Tirupur Subramaniam:பென்ஸ் காரில் வந்து மேடையில் சாதி பற்றி பேச்சு..இது உங்க டேக்லைனா? திருப்பூர் சுப்பிரமணியம் காட்டம்
Aug 29, 2024, 09:56 PM IST
மேடைக்கு மேடை பிற்படுத்தப்பட்டவர்கள் என சொல்லி கொள்பவர்கள், சாதி பற்றி பேசுபவர்கள் பென்ஸ் காரில் வருகிறார்கள். விளம்பு நிலை மக்கள் பற்றி சினிமா எடுக்கும் நீங்கள் விளிம்பு நிலை வாழ்க்கையா வாழ்கிறீர்கள் என திருப்பூர் சுப்பிரமணியம் காட்டமாக பேசியுள்ளார்.
தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கலட்டா மீடியாவுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கோட் படத்தின் ரிலீஸ் குறித்து பேசியுள்ளார்.
இந்த பேட்டியில் பிரமாண்ட படங்கள், டாப் ஹீரோக்களின் படங்கள் சோலோவாக ரிலீஸ் ஆவது பற்றி பேசும்போது,
"இப்போதெல்லாம் இடைவேளை வரை நல்ல கதையுடன் படத்தை எடுக்கிறார்கள். இடைவேளைக்கு பின் சாதி ரீதியான படமாக மாறுகிறது. இது மக்களுக்கு பிடிக்காமல் போகிறது.
மக்கள் நன்கு படித்தவர்கள். என்னிடம் இண்டர்வியூ எடுப்பவர்களிடம் நீங்கள் என்ன சாதி என்ற நான் கேட்டது கிடையாது. பையத்திகாரன் தான் அதை செய்வான். அந்த மாதிரி காலத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
பென்ஸ் காரில் வந்து பிற்படுத்தப்பட்டவர்கள் என பேசுகிறார்கள்
அப்புறம் நீங்களாகவே மேடை ஏறி நாங்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று கூறுகிறீர்கள். உங்களுக்கு எதுவும் லேபிள் இருக்கிறதா? அப்படி பேசுபவர்கள் பென்ஸ் காரில் வந்து இறங்குகிறார்கள். மூன்று கோடி ரூபாய் காரில் வந்து இறங்கி மேடைக்கு மேடை பேசுகிறார்கள்.
சினிமாவில் பிற்படுத்தப்பட்டவர்கள் வாழ்க்கையை காட்டுகிறீர்கள். நீங்கள் விளம்பு நிலை வாழ்க்கையா வாழ்கிறீர்கள். பணம் இருக்கிறவங்க முற்படுத்தப்பட்டவன், பணம் இல்லாதவன் பிற்படுத்தப்பட்டவன். இதுதான் எப்போதுமே முடிவு செய்கிறது.
சாதாரணமாக விளம்பு நிலையில் இருக்கிறவன் மேடை ஏறி பேசினால் இவர்களே உட்கார வைத்துவிடுவார்கள். பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஜெட் விமானத்தில் வந்து சாதி பற்றியும். பிற்படுத்தவர்கள் பற்றியும் ஏன் பேசுகிறார்கள். இதை சினிமாவுக்கு கொண்டு வர வேண்டாம். ஏனென்றால் இதுவொரு தொழில்.
வாழை போன்ற படங்கள் ஓட வேண்டும்
வாழை படத்துக்கு பெரிதாக ஓபனிங் இல்லை. வாழை படத்தில் யார் நடித்துள்ளார்கள் என்பதே தெரியாது. அந்த படத்தின் நடிகர்கள் பற்றி யாருக்குமே தெரியாது. சொல்லப்போனால் துணை நடிகர்கள் கூட பிரபலமானவர்களை நடிக்க வைக்கவில்லை.
ஆனால் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த மாதிரி படங்கள் வெற்றி பெற்றால் தயாரிப்பாளர்களுக்கு லாபம், இன்டஸ்ட்ரிக்கு நல்லது.
திரையரங்கு உரிமையாளர்களுக்கு நல்ல லாபம். அவர்களுக்கு 50 சதவீதம் வரை கிடைக்கும். ஆனால் பெரிய படங்களை பொறுத்தவரை 75 சதவீதம் எடுத்துக்கொள்கிறார்கள். மீதம் எங்களுக்கு பெரிதாக கிடைக்காது.
ரூ. 300 கோடி பட்ஜெட் படங்களில் 80 சதவீதம் வரை நடிகர்கள், டெக்னீசியன்கள் சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் எங்களுக்கு லாபம் எதுவும் கிடைக்காது. வாழை போன்ற படங்கள் பெரிய அளவில் ஓடினால் இன்டஸ்ட்ரி வலுவடையும்" என்று பேசியுள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கும் வாழை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை கடந்த வாரம் வெளியானது.
சிறுவயதில் தான் சந்தித்த அனுபவங்களின் தொகுப்பை கதையாக மாற்றி, இந்த படத்தை உருவாக்கியுள்ளார். விமர்சக ரீதியாக பாராட்டை பெற்ற இந்த படம், ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
பரிட்ச்சியமான நடிகர்கள் யாரும் நடித்திராத நிலையில், வாழை திரைப்படம் முதல் வார முடிவிலேயே ரூ. 8.8 கோடி வசூலித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்