‘வெச்ச குறி சரியா? இரை விழுந்ததா?’ சேட்டன் வந்தாரா? சேட்டை செய்தாரா? வேட்டையன் விமர்சனம் இதோ!
Oct 10, 2024, 11:15 AM IST
‘த. செ. ஞானவேல் முழுக்க, முழுக்க அவருக்கான ஜானருக்கான கதையில், ரஜினியை புகுத்தி நடிக்க வைத்து இருக்கிறார். என்கவுண்டர் விவாதத்தின் பின்னணியில், நீட் தேர்வில் ஏழை மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், பின்னணில் இருக்கும் கார்ப்பரேட் பேராசையை கிழித்து தொங்க விட்டு இருக்கிறார்’
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ' ஜெய் பீம் ' புகழ் த செ ஞானவேல் இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் " வேட்டையன் ". அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், துஷாரா, பகத் பாசில், ராணா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். தமிழகத்தில் தாமதமாக ரிலீஸ் ஆவதால், கேரளா சென்று, சிறப்பு காட்சியை முடித்த கையோடு விமர்சனத்தை வழங்குகிறார் நமது சிறப்பு செய்தியாளர் கல்யாணி பாண்டியன்.
கதையின் கரு என்ன?
கன்னியாகுமரி எஸ்.பி அதிகாரியாக இருக்கும் அதியன் ( ரஜினி) என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக ரவுடிகளை அடுத்தடுத்து சுட்டுத் தள்ளுகிறார். அந்த மாவட்டத்தில், அரசு பள்ளியில் நேர்மையான ஆசிரியையாக இருக்கும் சரண்யா ( துஷாரா) நீட் தேர்வுக்கு எதிராக சில வேலைகளை பார்க்க, அதில் கோபமான தனியார் நீட் கோச்சிங் நிறுவனர் நட்ராஜ் ( ராணா) கூலிப்படை ஏவி அவரை கொடூரமாக கொலை செய்கிறார்.
அந்த வழக்கு விசாரணை தெரிந்தே தவறான முறையில் நடந்து இருக்க, அது தெரியாமல் கடைசி நேரத்தில் வந்த அதியன், அதில் சம்பந்தப்படாத ஒருவரை என்கவுண்டர் செய்து விடுகிறார். அந்த வழக்கு மனித உரிமை அதிகாரியும், நீதிபதியுமான சத்ய தேவ் ( அமிதாப்) விசாரணை குழுவிடம் செல்கிறது.
அந்த அப்பாவிக்கு நீதி கிடைக்கும் விவகாரத்தில் ஜெயித்தது காக்கிச் சட்டையா? கருப்புச் சட்டையா?.. சரண்யா கொலையின் பின்னணியில் நடந்த கார்பரேட்டின் சதி வேலை என்ன உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே வேட்டையன் படத்தின் கதை!
ரஜினி நடிப்பு எப்படி?
என் கவுண்டர் அதியனாக நடை, உடை, பாவனையில் சூப்பர் ஸ்டாராக ரஜினிகாந்த் அதிரடி காட்டினாலும், போலீஸ் அதிகாரியாக அவர் நடிப்பில் காட்டிய நிதானம், நடிகன் ரஜினியை முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது.
நீதியின் பக்கம் நிற்கும் நீதிபதியாக அமிதாப், அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கன கச்சிதமாக செய்திருக்கிறார். ஆசிரியர் சரண்யாவின் கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் காட்டிய அப்பாவித்தனமும், நேர்மையும் ஆச்சரியப்பட வைத்தது. ரஜினி உடனேயே ஜாலியாக, புத்திசாலியாக பயணிக்கும் பேட்டரி கதாபாத்திரத்தில் பகத் அடிக்கும் லூட்டிகள் சிரிப்புக்கு கேரண்டி.
மஞ்சு வாரியரின் என்கவுண்டருக்கு எதிரான மனப்பான்மை நேர்மையான மனைவிக்காக அடையாளம். போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங் காட்டியிருக்கும் மிடுக்கு, அவருக்கு எடுப்பாக இருந்தது. குறைவான இடங்கள் கொடுக்கப்பட்டது என்றாலும், ராணா முடிந்த வரை ஸ்கோர் செய்திருக்கிறார். அபிராமியின் கதாபாத்திரம் எடுபடவில்லை.
