Mari selvaraj: எனக்கும் இன்னமும் அந்த பழைய நினைவுகள்தான்.. படங்களில் பிளாக் அண்ட் ஒயிட் ஏன்? - மாரி செல்வராஜ் பேட்டி!
Mari selvaraj: எனக்கு இன்னமும் பழைய நினைவுகள்தான் ஞாபகம் இருக்கிறது. புதியதாக நான் இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லை. நான் புதிதாக வாழ்கிறேன் என்று கூறினால், இப்போது என்னுடைய பிள்ளைகளோடு வாழும் வாழ்க்கைதான் என்னுடைய புதிய வாழ்க்கை. - மாரி செல்வராஜ் பேட்டி!
இயக்குநர் மாரில்செல்வராஜின் படங்களின் போஸ்டர்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை பெரும்பாலும் பிளாக் அண்ட் ஒயிட்டாகவே இருக்கும். அதற்கான காரணம் குறித்து மாரிசெல்வராஜ் அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடிக்கும்.
இது குறித்து அவர் பேசும் போது, “எனக்கு பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடிக்கும். எனக்கு இன்னமும் பழைய நினைவுகள்தான் ஞாபகம் இருக்கிறது. புதியதாக நான் இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லை. நான் புதிதாக வாழ்கிறேன் என்று கூறினால், இப்போது என்னுடைய பிள்ளைகளோடு வாழும் வாழ்க்கைதான் என்னுடைய புதிய வாழ்க்கை.
புதிதாக வாழும் இந்த வாழ்க்கையில் கூட, நான் அவர்களுடன் பழைய கதைகளைதான் பேசிக் கொண்டிருக்கிறேன். பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடித்ததற்கான காரணம் என்னவென்றால், அம்மா அப்பாவின் போட்டோ ஒன்று வீட்டில் இருந்தது. அது பிளாக் அண்ட் ஒயிட்டாக இருந்தது. அது ஒன்று தான் அவர்களிடம் இருந்த ஒரே போட்டோ.
நிறமும், முகமும் என்னுடன்
அந்த போட்டோவை சிறுவயதில் பார்த்து, பார்த்து அதில் இருக்கும் நிறமும், முகமும் என்னுடன் மிகவும் கனெக்ட் ஆகிவிட்டன. அதனால் நான் நிறங்கள் அடங்கிய விஷயங்களை பார்க்கும் போது எனக்கு அதில் பெரிதாக ஆர்வமே இல்லை.
நாம் நிறங்கள் கொண்ட உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் ஏதோ ஒன்று என்னுடைய கதையை ஞாபகப்படுத்துவதற்கு, எனக்கு உதவி செய்வதற்கு, அந்த பிளாக் அண்ட் ஒயிட் எனக்கு உதவுகிறது. என்னுடைய வீட்டில் என்னுடைய குழந்தைகளின் புகைப்படங்கள் பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கின்றன.
அந்த புகைப்படத்தை நான் பார்க்கும் பொழுது, அந்த புகைப்படத்தை எடுத்த நாளன்று அவள் என்ன செய்தாள் என்பது அப்படியே என் நினைவுக்கு வந்து விடும். ஆனால் அதை அப்படியே கலரில் போட்டால் அதன் பெரும்பான்மையான நினைவுகளை மறந்து விடுகிறேன். சினிமா இவ்வளவு பெரிய விஷயமாக முன்னேறி வளர்ந்த பின்னும், சில விஷயங்களை நாம் கடத்துவதற்கு பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தைதான் நாம் தேர்ந்தெடுக்கிறோம்.” என்று பேசினார்.
பா.ரஞ்சித் பேச்சு
வாழை திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “மாரி செல்வராஜ் போன்று வலிநிறைந்த படங்களை எடுக்கும் பொழுது அதைப்பார்த்து சோகமாக விமர்சனம் செய்யும் நபர்கள், கர்ணன் படத்தில் எதிர்த்து அடிக்கும் பொழுது அவன் வன்முறையை பெருமையாக காட்ட முயற்சிக்கிறான் என்று விமர்சனம் செய்கிறார்கள். அப்படி என்றால் நாங்கள் எப்படிப்பட்ட படங்களை தான் எடுக்க வேண்டும்.
மிகச் சிறந்த படம்
மாரி செல்வராஜ் இயக்கிய படங்களில் பரியேறும் பெருமாள் தான் மிகச் சிறந்த படம் என்று பலர் கூறுகிறார்கள். அப்படியானால் கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்கள் மொக்கை படங்களா? ஏனென்றால் அந்த படங்களில் கதாநாயகன் திருப்பி அடிக்கிறான். அவன் ஏன் திருப்பி அடிக்கிறான். அந்தச் சூழ்நிலையை இந்த சமூகம் ஏன் அவனுக்கு உருவாக்கி கொடுத்திருக்கிறது.
அந்த கேள்வியை நீ உன்னிடம் எப்போது கேட்டுக் கொள்ளப் போகிறாய். அப்படி என்றால், நீ என்னை கொடுமைப்படுத்தி இருக்கிறாய், நான் கவலையாக இருக்கிறேன் என்று உன் மனதை வருடி நான் சொல்லும்போதுதான், நீ இறங்கி வருவாயா என்ற கேள்வி இங்கு விழுகிறது. அதை உடைத்து தான் மாரி செல்வராஜ் மாமன்னன், கர்ணன், வாழை உள்ளிட்ட படங்களை எடுத்து இருக்கிறான்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்