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
கண்களுக்கு நன்மை தருகிறது - கொத்தமல்லியில் வைட்டமின் ஏ, சி, ஈ காரோடெனாய்ட்ஸ் போன்றவை இருப்பதால் உங்கள் பார்வையை கூர்மையாக்குகிறது. வயது முதிர்வின்போது பார்வைக் குறைபாடு ஏற்படுத்தும் மாகுலர் நோய் சிதைவு ஏற்படுத்துவதை தாமதப்படுத்துகிறது.
எலும்புகளை வலுப்படுத்துகிறது - கொத்தமல்லியில் கால்சீயம், பாஸ்பரஸ், மக்னீசியம் போன்ற தாதுக்கள் இருப்பதால் எலும்புகளின் அடர்த்தி அதிகரிப்பதுடன், மூட்டு வலிகளிலிருந்து உங்களை பாதுகாக்கிறது.
கொத்தமல்லிப்பொடி செய்ய தேவையான பொருட்கள் –
உளுந்து – 100 கிராம்
வர மிளகாய் – 12
பெருங்காயம் – சிறிதளவு
புளி – சிறிய துண்டு
எண்ணெய் – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சுத்தம் செய்தது
உப்பு – தேவையான அளவு
செய்முறை
கடாயை சூடாக்கி எண்ணெய் விட்டு காய்ந்ததும், உளுந்தை பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதை தனியாக ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவேண்டும்.
மிளகாயையும் தனியாக வறுத்து ஆற வைக்க வேண்டும்.
இவை இரண்டும் ஆறியபின் அனைத்து பொருட்களையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பான பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதில் இருந்து சிறிய உருண்டைகளை உருட்டி, ஃபிரிட்ஜில் சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதை சாதம், இட்லி, தோசை என எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு அல்லது போட்டு பிசைந்து சாப்பிடலாம். இது உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.
அலுவலகம் செல்பவர்களை இதை தயாரித்து ஃபிரிட்ஜில் வைத்துக்கொண்டாலே போதும். ஒரு வாரத்தை நீங்கள் ஓட்டிவிடலாம். இந்த உருண்டைகளை இரண்டு வாரம் வரை சேமித்து வைத்துக்கொண்டு தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
டாபிக்ஸ்