வேட்டையன் சொல்லும் நீதி என்ன?
கடந்த படத்தில், பழங்குடி மக்களுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்த த. செ. ஞானவேல் இந்தப்படத்தில் என்கவுண்டர் சரியா? தவறா?.. தாமதமான நீதியின் பலன்...? நீட் தீர்வால் ஏழை மாணவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் உள்ளிட்டவற்றை விவாதமாக எடுத்து முன் வைத்திருக்கிறார். படத்தில் என்கவுண்டருக்கு ஆதரவாக ரஜினியும், அதற்கு எதிராக அமிதாப்பும் நடக்கும் வாக்குவாதங்கள் மிக முக்கியமானவை..
குறிப்பாக, "சட்டம் கொடுப்பது நீதியா.. இல்லை தனி நபர் கொடுப்பது நீதியா? ".. " விரைவாக கிடைக்கும் நீதியே சரியான நீதி" .. " துப்பாக்கியை பயன்படுத்தும் போது, போலீஸ் அழுத்த வேண்டியது ட்ரிகரை அல்ல மனசாட்சியை" "குப்பத்து ஆட்களை நம்ப முடியாது என்றால் மாடி வீட்டு ஆட்களை நம்பலாமா?" "போலீசுக்கு முன் தீர்மானங்கள் இருக்கக்கூடாது" "மக்களுக்கு நீதியும், கல்வியும் சமமாக கிடைக்க வேண்டும் " உள்ளிட்ட வசனங்களில் இயக்குனருக்கே உரித்தான டச் இருந்தது.
ஆரம்பத்தில் ரஜினி படமாக ஆரம்பிக்கும் திரைப்படம்,.சிறிது நேரத்தில் முழுக்க, முழுக்க ஞானவேல் படமாக மாறி விடுகிறது. என்கவுண்டர் விவாதத்தின் பின்னணியில், நீட் தேர்வில் ஏழை மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள், அதன் பின்னணில் இருக்கும் கார்ப்பரேட் பணப்பேராசை அனைத்தையும் அப்பட்டமாக போட்டு கிழித்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்க முயன்று இருக்கிறார் இயக்குனர். அதனால்தான் என்னவோ சில இடங்களில் பிரச்சார நெடி கொஞ்சம் தூக்கலாக இருந்தது அது நம்மை நெழியவும் வைத்தது.
அனிருத் இசை தேவையான அளவு இருக்கிறது. ஆனால், ரசிகர்களின் கூஸ் பம்ப்ஸ் மொமன்ட்டுகளுக்கான அனிருத் டச் மிஸ்ஸிங்.. கிட்டத்தட்ட 3 மணி நேரத்தை எட்டும் படத்தில் இருக்கும் அதிகப்படியான டீ டெயிலிங் சில இடங்களில் அயர்ச்சியை கொடுக்கிறது. ரஜினியின் கண்ணாடி மொமன்ட்... ரவுடி கும்பலை தூக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளிடம் ரஜினியின் பேசும் இடங்கள் செயற்கைத்தனமாக இருந்தது.
அன்பறிவு ஆக்ஷன் ஓகே.. ஒளிப்பதிவாளர் கதிர் ரஜினியை முடிந்த அளவு சூப்பர் ஸ்டாராக காட்ட முயற்சி எடுத்து இருக்கிறார்..மொத்தத்தில் ஒரு திரில்லரான போலீஸ் இன்வெஸ்டிகேஷன் தராசில், ஒரு பக்கம் நீட் தேர்வு பிரச்சினையையும், இன்னொரு தராசில் என்கவுண்டர் சரியா தவறா? என்ற விவாதத்தையும் வைத்து நீதி முள்ளில் நெருக்க முயன்றால் அதுவே வேட்டையன் சொல்லும் நீதி!
டாபிக்ஸ்