Rajini: என் நண்பன்போட்ட சோறுநிதமும் தின்னேன் பாரு: வெளியானது கூலி படத்தில் ரஜினி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்!
Sep 02, 2024, 08:26 PM IST
Rajini: என் நண்பன்போட்ட சோறுநிதமும் தின்னேன் பாரு.. வெளியானது கூலி படத்தில் ரஜினி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறித்த செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Rajini:நடிகர் ரஜினி 171ஆவதாக நடிக்கும் கூலி திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்தின் பெயரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைத்து, சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் திரைப்படத்தில் ஹீரோவாக ரஜினிகாந்த் நடித்து இருக்கிறார். இப்படம் ரஜினிகாந்தின் திரை வரிசையில் 171ஆவது படமாக வருகிறது. இப்படத்தில் சண்டைக் காட்சிகளை அன்பறிவ் செய்வதாக அறிவிக்கப்பட்டது.
கூலி திரைப்படத்தில் ரஜினியை வேறுவிதமாக காட்டிய லோகேஷ் கனகராஜ்:
படக்குழு, ரஜினிகாந்தின் 171ஆவது படம் குறித்த போஸ்டரை மார்ச் 28ஆம் தேதி வெளியிட்டது. அதில் ரஜினிகாந்தின் 171ஆவது படத்தின் டைட்டிலை, ஏப்ரல் 22ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்து இருந்தது. அப்போது வெளியிடப்பட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கோல்டு கைக்கடிகாரங்களை, விலங்குபோல் மாட்டி, கூலிங் கிளாஸ் அணிந்து சிரித்த முகத்துடன் இருக்கிறார். அந்த ஸ்டில் ரசிகர்கள் பலரை ஈர்த்தது.
மேலும் படத்தில் கடிகாரத்துக்கு முக்கியப் பங்கு இருப்பதை சொல்லாமல் சொன்னது. அதன்பின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம், சொன்னதேதியில் வெளியிட்ட டீஸரில், அப்படத்தின் பெயர் ‘கூலி’ என அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
கூலி திரைப்பட டீஸர் வசனம்:
மேலும், ரஜினிகாந்த், ‘கூலி’ திரைப்படத்தின் டீஸரில், தனது 'ரங்கா’ படத்தில் பேசிய பழைய வசனத்தைப் பேசியுள்ளார். அதாவது,‘’அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள், தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு;
அடப்பாவி என்பார்கள், தப்பாக நினைக்காதே;
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே;
சோறு உண்டு;
சுகம் உண்டு;
மது உண்டு;
மாது உண்டு;
மனம் உண்டு என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு போடா’’ என்னும் பட வசனத்தை மாஸாகப் பேசியுள்ளார். இந்த வசனம் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியது. இதற்கிடையே படத்தில் தனது இசையைப் பயன்படுத்தியதாக, இளையராஜா தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸிடம் காப்புரிமை கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். இதனால் இடையில் இப்படம் குறித்த செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
நல்ல வசூலைத் தருமா கூலி திரைப்படம்:
சமீபத்தில் ரஜினிகாந்த் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம், ஜெயிலர். இப்படம் உலகளவில் ரூ.650 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அதேபோல், லோகேஷ் கனகராஜ் கடைசியாக இயக்கிய லியோ திரைப்படம் ரூ.612 கோடி வசூலும், நடிகர் கமல்ஹாசனை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘விக்ரம்’ திரைப்படம் ரூ.500 கோடி வசூலையும் எட்டியது. இந்நிலையில் ’கூலி’ படத்திலும் வசூல் எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கியுள்ளது.
லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருமா கூலி திரைப்படம்?:
இந்நிலையில் லியோ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில், நடிகர் விஜய்க்கு போன் செய்து, நடிகர் கமல்ஹாசன் பேசுவதுபோல் காட்சிகள் இடம்பெற்று, லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் அப்படம் வந்தது. இந்நிலையில், தலைவர் 171 படமும் ரஜினிகாந்தின் படமாக வருமா, அல்லது லோகேஷ் கனகராஜின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருமா எனவும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
’’விக்ரம்’’ பட டைட்டில் டீஸரில் ஆரம்பிக்கலாங்களா என வசனத்தினை வைத்த லோகேஷ் கனகராஜ், லியோ பட டைட்டில் டீஸரில் ’’ப்ளடி ஸ்வீட்’’ என்றார். இந்நிலையில் கூலி திரைப்படத்தில், முடிச்சுடலாமா என ரஜினியை வசனம் பேசவைத்துள்ளார்.
வெளியான கூலி திரைப்பட கதாபாத்திரங்களின் பெயர்:
கூலி திரைப்படத்தில் தென்னிந்திய நடிகர்கள் பலரும் நடித்திருக்கின்றனர். மஞ்ஞும்மல் பாய்ஸ் படம் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்த மலையாள நடிகர் செளபின் சாஹீர் தயாள் என்னும் கதாபாத்திரத்திலும், தெலுங்கின் முன்னணி நடிகர் நாகர்ஜூனா சைமன் என்னும் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். அதேபோல், நடிகர் கமல்ஹாசனின் மூத்தமகள் ஸ்ருதி ஹாசன் பிரீத்தி என்னும் கதாபாத்திரத்திலும், நடிகர் சத்யராஜ் ராஜசேகர் என்னும் கதாபாத்திரத்திலும், முன்னணி கன்னட நடிகர் உபேந்திரா, காளீஸா என்னும் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றனர். குறிப்பாக ரஜினிகாந்துக்கு தேவா என்னும் கதாபாத்திரப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தேவா என்பது தளபதி படத்தில் ரஜினி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.