காந்திக்கு தங்கத்தட்டு பரிசு! ஒளவையார் என்றாலே இவர் தான்! எம்ஜிஆரை விட அதிக சம்பளம்! கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள்!
Oct 11, 2024, 05:30 AM IST
தேசபக்தியும், இறைபக்தியும் ஒரு சேரக் கொண்ட கே. பி. சுந்தராம்பாள். இவர் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவரது அசாத்திய செயல்களுக்காக கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார்.
தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத கலைஞர்கள் பலர் உள்ளனர். அவர்கள் வாழ்நாளில் அளித்த அர்ப்பணிப்பு காரணமாக இன்றளவும் ஒவ்வொரு ரசிகரின் மனதிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது அளப்பறியா களப்பணியே அவர்களை நிலைநிறுத்த செய்கிறது. அந்த வரிசையில் இருப்பவர் தான் தேசபக்தியும், இறைபக்தியும் ஒரு சேரக் கொண்ட கே. பி. சுந்தராம்பாள். இவர் தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் எனப் பலதுறைகளிலும் புகழ் ஈட்டியவர். இவரது அசாத்திய செயல்களுக்காக கொடுமுடி கோகிலம் என்றும் அழைக்கப்பட்டார். 1908 ஆம் ஆண்டு இதே நாளில் (அக்டோபர் 11 ) ஈரோட்டின் கொடுமுடியில் பிறந்தார். இவரது 116 ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
நாடகம் டூ சினிமா
இளம் வயதிலேயே தந்தையை இழந்த சுந்தராம்பாள் மிகவும் வறுமையில் வாடியுள்ளார். பின்னர் ஒரு முறை இரயிலில் செல்லும் போது இவரது பாடும் திறன் கண்டு நடேசன் அய்யர் என்பவர் இவரை ஒரு நாடக கம்பெனியில் சேர்த்து விட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதனை அடுத்து நாடகங்களில் நடித்து வந்தவர் 1935 ஆம் ஆண்டு முதன் முதலாக பக்த நந்தனார் படத்தில் நந்தனார் வேடத்தில் நடித்தார். இதுவே இவரது முதல் திரைப்பிரவேசம் ஆகும்.
ஈடில்லா இடம்
இன்றளவும் சினிமா என்பது நமது ஒவ்வொருவர் மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கலைஞர்களை அவர்கள் நடித்த கதாபாத்திரங்கள் வழியாக அடையாளப்படுத்துவதே அந்த கலைஞருக்கு பெருமை அளிக்கும். அது போல ஒளவையார் என்றாலே நம் கண்களுக்கு முன் வருவது கே. பி. சுந்தராம்பாள் உருவம் தான். முருகன் சுட்ட பழமா? சூடாத பழமா? என கேட்ட போது பழம் நீயப்பா! எனப் பாடி உண்மையான ஒளவையாராகவே மாறிவிட்டார். அவ்வளவு ஏன் இவரது புகைப்படம் தான் புத்தகத்தில் ஒளவையாருக்கு பதில் இருக்கும். மேலும் அவர் ஏற்று நடித்த மற்ற பாத்திரங்களான கெளந்தி அடிகள், காரைக்கால் அம்மையார், பக்த நந்தனார் என அனைத்தும் அதற்கு ஏற்றவாறு பொருந்தி நடித்திருப்பார். இவர் நடித்தது குறைந்த கதாபாத்திரங்கள் என்றாலும் அவைகளுக்கு ஈடாக வேறு யாராலும் நடிக்க முடியாது என்ற நிலையை உருவாக்கி சென்றுள்ளார்.
சுதந்திரவேட்கை கொண்ட சுந்தராம்பாள்
இந்தியா சுதந்திர போராட்டத்தின் போது பல விழிப்புணர்வு நாடகங்கள் போட்டு மக்களிடத்தில் சுதந்திர வேட்கையை தூண்டியவர் சுந்தராம்பாள். மேலும் காங்கியரஸ் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்றார். கதர் துணி இயக்கம். தீண்டாமை ஒழிப்பு என பல சமூக கருத்துக்கள் தொடர்பாக பல பாடல்களை பாடினார். மேலும் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது 1958 ஆம் ஆண்டின் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராக பதவி வகித்தார்.
காந்தி முதல் எம். ஜி. ஆர் வரை
சுதந்திரம் தொடர்பான பிரச்சாரங்களில் இவர் பங்கேற்றதால். 1937 ஆம் ஆண்டு ஈரோட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மகாத்மா காந்தி சுந்தராம்பாள் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது தங்கத் தட்டில் உணவுக் கொடுத்தார் காந்திக்கு. சாப்பாடு மட்டும் தானா, இந்த தட்டு கிடையாது என கேட்ட காந்திக்கு அதனை பரிசளித்தார். மேலும் அவர் திரையில் பாடல்கள் பாடி வந்த காலத்திலும், நடித்து வந்த காலத்திலும் எம். ஜி. ஆரை விட அதிக சம்பளம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கருணாநிதி வசனம் எழுதிய பூம்புகார் படத்தில், அவர் கடவுள் நம்பிக்கை இல்லாத காரணத்தால் அப்படத்தில் முதலில் நடிக்க மறுத்து விட்டார். பின்னர் கருணாநிதி சமாதானப்படுத்தி அவரை நடிக்க வைத்துள்ளார்.
வைராக்கியம்
1927ஆம் ஆண்டு சுந்தராம்பாள் சக நாடக நடிகரான கிட்டப்பாவை திருமணம் புரிந்து கொண்டார். 1933 டிசம்பர் 2 இல் 28 வயதில் கிட்டப்பா காலமானார். அப்போது சுந்தராம்பாளுக்கு வயது 25. அன்றிலிருந்து அவர் வெள்ளை சேலைக் கட்டத்தொடங்கினார் மற்றும் எந்தவொரு ஆண் நடிகருடனும் சோடியாக நடிப்பதில்லை என சபதம் மேற்கொண்டார், அதைக் கடைசி வரை காப்பாற்றி வந்தார். கே.பி. சுந்தராம்பாள் செப்டம்பர் 1980 இல் காலமானார். கே. பி. சுந்தரம்பாளுக்கு இந்திய அரசு சார்பில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
டாபிக்ஸ்