‘எதுக்கும் நான் புள்ளி வைக்கல.. கமா தான்.. நான் ஒரு பப்ளிக் ப்ராப்பர்ட்டி.. யார் வேணும்னாலும்..’ வனிதா தூள் பேட்டி
Nov 30, 2024, 08:25 AM IST
நான் எதற்கும் புள்ளி வைப்பதில்லை, கமாவில் தான் என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. அது ரிலேஷன்ஷிப்பா இருந்தாலும் சரி, புள்ளி வைக்க முடியாது. புள்ளி என்பது முடிவு. நான் எந்த உறவுக்கும் புள்ளி வைக்க விரும்பவில்லை.
வைரல் ஸ்டார் என்று சமீபத்தில் அழைக்கப்படும் நடிகை, விமர்சகர், சமையல் கலைஞர், தொழிலதிபர் போன்ற பல்வேறு பட்டங்களை பெற்ற வனிதா விஜயகுமார், கலாட்டா மீடியாவுக்கு சமீபத்தில் சுவாரஸ்யமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். இதோ அந்த பேட்டி:
‘‘பெரும்பாலும் என்னிடம் செய்தியாளர்கள் கேட்கும் கேள்விகள், ஒரு தூண்டில் வீசுவதைப் போல தான் இருக்கும். ஆனால், சிரித்துக் கொண்டு தான் என்னை நோக்கி கேள்விகள் வரும். ஆனால், அவர்கள் அனைவரும் என் மீது அன்புள்ளவர்களாக இருக்கின்றனர். இன்றைக்கு நான் வெற்றி பெற்ற பிறகு மட்டும் அவர்கள் என்னுடன் இல்லை. நான் கஷ்டப்பட்டு, போலீஸ் ஸ்டேஷன் வாசல் ஏறிய போது கூட, மீடியா தான் எனக்கு துணையாக இருந்தது. நான் ஓப்பனாக பேசுவது, அவர்களுக்கும், எனக்கும் பிடித்திருக்கிறது.
கல்யாண சாப்பாடு போடுறேனா?
ரியாலிட்டி ஷோவில் என்னிடம் கல்யாண சாப்பாடு எப்போ போடுவீங்க என்று ஒருவர் கேட்டது பெரிய பேசு பொருளானது. சினிமாவில் ஒரு சிலரிடம் தான் இந்த கேள்வியை கேட்க முடியும். நடிகர் பிரசாந்தை பார்த்தால், இந்த கேள்வியை கேட்பார்கள். அதே போல சல்மான் கானிடம் கேட்பார்கள். சிம்பு வரைக்கும் அந்த கேள்வி இருக்கும். நீங்கள் சிங்கிளா இருந்தா, இந்த கேள்வி வரத்தான் செய்யும். முந்தைய வாழ்க்கையை விட்டுவிடுங்கள், தற்போது நாம் எப்படி இருக்கிறோம் என்பதை வைத்து தான் இந்த கேள்வி கேட்கப்படுகிறது.
நமக்கு என்று ஒரு கணவரோ, துணைவரோ இல்லை என்றால், பொதுமக்கள் நம்மை தனி மனிதராக தான் பார்க்கிறார்கள். நம் மீது உள்ள ஒரு அன்பில் தான், அப்படி கேட்கிறார்கள். மற்றபடி, கிண்டலாக அதை எடுத்துக் கொள்ள முடியாது. அதை உரிமையாக தான் எடுத்துக் கொள்ள முடியும். என்னிடம் அந்த கேள்வியை எழுப்பியது தொகுப்பாளர் பிரியங்கா தான். நல்ல துணை எல்லாருக்கும் கிடைப்பதில்லை. அது ஒரு ஆசிர்வாதம், திடீர்னு அமையும். அதை சொல்ல முடியாது. ஜாலியா ஒரு அக்காவிடம், தங்கையிடம் பேசுவதைப் போல தான், நானும் பிரியங்காவும் பேசிக் கொண்டோம்.
என் வாழ்க்கையில் புள்ளியே கிடையாது
நான் எதற்கும் புள்ளி வைப்பதில்லை, கமாவில் தான் என் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. அது ரிலேஷன்ஷிப்பா இருந்தாலும் சரி, புள்ளி வைக்க முடியாது. புள்ளி என்பது முடிவு. நான் எந்த உறவுக்கும் புள்ளி வைக்க விரும்பவில்லை. நான் கல்யாணமே பண்ண மாட்டேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன். நாம எந்த வயதில் இருந்தாலும், நான் என்ன அறிவிக்கப் போறேன் என்று மக்கள் எதிர்பார்ப்பதையே நான் ஆசிர்வாதமாக தான் பார்க்கிறேன். ‘இது கிடையாது.. இது முடிஞ்சு போச்சு’ என்று எதையும் நான் கூறமாட்டேன்.
நான் எப்போதும் என் மனதில் எதையும் தேக்கி வைத்திருக்க மாட்டேன். என்றோ ஒரு நாள் என்னைப் பற்றி ஒருவர் பேசிவிட்டார் என்பதற்காக அவர்களைப் பற்றி மனதில் வஞ்சம் வைத்திருப்பவள் நான் இல்லை. கடவுளுக்கு ஒரு திட்டம் இருக்கிறது. என் மகனின் திரைப்பட பயணமும் அப்படி தான். எனக்கு என்று ஒரு போராட்டம் இருந்தது. அதை கடந்து தான், நான் இங்கு வந்திருக்கிறேன். அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். என்னையும், என் புள்ளையையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
என் மகன் விஜய் மாதிரி
எவ்வளவு பெரிய பையனாக இருந்தாலும் அவன் என் குழந்தை. அவன் சின்ன வயசிலேயே விஜய் ரசிகன். விஜய் மாதிரி தான் அவன் ஃபெர்பார்ம் பண்ணுவான். அவன் மிகவும் அழகானவன். என் பிரார்த்தனை வீண் போகாமல், அவன் சினிமாவுக்கு வந்துள்ளார். அவனுக்கு அம்மா முக்கியமில்லை. அம்மா தான் அவனுக்கு எல்லாமே கொடுத்தது. இன்று அவன் நிற்கிறான் என்றால், என்னுடைய பங்களிப்பு பெரிதாக உள்ளது. நான் போராடி வந்துவிட்டேன். இனி அவன் தான் போராடி மேலே வரவேண்டும்.
ஜோவிகாவை நான் நடிகை ஆக்க வேண்டும் என்று நான் நினைத்ததில்லை. நானே இந்த துறையை விட்டு வெளியே வந்தவள், நான் ஏன் என் குழந்தையை அங்கே தள்ளப் போகிறேன். அவள் விரும்புகிறாள், அதற்கு உதவ வேண்டியது தாயாக என் கடமை. சீக்கிரம் கல்யாணம் பண்ணி செட்டில் ஆனது தான், நான் சினிமாவில் செய்த பெரிய தவறு. நான் செய்த தவறை, இன்றைய தலைமுறை செய்யாது.
எனக்கு மக்களிடம் கிடைக்கும் அன்பு, அபரிவிதமானது. நான் ஒரு பப்ளிக் ப்ராப்பர்ட்டி என்று நினைக்கிறேன். அதனால் அனைவரும் என்னைப் பற்றி முன்வந்து பேசுகிறார்கள். வைரல் ஸ்டார் வனிதா என்று அழைக்கிறார்கள். நான் யாரிடமும் அப்படி போட சொல்வதில்லை. மற்றவர்கள் அதை பயன்படுத்தும் போது, நான் யாரையும் தடுக்கப் போவதில்லை.
டாபிக்ஸ்